இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவரது கருத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஹிந்தி திரையுலகில் வகுப்புவாதம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதையடுத்து, அவர் மீது ஹிந்தி திரையுலகு உள்பட வட மாநிலங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து குறித்து செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "ஏ.ஆர். ரஹ்மான் ஓர் இசைமேதை மற்றும் ஆஸ்கர் விருது வென்றவர். அவர், தமிழ் பேசுவதில் பெருமை கொள்கிறார்.
அவரது சில கருத்துகளைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளைச் சொல்ல சுதந்திரம் உண்டு.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் சினிமா மாறிவிட்டது என்பது அவரது பார்வை.
ஒரு கருத்தை வெளிப்படுத்தியதற்காக, ஒருவரை எப்படி அனைவரும் எதிர்க்க முடியும்? அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பிறகு, பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருதுகிறேன். பாஜகவுக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன தொடர்பு?" என்று தெரிவித்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், சமீப காலமாக ஹிந்தி திரையுலகில் வகுப்புவாத அடிப்படையிலான ஆதிக்கம் மிகுந்து வருவதாகக் கூறினார்.
மேலும், சாவா திரைப்படம் பிரிவினையைத் தூண்டும் விதமாக இருந்ததாகவும், ஆனால், அதன் உள்ளடக்கம் தைரியத்தை காட்டுவதாக இருந்ததாலும், அந்தப் படத்துக்கு இசையமைத்ததாகக் கூறினார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்து, வட மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.