தங்கலான் வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விக்ரம் - பா. இரஞ்சித் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விஎஃப்எக்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (ஆக.19) தங்கலான் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், பேசிய நடிகர் விக்ரம், “பா. இரஞ்சித் என்னை சந்திக்கும்போது என் தலை முடியை வெட்ட வேண்டும் என்றார். நான் சரி என்றேன். கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டு, ‘கோமணமும்’ கட்ட வேண்டும் என்றார். கொஞ்சம் பயமாக இருந்தாலும் எனக்கு சரியாக வந்தால் நன்றாக இருக்கும் என ஒப்புக்கொண்டேன். இரஞ்சித் இல்லையென்றால் என்னால் இக்கதாபாத்திரத்தை செய்திருக்கவே முடியாது. அவர் என்னை ஆதாமாக (நிர்வாணமாக) நடிக்க சொன்னாலும் நடிப்பேன்.
இப்படத்தில் நாங்கள் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கால மனிதர்களைப்போலவே மாறினோம். பாம்பும், தேளும் ஊரும் நிலத்தில் கபடி விளையாடி, போராடி, தங்கம் வென்ற கதையே தங்கலான். உண்மையும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட இப்படத்தில் என்னை நடிக்க வைத்தற்காக இரஞ்சித்தை என்றும் மறக்க மாட்டேன். படக்குழுவினருக்கு அனைவருக்கும் என் நன்றிகள்.
எவ்வளவோ படங்களில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். கோப்ரா திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்ததுபோல் வேறெந்த படங்களிலும் நான் நடிக்கவில்லை. ஆனால், அப்படம் சரியான வெற்றியைப் பெறவில்லை. டிமான்ட்டி காலனி - 2 படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கேள்விப்பட்டேன். அஜய் ஞானமுத்துவும் நானும் கோப்ராவில் விட்டதை இப்போது பிடித்துவிட்டோம். மகான் திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது. என் மகனுடன் (துருவ் விக்ரம்) நான் நடித்த முதல் படமான மகான் வெற்றிபெற வேண்டும் என விரும்பினேன்.
ஆனால், ஓடிடியில் வெளியானதால் மக்களிடம் எந்த அளவிற்குச் சென்றது எனத் தெரியாமல் இருந்தது. ஆந்திரம் சென்றபோது அங்கிருந்த ரசிகர்கள் பலரும் மகான் படத்தைக் குறிப்பிட்டு பேசினார்கள். ஓடிடியில் வெளியானாலும் அது வெற்றியடைந்ததற்காக கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.