நடன இயக்குநர் சாண்டிக்கு பாடகர் கானா வினோத் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். மகளுடன் சாண்டி மாஸ்டர் இருக்கும் புகைப்படத்தை கைகளில் நெய்து பரிசாக வழங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் கானா வினோத்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது பாணியில் பலரை சிரிக்கவைத்ததாலும் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்ததாலும் கானா வினோத் பலரால் பாராட்டப்பட்டார். விஜய் சேதுபதியின் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராகவே கானா வினோத் மாறினார்.
பிக் பாஸ் வெற்றியாளராக கானா வினோத் மாறுவார் என ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து கானா வினோத் வெளியேறினார்.
கானா வினோத்தின் இத்தகைய செயல் அதிர்ச்சி அளித்தாலும், அப்பணம் தனது குடும்ப சூழ்நிலையை மாற்றுவதற்குத் தேவை என்பதால் பெட்டியில் உள்ள பணமே போதும் எனக் கருதி, அதனை எடுத்துக்கொண்டு வெளியேறியதாக கானா வினோத் குறிப்பிட்டிருந்தார்.
பசியுடன் இருப்பவன் பிரியாணி வரும் என காத்திருக்க மாட்டான். கஞ்சியோ, கூழோ எது கிடைத்தாலும் முதலில் அதனை உண்டு பசியாற்றிக்கொள்வான் என தனது செயலை விளக்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சாண்டி மாஸ்டரும், கானா வினோத்தின் பணப்பெட்டி எடுத்த ஆட்டம் குறித்துப் பேசியிருந்தார். வெற்றி பெற்றிருக்க வேண்டியவன், பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாய் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
நீண்ட நாள்கள் நண்பர்களாக இருந்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கானா வினோத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சாண்டி நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக சாண்டி மாஸ்டரை கானா வினோத் குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார்.
அப்போது, மகளுடன் சாண்டி இருக்கும் புகைப்படத்தை நூல்களில் நெய்து பரிசாகவும் அளித்துள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.