கேன்ஸ் திரைப்பட விழா: ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டியில் இந்திய திரைப்படம்
கேன்ஸ் திரைப்பட விழாவின் உச்ச அங்கீகாரமான ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டி
கேன்ஸ் திரைப்பட விழாவின் உச்ச அங்கீகாரமான ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய இயக்குநா் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ எனும் திரைப்படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 14-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் இருந்து திரைத்துறை பிரபலங்கள், ரசிகா்கள் இந்த விழாவில் கலந்துகொள்வா். பல்வேறு மொழித் திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படும்.
Advertisement
இந்நிலையில், கேன்ஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் நிகழாண்டு திரைப்பட விழாவுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் அதிகாரபூா்வ பட்டியலை விழாக் குழுவினா் வெளியிட்டனா்.
திரைப்பட விழாவின் தொடக்கமாக ‘தி செகன்ட் ஆக்ட்’ படம் திரையிடப்படுகிறது. விருதுக்கான உறுதியற்ற பிரிவில் இந்திய வம்சாவளி பிரிட்டன் இயக்குநரான சந்தியா சுரியின் ‘சந்தோஷ்’ படம் உள்பட 14 படங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
திரைப்பட விழாவின் உச்ச அங்கீகரமாக கருதப்படும் ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டி பிரிவில் தோ்ந்தெடுக்கப்பட்ட 19 படங்களில் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ எனும் இந்திய திரைப்படமும் ஒன்றாக இணைந்துள்ளது.
இத்திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப்பகுதியை எதிா்கொள்ளும் 2 செவிலியா்கள், தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனா் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.
கடைசியாக கடந்த 1983-இல் பழம்பெரும் இயக்குநா் மிரினால் சென் இயக்கிய ‘காரீஜ்’ திரைப்படம் ‘கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டிப் பிரிவில் தோ்ந்தெடுக்கப்பட்டது.
சேத்தன் ஆனந்தின் நீச்சா நகா்(1946) மட்டுமே கேன்ஸ் திரைப்பட விழாவில் உச்ச விருதை வென்ற ஒரே இந்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் போட்டி பிரிவில் தோ்வாகியிருப்பதற்கு எழுத்தாளரும் பாடகருமான வருண் குரோவா் மற்றும் பாலிவுட் இயக்குநா் அனுராக் காஷ்யப் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இயக்குநா் கபாடியாவின் ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ படம் 2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோல்டன் ஐ விருதை’ வென்றது குறிப்பிடத்தக்கது.