டியூட் தெலுங்கு நிகழ்வில் பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படம் மூலம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, டிராகன் படமும் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழின் முன்னணி நடிகர் பட்டியலுக்குள் இவரைக் கொண்டுவந்தது.
தற்போது, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் இதுவும் வெற்றிப்படமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டியூட் திரைப்படத்தின் தெலுங்கு முன்வெளியீட்டு நிகழ்வில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், “நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?” எனக் கேட்டார்.
இதனைக் கேட்டு பதில் சொல்ல பிரதீப் யோசனை செய்தபோது, நடிகர் சரத் குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, “நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் ஹீரோ மெட்டீரியல் என்பதை நீங்கள் சொல்ல முடியாது. நாயகராக இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. சமூகத்திற்கு நல்லது செய்யும் அனைவரும் ஹீரோதான்” என்றார்.
பிரதீப்பும், “மக்கள் என் வழியாக அவர்களைப் பார்க்கிறார்கள். கடின உழைப்பும் கடவுளின் ஆசிர்வாதமும்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன்.” எனக் கூறினார்.
இப்பதிலைக் கேட்டதும் அரங்கிலிருந்த அனைவரும் கைதட்டி பிரதீப் ரங்கநாதனை உற்சாகப்படுத்தினர்.
மேலும், இக்கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளரின் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரசிகர்கள், அவரைக் கடுமையாக கண்டித்தும் வருகின்றனர். பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கிலும் நிறைய ரசிகர்கள் இருப்பதால், அவர்களும் இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் நடித்த கே-ராம்ப் (K-Ramp) திரைப்படத்தின் நிகழ்விலும் பிரதீப் குறித்து இதேபோன்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கிரண், “இன்னொரு திரைத்துறையைச் சேர்ந்தவரை இப்படித் தாக்குவது நியாயமில்லை. இதுபோன்ற கேள்விகள் சரியானவையும் கிடையாது. பிரதீப் ரங்கநாதனை ஹீரோ மெட்டீரியல் இல்லை எனச் சொல்வது அவருக்கும் மற்றவர்களுக்கும் வலியைக் கொடுக்கும். இந்த மாதிரியான கேள்விகளை ஊக்குவிக்காதீர்கள்” என்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பதறும் வாழ்வு... பைசன் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.