இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தணிக்கை விதிகள் மற்றும் சினிமா குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பராசக்தி திரைப்படத்திற்க்கும் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சினிமா காதலனாக சில எண்ணங்களைப் பகிர்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் உருவான சுயாதீன திரைப்படமான சல்லியர்களுக்கு திரையரங்கங்கள் கிடைக்கவில்லை. தணிக்கைப் பிரச்னையால் நடிகர் விஜய் போன்ற உச்ச நட்சத்திரத்தின் ஜன நாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காததால் பராசக்திக்கான டிக்கெட் முன்பதிவுகளும் துவங்காமல் இருக்கின்றன. இது, சினிமாவுக்கு கடினமான காலம்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான சுயாதீன படங்களை வெளியிட திரையரங்கங்களிடமிருந்து அதிக ஆதரவு தேவை. ஏனென்றால், பெரிய சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டாததால், இந்தப் படங்களுக்கு திரையரங்குகள் மட்டுமே வணிகத்திற்கான ஒரே ஆதாரமாக உள்ளன. சுயாதீன படங்களுக்கு திரையரங்கங்கள் வழங்கப்படவில்லை என்றால் அதற்கு சினிமாவை கொல்வது என்றுதான் பொருள்.
பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு... ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீட்டு பணிகளை மேற்கொண்டு வரும் படைப்பாளிகளுக்கு தணிக்கை வாரியம் விதிக்கும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினமானது. மேலும், இது படைப்பாளிகளுக்கு அழுத்தத்தையும் தரும்.
தற்போது, இந்தியா மற்றும் வெளிநாட்டு சென்சார் துறையைப் பொருத்தவரை படம் வெளியாவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அப்படம் முழுமையடைந்திருக்க வேண்டும் என்கிற காலக்கெடு விதி இருக்கிறது. பல காரணங்களால் நிச்சயமாக இது சாத்தியமில்லாத ஒன்று. திரைத் தயாரிப்பாளர்களுக்காக இதனைச் சீரமைத்து சுலபமாக்க வேண்டும். இல்லையென்றால், பண்டிகை நாள்களில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தள்ளிச்செல்வது திரைத்துறையையே அழிக்கும்.
ரசிகர்களின் சண்டை, அரசியல் காரணங்கள், தனிப்பட்ட சித்தாந்தங்கள், வெறுப்பு பிரசாரம் ஆகியவற்றை விடுத்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து சினிமாவையும் கலையையும் காப்பாற்ற ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இப்பதிவு வைரலாகி வருவதுடன் அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.