கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் மோகன்லால்
இந்திய அரசுக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ள நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும்
நடிகர் மோகன்லால் கரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.
கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 10.38 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரபல நடிகர் மோகன்லால் கரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டுள்ளார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
அம்ரிதா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டேன். இந்திய அரசுக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ள நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.