அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வரும் த்ரிஷா மீண்டும் திரையுலகை ஆளத் தொடங்கிவிட்டார்.
கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது.
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.
அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.
விஜய்யின் லியோ படத்தில் ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் பிஷியாக இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே கதாநாயகியை மையமாக கொண்ட ‘தி ரோடு’ திரைப்படம் மற்றும் ‘பிரிந்தா’ இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் படக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கமல்ஹாசனின் 234-வது படத்துக்கும், தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள அவரது 50-வது திரைப்படத்துக்கும் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
விஜய், அஜித், மோகன் லால், கமல்ஹாசன், தனுஷ் என அடுத்தடுத்து இந்திய சினிமாவின் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா, தமிழ் சினிமாவில் மீண்டும் தவிர்க்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளார்.