பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள நடிகர் கமருதீனை தத்தெடுக்கத் தயாராக இருப்பதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
நடிகர் கமருதீன் தனக்கு தாய் - தந்தை இல்லை என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு வருந்தியுள்ளார். எனினும் நண்பர்கள் சூழ நலமுடன் இருப்பதாக அவ்வபோது ஆறுதல் கூறிக்கொள்ளும் கமருதீனை தத்தெடுக்கத் தயாராக இருப்பதாக பாடகி தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமருதீன் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சி தற்போது 13 வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதில் கமருதீனும் ஒருவராவார்.
விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது. நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் நபர் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுவார். எஞ்சிய 8 போட்டியாளர்களில் 4 பேரை மக்கள் வாக்களித்து இறுதிப்போட்டிக்கு அனுப்புவார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான கமருதீனை தத்தெடுக்கத் தயாராக இருப்பதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
''பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்று விமர்சனம் செய்திருந்தேன். அதில் நான் ஒரு தகவல் கூறியிருந்தேன். அது சென்று சேருமா என்று தெரியவில்லை. அதனால் இன்ஸ்டாகிராமில் அதனைக் கூறுகிறேன்.
கமருதீன், உங்களை தத்தெடுக்க விரும்புகிறேன். எனக்கும் குடும்பம் இல்லை. இதனால், எந்தவித பிரச்னையும் இருக்காது. சட்டப்பூர்வமாக இதற்கு வாய்ப்பும் உள்ளது. நான் உங்களை மகனாக தத்தெடுத்தால், உலகின் முதன்மை ஓவியனாக உங்களை மாற்றுவேன்.
உங்கள் ஓவியங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஒரு பதிப்பக உரிமையாளராக அதன் சவால்கள் எனக்குத் தெரியும். உங்களுக்கு சரியான வழியில் என்னால் உதவ முடியும். இதுவே சரியான நேரம். கமருதீன் உங்களை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க காத்திருக்கிறேன். என்னை தாயாக ஏற்றுக்கொள்வீர்களா?'' என சுசித்ரா பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ஓவியங்கள் வரையும் திறனை கமருதீன் வெளிப்படுத்துவது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நடிகராக பல குரல்களில் நடிப்பது மட்டுமின்றி, பாடல், நடனம் என தனது திறமைகளை அவ்வபோது கமருதீன் பிக் பாஸ் வீட்டில் வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக நடிகருக்குள் இருக்கும் ஓவியனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் கானா பாலா, நடிகர் தீபக் ஆகியோரை நேரலையில் கமருதீன் வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.