மாமன்னன் அன்அப்போஸ்ட்! போட்டியே இல்லாத ஆட்டம்!!
தமிழ்நாட்டில் இந்த வாரம் உதயநிதியின் மாமன்னன் தவிர வேறெந்த படமும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் - 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, சினிமா வட்டாரங்களில் உதயநிதி குறித்து சில புலம்பல்களும் கேட்கத் துவங்கியிருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் உதயநிதியின் சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் முன் எப்போதும் இல்லாத பெரிய பலத்துடன் எழுந்தது.
இதனால், தமிழில் தயாரான சிறிய, பெரிய பட்ஜெட் கொண்ட கிட்டத்தட்ட பத்தில் எட்டு படங்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடையே பேசி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது.
முக்கியமாக, விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய வசூலைக் கண்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ், அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் தயாரான ‘வாரிசு’ படத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால், விஜய் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதும் ‘துணிவு’ திரைப்படத்தைக் கைப்பற்றி வைத்திருந்த உதயநிதி, அப்படத்தை அதிக திரைகளில் வெளியிட திட்டமிட்டார்.
பிரச்னை கைமீறிப் போவதைக் கண்ட விஜய் ஒருகட்டத்தில் உதயநிதியின் வழிக்கு வந்தார். அதன்படி சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனமே வெளியீடு செய்தது. அப்போதே, உதயநிதியின் கை சினிமாவில் பயங்கரமாக ஓங்கி இருப்பதை அனைவரும் உறுதிசெய்துகொண்டனர்.
இதையும் படிக்க: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மாமன்னன் - திரைவிமர்சனம்
இதன்பின், உதயநிதி அமைச்சராகி தயாரிப்பு நிறுவனம் சார்ந்த பொறுப்புகளிலிருந்து கொஞ்சம் விலகியதாகத் தோன்றினாலும் இப்போதும் தமிழகத்தில் எந்தப் படத்தை யார் வாங்க வேண்டும், யார் சம்பாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில்தான் இருக்கிறார் என்றே திரைத் துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
விஜய், அஜித் படங்களுக்கே இதுதான் நிலைமை எனும்போது மினிமம் பட்ஜெட் நாயகர்களின் நிலைமையைச் சொல்ல வேண்டுமா? ரெட் ஜெயண்ட் கேட்கிற விலைக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
உதயநிதியே ஒரு நேர்காணலில், ’எல்லா படங்களையும் நானே வாங்குவதாக சொல்கிறார்கள். அதனால், சில படங்கள் பெயருக்குதான் வேறு வெளியீட்டு நிறுவனத்திலிருந்து வெளியாகும்’ என சிரித்தபடியே சொல்கிறார். இந்த சிரிப்பை யாராவது கேள்வி கேட்டு நிறுத்த முடியுமா?
பழைய கதைகளை விடுவோம்.. இன்றைய பிரச்னை என்ன? மாமன்னன். உதயநிதியின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டதால் தமிழகம் முழுக்க தன் சக்தியைக் காட்டியிருக்கிறார்.
கடந்த மூன்று மாதமாக ஒவ்வொரு வாரமும் குறைந்தது தமிழில் 3 படங்கள் வெளியாகி வந்தன. கடந்த வாரம் 6 படங்கள், சில வாரங்கள் முன் 4 படங்கள் வெளிவந்தன.
மாமன்னன் வெளியான இந்த வாரத்தில் ஒரேயொரு திரைப்படம்கூட திரைக்கு வரவில்லை!
காரணம், தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 திரைகளில் மாமன்னன் படமே வெளியாகியுள்ளது. விஜய், அஜித் படங்களுக்கு ஒதுக்கப்படும் அளவிற்கு இணையான திரைகள். இது மிக எளிதான ரூ. 100 கோடி வசூல் பார்முலா.
இத்தனை ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் படங்களே பலமுறை ஒரே நாளில் திரைக்கு வந்து மோதியிருக்கின்றன. ஆனால், வெளியீட்டிற்கு தயாரான பல படங்களைக் காத்திருக்க வைத்துவிட்டு போட்டியே இல்லாமல் களத்தில் குதித்திருக்கிறார் உதயநிதி!
இதையும் படிக்க: கேப்டன் மில்லர் போஸ்டர் வெளியீடு!
உதயநிதி நடித்த படங்களிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது அவர் நாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படமே.
அப்படத்தின் வசூலை அவரின் வேறு எந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை. அதைக் கணக்கில்கொண்டே எப்படி வெற்றி நாயகனாக நுழைந்தோமோ அதேபோல், கடைசி படத்திலும் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டமா? தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் ‘ரெட் ஜெயண்ட்’ மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் உதயநிதி. சமூகநீதியைப் பேசுகிற படத்தில் நடித்தவர், அதைத் தொழிலில் காட்டுகிறாரா? என்பதுதான் சினிமா வட்டாரங்களின் கேள்வியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது!
அது சரி, இதுதான் உள்ளபடியே உதயநிதியின் கடைசி படமா? ஏனெனில், அரசியலுக்கு வர மாட்டேன் என்றார், வந்தார். தேர்தலில் நிற்க மாட்டேன் என்றார், ஆனால், நின்றார். வென்றாலும் அமைச்சராக மாட்டேன் என்றார், ஆனால், ஆனார். கடைசிப் படமா, இல்லை, மூன்றாண்டுகளுக்குப் பிறகு அடுத்த படமா?