அனோரா திரைப்படம் ஆஸ்கர் விருது விழாவில் 5 விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளது.
2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.
இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்தது.
ஆச்சரியமாக சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் இயக்குநர் சான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், விருது வென்ற சான் பேகர் பாலியல் தொழிலாளிகளுக்கு விருதை சமர்ப்பிப்பதாக சொன்னதும், விழாவில் கலந்துகொண்டவர்கள் கைதட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அனோராவின் கதை
அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியிலிருக்கும் பாலியல் தொழிலாளியான அனோரா என்கிற அனி மிகீவா (மிக்கி மேடிசன்) பார் ஒன்றில் ரஷிய பணக்கார பையனான வான்யா சக்காரோவைச் சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் மோகம் தொற்றிக்கொள்ள, அனி அவனைத் தனியாக அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு, இருவரும் உறவு வைத்துக்கொள்கின்றனர்.
இளவயதான வான்யா அனியின் உடல் கொடுக்கும் இன்பத்தில் திளைப்பதுடன் ஒரு வாரத்திற்கு அவளை 15 ஆயிரம் டாலருக்கு வாடகைக்கு பேசி, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சுற்றித்திரிவது, விருப்பம்போல் உறவில் ஈடுபடுவது என கொண்டாட்டமாக இருக்கிறான். வான்யாவுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் அனியை ஈர்க்கிறது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.
ஒரு பாலியல் தொழிலாளியைத் தன் மகன் திருமணம் செய்வதா என வான்யா குடும்பத்தினர் கொந்தளிக்க, உள்ளூர் மதகுருவை வைத்து அவர்களின் திருமணத்தை ரத்த செய்வதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் பணம், இன்னொருபுறம் சமூகம் என அனோரா இன்றைய இளம் தலைமுறையின் உணர்வுகளை சமூக கண்ணோட்டத்தில் ஆழமாகப் பேசுகிறது.
பொருளாதாரத்துக்கும் காதலுக்குமான இடைவெளிகளை நேர்மையாக இப்படம் பதிவு செய்திருப்பதாகவும் அனோராவாக நடித்த மிக்கி மேடிசன் இப்படத்தின் உயிர்நாடி என்றும் விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். அந்தளவு, கதையின் நோக்கம் மற்றும் நடிப்பிற்கு மிக்கி அபாரமான தேர்வாக இருந்திருக்கிறார்.
படத்தின் இயக்குநர் சான் பேகர் பல பாலியல் தொழிலாளிகளிடம் அவர்களின் கதைகள் மற்றும் வாழ்க்கைகளைக் கேட்டே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே, ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்ததுடன் பாலியல் தொழிலைக் குற்றமற்றதாக மாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளையும் வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.