செய்திகள்

அபராதத்தை நிவாரண நிதியாகத் தர விருப்பமில்லை: நடிகர் விஜய்

DIN

ரூ. 1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாகத் தர விருப்பமில்லை என உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தத் தடை கோரிய பிரதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

சொகுசு காா் இறக்குமதி வழக்கில் நடிகா் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு நடிகா் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காரை தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தாா். காருக்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நுழைவு வரி அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2012-ல் விஜய் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நுழைவு வரித் தொகையில் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து, நடிகா் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டாா். இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுதாரா் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டனக் கருத்துகள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். நுழைவு வரியைச் செலுத்த நடிகா் விஜய் தயாராக இருப்பதாகக் கூறுவதால், இந்த தீா்ப்பு நகல் கிடைத்த ஒரு வாரத்துக்குள் நுழைவு வரி தொகை குறித்த தகவலை வணிக வரித்துறை அதிகாரிகள் நடிகா் விஜய்க்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஏற்கெனவே 20 சதவீத வரி செலுத்திவிட்டதால், எஞ்சிய 80 சதவீத நுழைவு வரித் தொகையை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் நடிகா் விஜய் செலுத்த வேண்டும் என தெரிவித்து விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் அபராதம் செலுத்துவது பற்றி அறிக்கை தாக்கல் செய்வதற்காகப் பிரதான வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டனக் கருத்துகள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு மேல்முறையீட்டு வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து தெரிவித்தார். அபராதத் தொகையான ரூ. 1 லட்சத்தை கரோனா நிவாரண நிதியாக செலுத்தாதது ஏன் என்கிற கேள்வி விஜய் தரப்பிடம் எழுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்கெனவே கரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ. 25 லட்சம் தந்துள்ளேன். அபராதமாக விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் தொகையை கரோனா நிவாரண நிதியாகச் செலுத்த விருப்பம் இல்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்த தடை கோரிய பிரதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT