2025 ஆம் ஆண்டில் வெளியாகி கவனம் ஈர்த்த சிறந்த திரைப்படங்களின் பட்டியல்.
கடந்தாண்டை ஒப்பிட இந்தாண்டு தமிழ் சினிமாவில் அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சில திரைப்படங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் வருகை அதிகரித்திருப்பதுடன் விமர்சன, வணிகங்களிலும் வெற்றிகளைப் பெற்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் நல்ல திரை ஆக்கம் எனச் சொல்லத்தகுந்த ஒன்றிரண்டு படங்களாவது இருந்திருக்கின்றன.
2025-ல் 282 திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் வெற்றி பெற்ற, கவனிக்க வைத்த 10 திரைப்படங்களைக் குறித்த பட்டியல் இது.
டூரிஸ்ட் பேமிலி
2025-ன் சிறந்த படங்களில் முதன்மையான படமாகவே டூரிஸ்ட் பேமிலி கருதப்படுகிறது. சசிகுமார் நாயகனாக நடித்த இப்படத்தை தமிழ் மட்டுமல்லாது பல மொழி திரைப்பிரபலங்களும் பாராட்டினர். முக்கியமாக, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர் நானி என பலரும் தங்களை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்ததாகக் குறிப்பிட்டனர். ரூ. 10 கோடியில் தயாரிக்கப்பட்டு திரையரங்க வெளியீட்டிலேயே ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய லாபகரமான படமாகவே அமைந்தது. படத்தின் இயக்குநர் அபிஷன் தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார்.
டிராகன்
அஸ்வத் மாரிமூத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம் டிராகன். இப்படத்தின் டிரைலர் வெளியானபோது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், திரைப்படம் முற்றிலும் இன்றைய தலைமுறைக்கான கதையை நேர்மையுடன் அணுகியதாக பாராட்டுகளைப் பெற்று ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
பைசன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துருவ், அனுபமா நடிப்பில் திரைக்கு வந்த பைசன் இந்தாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். கபடியை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தாலும் தென் தமிழக இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும் அரசியலையும் பேசி சமூக ரீதியான அக்கறை கொண்ட படமாகவும் விமர்சனங்களைப் பெற்றது. ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்து துருவுக்கும் முக்கிய படமாக அமைந்தது.
குடும்பஸ்தன்
நடிகர் மணிகண்டன் மிடில் கிளாஸ் கதைநாயகனாகவே மாறிவிட்டார் என்கிற அளவிற்கு பெயரைப் பெற்றுக்கொடுத்த திரைப்படம். அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் பொருளாதாரா ரீதியாக தடுமாறும் குடும்பஸ்தனான இளைஞனின் வாழ்க்கையை நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாக பேசியது. நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ. 35 கோடி வரை வசூலித்தது.
ஆண்பாவம் பொல்லாதது
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் திருமணமான ஆண்களின் வலிகளைப் பேசும் படமாகத் திரைக்கு வந்து ஆச்சரியமான வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 50 நாள்கள் திரையரங்குகளில் ஓடி அசத்தியது.
3 பிஎச்கே
சொந்தவீட்டை வாங்குவது பலருக்கும் பெரிய கனவு. அதை சித்தார்த்தின் குடும்பம் எப்படி அடைந்தார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருந்தார்கள். இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இப்படத்தில் நடிகர் சரத்குமாரின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றது. அதேநேரம், சொந்த வீட்டை வாங்க இவ்வளவு சிரமங்களை ஏன் அனுபவிக்க வேண்டும் என்கிற விமர்சனமும் எழுந்தது. இருந்தும், வணிக வெற்றியைப் பெற்றது.
லெவன்
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜீஸ் இயக்கத்தில் நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதேநேரம், வசூலிலும் தோல்விப்படமாகவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியான பின் பலராலும் பார்க்கப்பட்டு நல்ல திரைப்படம் என்கிற பெயரைப் பெற்றது. நவீன் சந்திராவின் நடிப்பும் இளவயது இரட்டை கதாபாத்திர காட்சிகளும் பேசப்பட்டது.
சக்தித் திருமகன்
விஜய் ஆண்டனின் பரபரப்பான அரசியல் திரில்லர் கதையாக திரைக்கு வந்த இப்படம் பலரையும் கவர்ந்தது. திரைக்கதை வேகமும் கதையின் அழுத்தமும் அரசு அதிகாரங்களைக் குறித்து பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இயக்குநர் அருண் பிரபுவின் முக்கியமான படமாகவே அமைந்தாலும் சுமாரான வணிக வெற்றியைப் பெற்ற இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
பறந்து போ
இயக்குநர் ராம் இயக்கிய இப்படம் தந்தை - மகனுக்கு இடையேயான குழந்தை வளர்ப்பு குறித்த பார்வைகளை நகைச்சுவை பாணியில் எடுத்துக்கூறியது. ஜாலியான கதையாகவும் நுணுக்கமான விஷயங்களையும் பதிவு செய்ததிருந்தது. நடிகர் சிவாவின் கதாபாத்திரமும் குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கான காரணமாக அமைந்திருந்தது.
சிறை
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் சிறை. விசாரணைக் கைதியின் காதலும் காவல் அதிகாரங்களையும் பிணைத்து எழுதப்பட்ட இக்கதை பரபரப்பான திரைக்கதையாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் வரவேற்பைப் பெற்றுள்ளது. கதை ரீதியாகவே தமிழ் சினிமாவிற்கு நல்ல படமாக அமைந்துள்ளது. இதனை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
இதுபோக, ஜெண்டில்வுன், காந்தி கண்ணாடி, குமாரசம்பவம், மாயக்கூத்து, டியூட், மரியா, அங்கம்மாள் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளுடன் திரைக்கு வந்த பல படங்கள் ரசிகர்களிடம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றிருந்தன.
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆண்டின் வெற்றிப்படமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.