நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் முதலாளியான சைமன் (நாகர்ஜூனா) கப்பல்வழி இறக்குமதியைப் பயன்படுத்தி கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வலது கையான சௌபின் சாகீர் கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்னைகள் வந்தால் அவர்களைக் ‘காலி’ செய்யும் பணிகளைப் பார்த்துக்கொள்கிறார். மறுபுறம் சென்னையில் அமைதியாக மேன்ஷன் நடத்திவரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்) ஒரு செய்தி வருகிறது. அவரின் நெருங்கிய நண்பரான ராஜசேகர் (சத்யராஜ்) இறந்த விட்டதாகத் தகவல் கிடைத்ததும் விசாகப்பட்டினம் செல்கிறார். மறைந்த ராஜசேகரின் இறப்பில் சந்தேகம் கொள்ளும் தேவா, கொலையாளிகளைத் தேடி பழிவாங்குகிறாரா என்பதே கூலி.
இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூலி ஆரம்பக் காட்சிகளிலேயே சொதப்பல்களைச் சந்திக்கிறது. ரஜினியின் அறிமுகக் காட்சி சிம்பிளாக ஆரம்பித்ததாலும் அடுத்தடுத்த காட்சிகளில் உணர்வுப்பூர்வத்தை ஊட்டுகிறேன் என்கிற பெயரில் சோர்வடையச் செய்கிறார்கள். பழிவாங்குகிற கதையில் கடத்தல் ஒருபக்கம் உடல் உறுப்புகளைத் திருடும் செயல் ஒருபக்கம் என இந்தக் கதையின் மையம் எங்கெங்கோ செல்கிறது. இடைவேளைக் காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. இதனால், இரண்டாம் பாதியிலாவது விருந்து இருக்கும் என ரசிகர்கள் காத்திருந்தால் அங்கும் என்ன செய்வது எனத் தெரியாமல் தள்ளாடுவது திரைக்கதையில் தெரிய, கிளைமேக்ஸில் பிளாஷ்ஃபேக் காட்சியை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ஒரே மாதிரியான தன் வில்லன்களை உருவாக்குவது, அவர்களுக்கான ஆயுதங்களையும் சண்டைக்கான காரணங்களையும் எழுதுவது என லோகேஷின் கதாபாத்திரங்கள் பலவீனமாகத் தெரிகின்றன. எந்தக் கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை. சில திருப்பங்களையும் ஊகிக்க முடிவது ஏமாற்றம். லோகேஷ் கனகராஜ் தன் நேர்காணல்களில் சினிமா குறித்து பேசும் தெளிவான விஷயங்கள் எதுவும் அவர் திரைப்படங்களில் வெளிப்படுவதில்லை என்பதையே லியோ, கூலி படங்கள் உணர்த்துகின்றன. கமர்சியல் படங்களுக்கான திரைக்கதைகளை வடிவமைப்பது பெரிய சவால்.
அந்த சவால் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு அதிகம். பட்ஜெட் குறைவு என்பதால் ஒரு இயக்குநரே கதையையும் திரைக்கதையையும் ஒழுங்கு செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், லோகேஷ் கனகராஜ் கேட்டால் பல கோடிகள் பட்ஜெட்களாக ஒதுக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பால் இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது அதன் கதை, திரைக்கதையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? அந்த உழைப்பு வெளிப்படவில்லை. ரஜினி 50 ஆண்டுகளாக உருவாக்கி வைத்த ’மாஸ்’ விஷயங்களால்தான் ஓரளவு கூலி தப்பிக்கிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்க ரீதியாகவும் பெரிய பின்னடைவையே சந்தித்திருக்கிறார். துறைமுகங்களில் நேரடியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், சரியான “ஸ்டேஜிங் (stageing)” இல்லை.
தமிழில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படங்களைப் பார்த்தால் அப்பட்டமாக ஒரு உண்மை வெளிப்படுகிறது. இங்கு திரை எழுத்தாளர்களை பிரம்மாண்ட இயக்குநர்கள் யாரும் முறையாகப் பயன்படுத்துவதில்லை. அப்படியே ஒரு எழுத்தாளர் முழுக்கதையை எழுதிக்கொடுத்தாலும் வசனத்தில் மட்டும் அவர் பெயரைப் போட்டு, எழுத்து - இயக்கம் எனப் பெருமையாகப் போட்டுக்கொள்கிறார்கள். மலையாளத்திலோ கன்னடத்திலோ ரூ. 400 கோடியைக் கொடுத்து படமாக்கச் சொன்னால் ஹாலிவுட்டை தொட்டுவிடுவார்கள்.
ஆனால், நாமோ எல்சியு என்கிற மலிவான சினிமா உத்திகளையெல்லாம் ஆஹா, ஓஹோவென கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய ரசனைகளின் தரம் எப்படியிருக்கிறதோ அதன் வெளிப்பாட்டை பொறுத்தே இங்கு கமர்சியல் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான், கூலி போன்ற உப்மாக்கள் தங்கக் கரண்டிகளால் கிண்டி பரிமாறப்படுகின்றன.
பான் இந்தியத் திரைப்படம் என்றால் என்ன? யார் நடித்தாலும் அக்கதையின் உணர்வுகள் இந்திய முழுவதும் உணரப்பட வேண்டும். ஆனால், இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒவ்வொரு மொழியின் பிரபல நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டி அழைத்துவந்து வியாபாரம் செய்கிறார்கள். இதுதான் பான் இந்தியா சினிமாவா? கஷ்டம். தமிழ் சினிமா ஆயிரம் கோடிகளை ஈட்டுவதில்தான் கவனமாக இருக்கிறது. அது சிறந்த கதையுடன் கூடிய வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் இயக்குநர்களுக்கே ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. ரஜினி இருந்தால்போதுமா? லோகேஷ் இருந்தால் போதுமா? சுவாரஸ்யமான கதை வேண்டாமா?
ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள். ஒரு மின் தகன நாற்காலியை சத்யராஜ் உருவாக்குகிறார். அதில், நாகர்ஜூனாவின் துறைமுகத்திலிருந்து வரும் பிணங்களை எரிக்க வேண்டும். (சாம்பலாக்கி அடையாளம் தெரியாமல் அழிப்பததற்கு). ஏன் பாஸ், அதுக்கு இறந்த உடல்களைக் கல்லைக்கட்டி கடலில் வீசி செலவைக் குறைக்கலாமே? என்றெல்லாம் நமக்கு சிந்திக்கத் தோன்றுகிறது.
கூலியில் ரஜினியைத் தவிர யார் நடித்திருந்தாலும் பெரிய தோல்விப்படமாக அமைந்திருக்கும். இப்படத்தின் ஒரே ஆறுதல் ரஜினி மட்டும்தான். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கண்டவர் இன்னும் தன் ஆட்டத்தை நிறுத்தாமல் அசரடிக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அதை செய்துகொண்டிருப்பது 75 வயதான ’பழைய ஆள்’ என்கிற எண்ணத்தை ஒரு ஃப்ரேமில் கூட காண முடியவில்லை. ஆக்சனுக்கு முந்தைய வசனங்களைப் பேசும்போது அடுத்தக்காட்சிக்கான எதிர்பார்ப்பை ரஜினியால் உருவாக்க முடிகிறது. ஆனால், பலவீனமான திரைக்கதை அதை கெடுக்கிறது.
நாகர்ஜூனா முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். ஆனால், ஒரு வில்லனுக்கு உண்டான தோற்றமும் உடல்மொழியும் சாதாரணமாக வெளிப்படுகிறது. அந்த நம்பகத்தன்மை அவர் கதாபாத்திரத்தில் இருப்பதால் கதையுடன் இயல்பாக ஒன்றவும் செய்கிறார். இடைவேளைக் காட்சியில் தன் நடனத்தாலும் துறைமுகத்திற்குள் வந்து செல்லும் தோரணையிலும் வயதே ஆகாதா? என எண்ண வைக்கிறார்.
சௌபின் சாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சரியாகச் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வில்லனாக நடிக்க அழைத்து சௌபினைக் காலி செய்யாமல் இருக்க வேண்டும்.
ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். எப்பேற்பட்ட நடிகர்? பணம் சம்பாதித்தாலும், நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டுமென அயராது நினைக்கும் படைப்பாளி. ஆனால், ரஜினிக்காக கோமாளித்தனம் செய்ததுபோல் இருக்கிறது. ‘சும்மா நாலு நாய்க்குட்டிகளுடன் டாட்டூ போட்ட உடலுடன் நடந்து வாங்க சார் போதும்!’ இதற்கு எதற்கு ஆமீர் கான்?
இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஆக்சன் படமென்றாலே அல்வா போல் ஆகிவிட்டது. ’நறுக்கென்று நாலு பிஜிஎம்’ பாணியை வைத்திருப்பதால் அவர் பிழைத்துக்கொள்வார். இப்படத்திலும் பெரும்பாலான காட்சிகளை அனிருத்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. சிக்குடு, மோனிகா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனின் இரவுக் காட்சிகளுக்கான ஒளியமைப்பு நன்றாக இருந்தது. மேன்ஷனில் நடக்கும் சண்டைக் காட்சி, நாகர்ஜூனா துறைமுகத்திற்கு வந்து ஒரு கொலையைச் செய்யும் காட்சியில் கிரிஷின் ஒளிப்பதிவு கதைக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும், கிரிஷ் கங்காதரனின் முழுத்திறமை இதில் வெளிப்படவில்லை. சில காட்சிகளில் ஒளிப்பதிவின் தரம் சோர்வை நோக்கி நகர்த்துகிறது.
சண்டைக்காட்சிகளுக்குப் பெயர்போன லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளைத் திணித்திருக்கிறார். இடைவேளை மற்றும் டி ஏஜிங் காட்சிகளால் சுமாரான படமாக எஞ்சுகிறது. 100 சதவீதம் என் படமாக இருக்கும் எனக் கூறும் லோகேஷ் இப்படத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு கதை மற்றும் பழைய மேக்கிங் ஸ்டைல் பக்கம் திரும்ப வேண்டும். இந்த மறுபரிசீலனையை அவர் செய்யவில்லை என்றால் உச்சத்திற்கு சென்ற வேகத்திலேயே கடுமையான புறக்கணிப்பையும் சந்திக்க வேண்டிவரும். சினிமா அப்படி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.