செய்திகள்

40வது ஆண்டில் கமல்ஹாசன் - ஸ்ரீதேவியின் 'மூன்றாம் பிறை'

பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி இணைந்து நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  

DIN

பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி இணைந்து நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

தமிழ் சினிமாவில் தலைமுறை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது மூன்றாம் பிறை. குறிப்பாக இந்தப் படத்தின் இறுதிக்காட்சி கடினமான இதயம் கொண்டோரையும் கலங்க செய்யும். ''விஜி, சீனு விஜி...'' என ஸ்ரீதேவிக்கு தன்னை நினைவுபடுத்தும் விதமாக கமல்ஹாசன் மேற்கொள்ளும் முயற்சிகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.  

கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் நடிப்பு, இளையராஜவின் இசை, பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவும் இயக்கமும் என அனைவரின் பங்களிப்பும் அளப்பரியது. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகராக கமல்ஹாசனும், சிறந்த ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திராவும் தேசிய விருதை பெற்றனர்.

படம் பார்த்த அனைவரும் ஸ்ரீதேவிக்குதான் தேசிய விருது கிடைக்கும் என்று நினைக்க, மாறாக கமல்ஹாசனுக்கு விருது கிடைத்தது. கமல்ஹாசனின் நடிப்புதான் ஸ்ரீதேவியின் வேடத்தை மக்களுக்கு நம்பும்படி செய்தது என்பதால்தான் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டதாகக் கூறுவர். 

இந்தப் படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான் கவியரசு கண்ணதாசனின் கடைசிப் பாடல். 'உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே' என்ற கண்ணதாசனின் வரிகள் படத்தின் இறுதிக்காட்சியை முன் கூட்டியே மக்களுக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது. ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் படம் கொண்டாடப்பட்டது. 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு இதுதான் முதல் படம். சிறந்த படமாக தேசிய விருதுகளை குவித்த ஒரு படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெறுவது என்பது எப்பொழுதாவது நடைபெறும்.

விநியோகிஸ்தர்களால் வாங்க மறுக்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் 1 ஆண்டுக்கு மேலாக ஓடியது.  இந்தப் பட பாதிப்பில் நிறைய படங்கள் உருவாகியுள்ளது. இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு இந்தப் படம் முன் மாதிரியாக இருந்து வருகிறது. ஆனால் மூன்றாம் பிறையின் தரத்தை எந்தப் படமும் எட்டவில்லை என்பதுதான் உண்மை. மூன்றாம் பிறை 40 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

SCROLL FOR NEXT