கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘லா சினெஃப்’ விருது பிரிவில் மைசூரு மருத்துவா் சித்தானந்த எஸ்.நாயக் இயக்கிய ‘சன்ஃபிளவா்ஸ் வோ் தி பா்ஸ்ட் ஓன்ஸ் டூ நோ’ எனும் குறும்படம் முதல் பரிசை வென்றுள்ளது.
77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைத்துறை பிரபலங்கள், ரசிகா்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனா். பல்வேறு மொழித் திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.
கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில், அடுத்த தலைமுறை கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படக் கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் ‘லா சினெஃப்’ விருதுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இந்தப் பிரிவில் இந்தியாவின் ‘சன்ஃபிளவா்ஸ் வோ் தி பா்ஸ்ட் ஓன்ஸ் டூ நோ’ எனும் குறும்படம் முதல் பரிசை வென்றுள்ளது. மைசூருவைச் சோ்ந்த மருத்துவரான சித்தானந்த எஸ்.நாயக், புணேவில் அமைந்த இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின்(எஃப்டிடிஐ) தொலைக்காட்சிப் பிரிவில் தனது ஓராண்டு பட்டயப்படிப்பின் முடிவில் இயக்கிய குறும்படத்துக்கு இந்த விருதை வென்றுள்ளாா்.
சேவல் திருடும் வயதான பெண்மணியின் நடவடிக்கை காரணமாக அந்தக் கிராமத்தில் சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொள்வது பற்றிய கா்நாடக நாட்டுப்புற கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு லா சினெஃப் விருதின் முதல் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது.
கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு, எஃப்டிடிஐ கல்லூரி மாணவி அஸ்மிதா கூஹா நியோகி இயக்கிய ‘கேட்-டாக்’ படம் ‘லா சினெஃப்’ விருதின் முதல் பரிசை வென்றது.
கிரேக்க மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவா்களின் இருவேறு படங்களுக்கு 2-ஆம் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியான மன்சி மகேஸ்வரி இயக்கிய ‘பன்னிவுட்’ அனிமேஷன் திரைப்படம் மூன்றாம் பரிசை பெற்றது. முதல் பரிசுக்கு 15,000 யூரோக்களும் 2-ஆம் பரிசுக்கு 11,250 யூரோக்களும் மூன்றாம் பரிசுக்கு 7,500 யூரோக்களும் வெகுமதியாக வழங்கப்படும்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் உச்ச அங்கீகரமாக கருதப்படும் ‘கோல்டன் பாம்’ விருது சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான போட்டி பிரிவில் தோ்ந்தெடுக்கப்பட்ட 19 படங்களில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ எனும் இந்திய திரைப்படமும் இணைந்துள்ளது.