ஒரே பாடலை 6 மொழிகளில் பாடிய ஷ்ரேயா கோஷல்!
பாடகி ஷ்ரேயா கோஷல் ஒரே பாடலை ஆறு மொழிகளில் பாடி அசத்தியுள்ளார்.
இந்தியளவில் முக்கியமான பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல். சிறுவயது முதலே இசையின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட ஷ்ரேயா, பெங்காலிப் பெண்ணாக இருந்தாலும் பல மொழிகளிலும் அதன் அர்த்தம் தடைபடாத குரலில் மிகச்சிறப்பாக பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர். தமிழில், இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலும் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
தற்போது, புஷ்பா - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான கபுள் சாங் (the couple song) பாடலை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு தமிழில் விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். தமிழில், ‘சூடான தீ கங்கு மாதிரி’ எனத் துவங்கும் பாடல் உள்பட ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி மொழியிலும் இப்பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.
இந்த 6 மொழிகளுக்கும் பாடலாசிரியர் வேறு என்றாலும் ஷ்ரேயாவே அனைத்து பாடல்களையும் பாடியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவாகும் புஷ்பா - 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.