நடிகர் சூர்யா கங்குவா இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்.26) சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், பாபி தியால், திஷா பதானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: வருங்கால கணவருடன் ரம்யா பாண்டியன் - விடியோ!
விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது, “ கங்குவா திரைப்படம் பலரின் கடும் உழைப்பால் உருவாகியுள்ளது. கலை இயக்குநர் மிலன், ஒளிப்பதிவாளர் வெற்றி என இப்படத்தின் தூண்களாக இரவு பகல் பாறாமல் உழைத்தவர்கள் அதிகம். கிட்டத்தட்ட 170 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் மிக ஆர்வமாகவே ஒவ்வொரு நாளும் கழிந்தது. இயக்குநர் சிவாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். முக்கியமாக, நல்லதே நினை நல்லதே நடக்கும் என்பதை சிவா மூலம் அறிந்துகொண்டே இருந்தேன். யாரையும் சங்கடப்படுத்த மாட்டேன் என சொல்லிக்கொண்டே இருப்பார். 4 - 5 ஆண்டுகளுக்கு முன்னால் ரோலக்ஸ் கதாபாத்திரம் மாதிரி கடுமையாகக் கோவப்படுவேன். ஆனால், மன்னிப்பதுபோன்ற அழகான விஷயம் வேறில்லை என புரிய வைத்தவர் சிவா.
சினிமாவுக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரேபோல் இருந்தால் நன்றாக இருக்காது என ஏற்றமும் இறக்கமுமாக சினிமா வாழ்க்கை இருந்திருக்கிறது. நிறைய புதிய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். உங்களின் அன்புக்காகவே கங்குவா உருவாகியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக என் திரைப்பயணத்தில் தடுமாற்றம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நெருப்பு மாதிரி கங்குவா நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. என்னைப் பொருட்படுத்தி படங்களைத் தயாரித்த பல தயாரிப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இங்கு, லயோலா கல்லூரி பற்றி பேச்சு எழுந்தது. அங்கு படித்தவர்கள் எல்லாம் சிறப்பான இடங்களில் இருக்கின்றனர். அங்கு படிக்கும்போது நானும் உயர்ந்த எண்ணங்களில் இருந்தேன். லயோலாவில் படித்தவர்களில், நான் பாஸ் என அழைக்கக்கூடிய என் தயாரிப்பாளர்களில் ஒருவர் இன்று துணை முதல்வராக (உதயநிதி ஸ்டாலின்) இருக்கிறார். இன்னொரு நண்பர் (நடிகர் விஜய்) புதிய பாதையில் பயணத்தை துவங்குகிறார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கட்டும். என் அன்பான ரசிகர்களின் அன்பாலயே இத்தனையாண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன். உங்களுக்கு என் நன்றி” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.