தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலா செல்வதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த குழுவில் தானும் இடம்பெற வேண்டும் என பிரவீன்ராஜிடம் நடிகை ஆதிரை கேட்டுக்கொண்டுள்ளார்.
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது உலகின் மகிழ்ச்சியான நாடு எது? என பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு 'தாய்லாந்து' என கானா வினோத் பதிலளித்தது பலரிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் கூட தனது பேச்சை நிறுத்திவிட்டு சற்று நேரம் சிரித்த பிறகே தொடர்ந்து பேசினார். பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமின்றி பிக் பாஸையே கானா வினோத் சிரிக்க வைத்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாய்லாந்து மிகவும் பிரபலமான நாடாக மாறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இறுதிப் போட்டியாளர்களாக திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகள் பெற்ற நபர் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சான்ட்ரா கடந்த வாரத்துடன் வெளியேறினார்.
தற்போது போட்டிகள் ஏதும் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவு என்பதால், பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்தவகையில் இன்று நடிகை ஆதிரை, இசைக்கலைஞர் எஃப்.ஜே., நடிகர் அமித் பார்கவ், கனி திரு, சுபிக்ஷா, ப்ரஜின் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
வியானா, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்து என்ற சொல் பிக் பாஸ் வீட்டில் பிரபலமானதால், போட்டியாளர்கள் அனைவரும் அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர். போட்டியில் இருந்து வெளியேறி தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்துள்ள பிரவீன் தாய்லாந்துக்கு நாம் அனைவரும் பயணம் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஆர்வமடைந்த ஆதிரை, அக்குழுவில் தானும் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒருவர் தவறாமல், நாம் அனைவருமே தாய்லாந்து செல்வோம் என பிரவீன்ராஜ் பதிலளித்தார். இதன்மூலம் பிக் பாஸ் குழு தாய்லாந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஒருவரையொருவர் அடிக்காத குறையாக விமர்சித்துக்கொண்டவர்கள் தற்போது ஒன்றாக வெளிநாட்டிற்கு பயணம் செல்லவுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.