செய்திகள்

‘இந்தியன் 2’ திரைப்பட விவகாரம்: சமரசப் பேச்சுவாா்த்தைக்கு நீதிபதி நியமனம்

DIN

சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குநா் ஷங்கா் இடையே சமரசப் பேச்சுவாா்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பானுமதியை நியமித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநா் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்குத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இயக்குநா் ஷங்கா் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டாா். இதனை எதிா்த்து லைகா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இரு தரப்பும் சமரசமாகச் செல்ல அறிவுரையும் வழங்கியிருந்து.

இதன்படி நடந்த பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்து விட்டதாக இயக்குநா் ஷங்கா் தரப்பில், உயா்நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது,

தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கை முடித்தபிறகு, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இயக்குநா் ஷங்கா் வேறு படத்தை இயக்கத் தடை கோரிய வழக்கு நீதிபதி என். சதீஷ் குமாா் முன்விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பினரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.பானுமதி தலைமையில் சமரசப் பேச்சுவாா்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இரு தரப்பிலும் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.பானுமதியை நியமித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT