பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக கானா வினோத் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார் கமருதீன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கமருதீன் வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக கானா வினோத் பேசியிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் மட்டுமின்றி வெளியே சென்ற பிறகும், இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்வதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் நிறைவு பெற்றது. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்பட 24 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட நிலையில், 100 நாள்களுக்குப் பிறகு இறுதியில் விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரிநாதன், திவ்யா கணேசன் ஆகியோர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
இதில் அதிக வாக்குகளைப் பெற்று மக்கள் மனங்களை வென்ற திவ்யா கணேசன் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை சபரிநாதன் பகிர்ந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் - கமருதீன் நட்பு வெகுவாக பாராட்டப்பட்டது. விஜே பார்வதியுடன் சேர்ந்து தனது ஆட்டத்தில் இருந்து கமருதீன் விலகிச்செல்லும்போதெல்லாம், உண்மையான அக்கறை கொண்டு கானா வினோத் எச்சரித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி கமருதீனுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அவருக்கு உதவியாகவும் கானா வினோத் செயல்பட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருவரின் நட்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
தாய் - தந்தையை இழந்த கமருதீன், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் மனைவி வருகைக்குப் பிறகு வாழ்க்கை மாறும் எனவும் கமருதீன் மீது உண்மையாக அக்கறை கொண்டு கானா வினோத் பேசியவை இணையத்தில் பலரால் பகிரப்பட்டன.
பிக் பாஸ் வீட்டில் போட்டியின்போது, நடிகை சான்ட்ராவை காரில் இருந்து தள்ளிவிட்டு அநாகரிகமாகப் பேசியதால், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிறகும் கூட கமருதீனின் தவறை சுட்டிக்காட்டி ஆதரவாக கானா வினோத் பேசியிருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக கானா வினோத் இல்லத்திற்கு கமருதீன் சென்றுள்ளார். அங்கு கானா வினோத்தின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட கமருதீன், 'எனது குடும்பம்' எனக் குறிப்பிட்டு கானா வினோத்தின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.