பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து சான்ட்ராவுக்கு பதிலாக கனி திரு வெளியேற்றப்பட்டதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தபோது இருந்ததைபோன்று சான்ட்ராவின் ஆட்டம் இல்லை என்றும், ஆனால், கடந்த சில வாரங்களாக கனி திருவின் ஆட்டம் மேம்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை அமித் பார்கவ் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கனி திரு வெளியேற்றப்பட்டார்.
கனி வெளியேற்றப்படுவதற்கு முன்பு, நாமினேஷன் பட்டியல் இருந்த சுபிக்ஷா, விஜே பார்வதி, கானா பாலா, திவ்யா கணேசன், சபரி உள்ளிட்டோர் பாதுகாக்கப்படுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இறுதியில் கனி திரு, சான்ட்ரா ஆகியோர் மட்டுமே இருந்தனர். இவர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கனி திரு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கனி வெளியேற்றப்பட்டதை சக போட்டியாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பலருக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது.
சக போட்டியாளரான விக்கல்ஸ் விக்ரம், சான்ட்ரா - கனி ஆட்டங்களை ஒப்பிட்டு கனியின் ஆட்டம் எந்தவகையிலும் குறைந்ததாக இல்லை என்றும், என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை எனவும் கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு விடியோ மூலம் தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு கனி நன்றி தெரிவித்தார். அதில், தான் வெளியேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், ஆனால், மக்கள் தீர்ப்பு அதுதான் என்றால், முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கனியை வெளியேற்றிவிட்டு சான்ட்ராவை வைத்துக்கொண்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் அரசியல் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கனி வெளியேற்றம் என்பது மக்களின் முடிவு அல்ல என்றும் மக்கள் மனதில் ராணியாக கனி இருப்பதாகவும் பலர் கருத்திட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு, பிரவீன்ராஜ் தேவசகாயம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும்போதும் இதுபோன்ற கருத்துகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.