முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- அண்ணாமலை

அமைச்சர் நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 1:43 PM
அண்ணாமலை.
பகிர்:

அமைச்சர் நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக அமைச்சர் கே.என்.நேருவின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ. 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.

கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ரூ. 888 கோடி ஊழலில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது. அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ரூ. 1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது. இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ரூ. 365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.

Advertisement

தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்?

திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?

உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

Former state president of the BJP, Annamalai, has stated that a case should be filed immediately against Minister Nehru.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments