செய்திகள்

சக்ரா படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை...

DIN

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: 

நடிகர் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற திரைப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ. 8,29,57,468 தொகையைத் திரும்பத் தருவதாக கூறி, நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்தார். ஆனால் விஷால் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஆனந்தன் என்பவர் எங்கள் நிறுவனத்திடம் ஒரு கதையை சொல்லி அதை திரைப்படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடவும்  திட்டமிட்டுள்ளனர். எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ. 8.29 கோடியை திரும்பத் தராமல் சக்ரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மேலும் எங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு தயாரிப்பாளருக்கு படமெடுத்த ஆனந்தன் உத்தரவாதத் தொகையாக ரூ.1 கோடியை செலுத்த உத்தரவிட வேண்டும் என கோரி மற்றொரு வழக்கையும் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன் தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை சக்ரா என்ற பெயரில் வேறு படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, சக்ரா திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை, சக்ரா திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சக்ரா படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT