விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே தொடரில் சிறகடிக்க ஆசை நடிகர் பிரணவ் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா இயக்கி வரும் தொடர் மகளே என் மருமகளே. இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முக்கியத்துவம் பெறா நேரத்தில் (நான் பிரைம் டைம்) இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
இந்தத் தொடரின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கும், அதிக ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும் புதிய பாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளது தொடர் குழு.
அதன்படி, மகளே என் மருமகளே தொடரில் நவீன் என்ற பாத்திரத்தில் இணைந்துள்ளார் நடிகர் பிரணவ். இவரின் வருகையால் தொடரில் பல திருப்புமுனைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரணவ் விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.
இதனைத் தொடர்ந்து இவர் சிறகடிக்க ஆசை தொடரில் ரவி பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
தற்போது மகளே என் மருமகளே தொடரில் பிரணவ் இணைந்துள்ளது இவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.