புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக நேற்று தனித்தனியாக அறிவிப்பு வெளியான நிலையில், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு இடையே விவாகரத்து பெறவிருப்பதாக சாய்ரா பானு நேற்று அறிவித்திருந்ததைத் தொடர்ந்து சாய்ரா பானு தரப்பில், விவாகரத்து வழக்குகளில் ஆஜராகிவரும் பிரபலமான வழக்குரைஞர் வந்தனா ஷா, அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், பல ஆண்டுகால திருமண வாழ்க்கையைத் தொடர்ந்து, சாய்ரா, தனது கணவர் ரஹ்மானிடமிருந்து பிரிந்து வாழ்வது என்ற மிகக் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட உணர்வுப்பூர்வ வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குள்ளும் இருக்கும் அதீத காதலையும் தாண்டி, இருவருக்குள்ளும் ஏற்பட்ட பதற்றம் மற்றும் சிரமங்கள், கடக்க முடியாத இடைவெளியே இருவருக்குள்ளும் ஏற்படுத்திவிட்டது.
இதையும் படிக்க.. நட்சத்திர ஹோட்டலில் ஒரு தேநீர் விலை இவ்வளவா? வரியும் சேர்த்தால்!
மிகுந்த மன வலி மற்றும் வேதனையுடன்தான், சாய்ரா பானு இந்த முடிவை எடுத்திருக்கிறார். மிகவும் சவாலான இந்த தருணத்தில், தனியுரிமை மற்றும் நிலைமையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
தனது வாழ்வின் மிகவும் கடினமான இந்தக் காலத்தை சாய்ரா வழிநடத்துவதற்கும் இது உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``நாங்கள் எங்கள் திருமண வாழ்வின் மிகச் சிறப்பான 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளை எட்டிவிட்டது. உடைந்துபோன இதயங்களின் கனத்தினால், கடவுளின் சிம்மாசனம்கூட நடுங்கக்கூடும். அதுபோல, உடைந்தவை ஒருபோதும் சேராது. இந்த இக்கட்டான வேளையில், உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.