செய்திகள்

பலமுறை பாலியல் தொல்லை.. இசைநிகழ்ச்சியால் குவியும் புகார்கள்!

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இசைநிகழ்ச்சி நடைபெற்றபோது உள்ளே நுழைய முடியாமல் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர். அந்த நேரத்தில், இளம் பெண்களிடம் சிலர் பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்ததாகத் தெரிகிறது. இதை சிலர் கண்டித்தாலும்  பெரும்பாலான பெண்கள் அமைதியாக அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதில் ஒரு ரசிகை, “நான் அண்ணா என்று ஒருவரை அழைத்து வெளியேறுவதற்கான வழியைக் கேட்டேன். என்னைக் கூர்ந்து கவனித்தவர், திடீரென தன் கைகளை என் மார்பில் வைத்தார். அந்தக் கணத்தில் அப்படியே உறைந்துவிட்டேன். என்னால் ஒரு அங்குலம் கூட நகரமுடியவில்லை. பலமுறை இந்த மாதிரியான சம்பவம் நடந்தது.’ எனப் பதிவிட்டுள்ளார்.

தன் மகளுடன் நிகழ்ச்சியைக் காண சென்ற தாய் ஒருவரும், “இசையைக் கேட்கத்தான் சென்றோம். ஆனால், என் மகள் மூலம் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்து விட்டார்கள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், சில பெண்களும் இதேபோன்ற அனுபவத்தையே தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

மனித நேயம்...

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT