விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமானவர் கவின். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டியுடன் நட்பு, லாஸ்லியாவுடன் காதல் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். அவர் மீது விமரிசனங்கள் எழுந்தாலும் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் குறையவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நடித்துள்ள லிஃப்ட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தப் படம் விமரிசன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தையடுத்து கவின் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இணையத் தொடர் ஒன்றில் ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தி ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் படத்தில் கவின் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.