சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு, அதற்காக விவகாரத்து பெற்ற தனது மகளை மேள வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
உண்மையில், அப்பெண் அந்த உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்த விவாகரத்து கிட்டத்தட்ட கொண்டாடப்பட்டது.
ஆனால், காதலித்து திருமணம் செய்துகொண்ட சினிமா நட்சத்திர இணைகளுக்கிடையே இந்த சித்திரவதைகள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் ஏன் தொடர்ந்து விவாகரத்துகள் நிகழ்கின்றன?
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த விவாகரத்துக்குக் காரணம், தனுஷின் நடவடிக்கைகள்தான் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவின. ஆனால், பிரிந்தவர்கள் தரப்பில் எந்த விளக்கங்களும் அளிக்கப்படமால் வெறும் அறிக்கையோடு விவாகரத்து அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பே, நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்றது தென்னிந்திய சினிமாவிலேயே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், இருவரும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டனர். புகழும் செல்வமும் அதிகம் இருந்தும் 4 ஆண்டுகளில், ‘கருத்து வேறுபாடு’ காரணமாக விவாகரத்து பெற்று இருவரின் ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
சக நடிகர்களிடையே நல்ல இணை என பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். ஆனால், அவருக்கும் அவர் மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்னையால் விவாகரத்தை அறிவித்து பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இதுபோல், இயக்குநர் ஏஎல்.விஜய் - அமலா பால், இசையமைப்பாளர் இமான், சின்னத்திரை நடிகர்கள் என பொதுவெளியில் கவனிக்கப்படும் பல இணைகள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இப்போது, அனைவராலும் நீண்ட நாள்களாக விரும்பப்பட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இணை தங்களின் விவாகரத்தை அறிவித்துள்ளனர். தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதை ஆக்ரமித்தன.
உதயம் படத்தில் இடம்பெற்ற, ‘யாரோ இவன்..’, தெறியில் ‘என் ஜீவன்’, அசுரனில் ‘எள்ளு வய பூக்கலையே’ போன்ற பல நல்ல பாடல்கள் இந்த இணையின் கூட்டணியில் உருவாகியிருக்கிறது. சில மாதங்களாகவே ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் பிரியப்போகிறார்கள் என தகவல் வெளியானது. ஆனால், இருவரும் தங்கள் நேர்காணல்களில் அப்படி எதுவும் இல்லை என்பது போன்ற பதில்களைக் கூறி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று(மே.13) தங்கள் விவாகரத்தை அறிவித்து பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். அந்த அறிவிப்பில், ஏன் பிரிந்தோம்? என்கிற விளக்கங்கள் எதையும் கூறவில்லை.
சில மாதங்களுக்கும் முன் தங்களின் 10-வது திருமண நாளை முன்னிட்டு சைந்தவி, “10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால், நேற்றுதான் திருமணம் செய்ததுபோல் இருக்கிறது. நல்ல நண்பனாக, அருமையான கணவனாக, சிறந்த தந்தையாக இருப்பதற்கு நன்றி ஜி.வி.! இப்போது, 10 ஆண்டுகள் முடிந்தது. இனி எப்போதுக்குமான வாழ்வைத் தொடர்வோம்.” எனப் பதிவிட்டிருந்தார்.
இதைப் பதிவிட்டு ஓராண்டுகூட முடியாத நிலையில், இந்த விவாகரத்து அறிவிக்கப்பட்டிருப்பதை என்ன சொல்ல? சரி, அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என சிலர் நினைத்தாலும் காதலித்து திருமணம் செய்து இவ்வளவு காலம் வாழ்ந்தவர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தனர்? என அவர்களின் தீவிர ரசிகர்கள் தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நட்சத்திர இணைகளின் காதல் திருமணங்கள் கொண்டாடப்படும் அளவிற்கு அவர்களின் பிரிவும் சில ரசிகர்களிடையே காதல், திருமணம் போன்றவற்றில் இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவே தெரிகிறது. ‘திருமணம் ஒரு சிறை. அதில், விவாகரத்து விடுதலை’ என்கிற நகைச்சுவைகள், இன்று தீவிரமான உண்மைகளாக மாறி வருகிறதோ என எண்ண வைத்துவிடுகின்றன இந்த பிரபல இணைகளின் விவாகரத்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.