சென்னை: ‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.ஜோதிபாசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறாா்கள் இத்திரைப்படத்தைக் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘கூலி’ திரைப்படத்தைவிட கேஜிஎஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கூலி திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கில் தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மறுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.