விக்ரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. தன் வீழ்ச்சியின் சாம்பலில் இருந்து அவ்வப்போது உயிர்த்தெழுவார். அப்படி எழ பாலா, ஹரி, ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இதற்கு முன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவரது சினிமா கிராஃபை கவனித்தால் அவ்வப்போது உற்சாகமாக மேலே ஏறி மீண்டும் அவ்வப்போது பாதாளத்தில் வீழ்ந்திருப்பதைக் கவனிக்கலாம்.
இந்த ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும்போதெல்லாம் அதை டீஃப் ஃபிரை செய்ய சில இயக்குநர்கள் உற்சாகக் கத்தியுடன் தயாராக இருப்பார்கள். 2015-ல் விஜய் மில்டன் (பத்து எண்றதுக்குள்ள). இப்போது ஆனந்த் ஷங்கர். இப்படி செத்து செத்து விளையாடும் ஆட்டத்தை விக்ரம் ஏன் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.
இருமுகன் எதைப் பற்றியது?
ஜேம்ஸ்பாண்ட் வகையிலான ஒரு திரைப்படத்தை தமிழில் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் சீன் கானரி காலத்திலிருந்து பல ஹாலிவுட் திரைப்படங்களில் கதறக் கதற உபயோகப்படுத்தப்பட்டு விட்ட இந்தப் பாணி திரைக்கதையை மீண்டும் தூசு உதறி நவீன நுட்ப சாகசங்களுடன் திறமையாகவே சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், தவறாக அசெம்பிள் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரில் விபரீதமாக பயணம் செய்த அலுப்பே மிஞ்சுகிறது.
***
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு தாத்தா உள்ளே நுழைகிறார். அவர் திடீரென 'இந்தியன்' தாத்தாவாகி பாய்ந்து பாய்ந்து அங்குள்ளவர்களைக் கொன்று போட, இந்திய அரசு தரப்பில் பதற்றம் ஏற்படுகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட போராக இந்தச் சம்பவத்தை இந்தியா கருதுகிறது. தாத்தா சண்டை போட்ட வீடியோவை ஆராயும்போது அவர் கழுத்தின் பின்பகுதியில் ஒரு பிரத்யேக 'லவ்' சின்னம் காணப்படுகிறது.
அபாயகரமான மருந்துகளைக் கண்டுபிடித்து சர்வதேச அளவில் விற்பனை செய்துவந்த 'லவ்' எனப்படும் அதிபயங்கர வில்லனின் குழு அடையாளக் குறி அது. ஆனால், இந்திய உளவுத்துறையால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னே அவன் சாகடிக்கப்பட்டு விட்டான். அவனுடைய தொழிற்சாலையும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவர், அகிலன் வினோத் என்கிற இந்திய உளவுத்துறை அதிகாரி. இவருக்கு மட்டுமே 'லவ்' குறித்தான அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் இந்த ஆபரேஷனில் அவருடைய மனைவியை இழந்த துயரத்தில் முரட்டுத்தனமான ஆசாமியாகி விட்டதால் அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது 'லவ்' விவகாரம் மீண்டும் உயிர்தெழுந்திருப்பதால் அதைத் திறமையாகச் சமாளிக்க 'அகிலனின்' உதவி நிச்சயம் வேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பணத்துக்காக மனிதச்சண்டைப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரை தேடிப்பிடித்து அழைத்து வருகிறார்கள். உளவுத்துறை பணிக்கு மீண்டும் திரும்ப அகிலனுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் மனைவியைப் பறிகொடுத்த ஆபரேஷன் தொடர்பானது என்பதால் ஒப்புக் கொள்கிறார்.
அகிலன் வினோத் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தாரா? அவருடைய மனைவியின் மரணத்துக்குக் காரணம் என்ன? யார் இந்த லவ்? நான்கு வருடங்களுக்கு முன் முடிந்த போன விவகாரம் ஏன் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது ஆகிய விஷயங்களை ஆக்ஷன் மசாலாவில் தோய்த்து தந்திருக்கிறார்கள்.
***
விதம்விதமான ஒப்பனைகளை இட்டு தன் பாத்திரங்களில் வித்தியாசம் தர முயன்ற முன்னோடியான சிவாஜி கணேசனைத் தொடர்ந்து ஒப்பனையைத் தாண்டி தன் உடலையும் பாத்திரத்துக்கேற்றபடி வருத்தி மாற்றிக்கொள்பவர் கமல்ஹாசன். அவரைப் பின்தொடரும் அடையாளம், விக்ரம்.
இப்படி அர்ப்பணிப்புடன் கதாபாத்திரங்களுக்காக தங்களின் உடல்களை மாற்றுவது ஒருபுறம் பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் அது எந்த அளவுக்குத் திரைக்கதைக்குத் தேவையானது, எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும். இதை ஒரு ஜிம்மிக்ஸ் ஆகப் பயன்படுத்தக்கூடாது. திரைக்கதை கோரும் விதத்தில்தான் பாத்திரங்கள் உருவாகவேண்டும். 'வித்தியாசமான' பாத்திரங்களைத் தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப திரைக்கதையைப் பூசி மெழுகக்கூடாது. தசாவதாரம் அப்படி நிகழ்ந்த ஒரு விபத்து.
'இருமுகனில்', 'லவ்' எனப்படும் பாத்திரத்தில் ஒரு பெண்ணின் மெலிதான நளினத்துடனும் வித்தியாசமான ஒப்பனையுடனும் விக்ரமே நடித்திருக்கிறார். அபாரமான பங்களிப்பு. பிளாஸ்டிக் முகம் போல இருந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விட முடியாதபடியான உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஒப்பனை என்று துல்லியமான வேறுபாட்டைப் பின்பற்றியிருக்கிறார். 'கழுத்தின் எந்த இடத்தில் வெட்டினால் எத்தனை நிமிடத்தில் உயிர் போகும்' என்று விளக்கியபடியே நித்யா மேனனை சாவகாசமாகக் கொல்லும் காட்சியில் அவரிடமிருந்து வெளிப்படும் நளினமான குரூரம் அபாரம். போலவே பெண்களின் கழிப்பறையில் இருந்து வெளியே வரும் இன்னொரு காட்சி.
இப்படி சிலபல காட்சிகளில் 'லவ்' பாத்திரத்தின் வசீகரம் மிளிர்ந்தாலும், சுவாரசியம் அளிக்காத ஒட்டுமொத்த ரைக்கதையினால் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணாகி விடுவதைக் காண பரிதாபமாகத்தான் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் 'தாத்தா' கூட விக்ரம்தானோ என்று சந்தேகத்துடன் பார்த்து பின்பு தெளிவானேன்!
***
அகிலன் வினோத் என்கிற அண்டர்கவர் உளவு ஆசாமியாக இன்னொரு விக்ரம். மனிதர் எப்படி இத்தனை ஃபிட் ஆக இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நவீன ஒப்பனை, உடை, சிகையலங்காரத்தைத் தாண்டி முகத்தில் அலுப்பு தெரிகிறது. போலவே நயன்தாராவும். படத்தின் இதர இடங்களில் கெமிக்கல் விஷயங்கள் வருகின்றன. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித வேதியியல் சமாச்சாரமும் நிகழவில்லை. விவாகரத்து ஆன தம்பதியினர் போல விலகலாகவே வந்து போகிறார்கள். மலேசிய போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையாவின் கோணங்கித்தனங்களை இந்திய சினிமாக்களில் மட்டுமே காண முடியும். மலேசிய நாட்டின் வெளியுறவுத்துறைத் துறை ஆட்கள் இந்தத் திரைப்படத்தைக் காணாமலிருப்பது நமக்கு நல்லது. மலேசியப் பின்னணியில் ரித்விகா வரும் காட்சிகளைப் பார்த்தால் 'கபாலி' பார்ட் 2 சினிமாவில் உட்கார்ந்திருக்கிறோமோ என்று சந்தேகமே வந்துவிடுகிறது.
ஆக்ஷன் காட்சிகளை அபாரமாக பதிவு செய்வதில் ஆர்.டி.ராஜசேகரின் காமிரா எப்போதுமே சோடை போகாது. இதிலும் அப்படியே. ஆனால் பாடல் காட்சிகளில் விக்ரம் மற்றும் நயனுக்கு, மூக்கு ரோமம் எல்லாம் தெரியும்படி அமைத்திருக்கும் அத்தனை குளோசப்களைத் தவிர்த்திருக்கலாம். மழுங்கடிக்கப்பட்ட இரண்டு முகங்களை அத்தனை நெருக்கத்தில் பார்க்க நமக்கே ஒருமாதிரி குறுகுறுவென்றிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு வழக்கம் போல அதிர்ஷடமில்லை. பாடல்கள் தவறான இடங்களில் எரிச்சலூட்டும்படி அமைந்திருப்பதால் நிதானமாக ரசிக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து மெல்ல மெல்ல ஹிட் ஆக வாய்ப்புண்டு.
***
'லவ்' பாத்திரம், ஸ்பீட் என்கிற விறுவிறுப்பு மருந்தை இன்ஹேலரில் ஒளித்து 'பல நாடுகளுக்கு’ ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் தீவிரவாதச் செயல்களை வீரியத்துடன் நிகழ்த்தமுடியும் என்பது இதன் தாத்பர்யம். இந்த விஷயத்தைத்தான் படம் முழுவதும் பல சாகசங்களின் மூலம் ஹீரோ தடுக்க முயல்கிறார். ராமாயணத்தில் வாலி என்கிற பாத்திரத்தோடு மோதுபவர் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் அவருடைய பலத்தில் பாதி பங்கு வாலிக்கு வந்துவிடும் என்கிற வரத்தைப் போல, ஹிட்லர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாம் இது. இரண்டாம் உலகப் போரில் தனது படைகள், எதிரிகளுடன் மூர்க்கத்துடன் சண்டை போட கண்டுபிடிக்கப்பட்ட வீரிய மருந்து.
'இருமுகன்' படத்தில் சித்தரிக்கிறபடி இந்த மருந்தை உறிஞ்சுபவர்கள், எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் மிகச்சரியாக ஐந்து நிமிடத்துக்கு மட்டும் அசகாய சூரனாகி விடுவார்கள். உடலுக்குள் அந்தளவுக்கான அட்ரினலினை தூண்டிவிடுகிறது இந்த மருந்து. இதை அருந்திவிட்டு ஒருவரை ஒரு குத்து குத்தினால் அவர் தென்னை மர உயரத்துக்குப் போய் 'பொத்'தென்று கீழே விழுகிறார். இயக்குநர் இதை ஏதோ இந்தப் படத்தில் புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் சித்தரிப்பது அத்தனை பெருமையானதாக இல்லை. ஏனெனில் தமிழ் பட ஹீரோக்கள் பலகாலமாகவே அப்படித்தான் இயங்குகிறார்கள். பத்து பதினைந்து 'ஸ்பீடு மருந்து இன்ஹேலர்களை' ஒரே சமயத்தில் எடுத்தது போன்று இவர்கள் செய்யும் சாகசங்கள் நமக்குப் பழகி விட்டதால் இந்த மருந்து விஷயமெல்லாம் நமக்கு அத்தனை பிரமிப்பாகத் தோன்றவில்லை. அதிலும் இந்த விஷயத்தில் தெலுங்குப் பட நாயகர்கள் சாதாரணமாகவே செய்யும் அதிசாகசக் காட்சிகளைப் பார்த்தால் ஹிட்லரே வெட்கிக் கண்ணீர் மல்குவார்.
இந்த ஸ்பீட் மருந்தை, ஹாரிஸ் ஜெயராஜூக்கும் ஒன்றிரண்டு தந்து விட்டார்களோ என்னமோ. ஆவேசமாக ஒலிக்கும் பின்னணி இசையில் நமக்கே வெறியேறுகிறது. 'பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி' என்கிற விளம்பரம் போல நயன்தாரா உடபட இதில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவ்வப்போது இந்த மருந்தை ஏற்றிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார்கள். நமக்கும் கூட இப்படியொரு மருந்தை உட்கொண்டால்தான் இத்திரைப்படத்தைத் தாங்கும் திறன் ஏற்படும் போலிருக்கிறது.
வெகுஜன மசாலா இயக்குநர்தான் என்றாலும் இந்த மாதிரியான சமயங்களில்தான் ஷங்கர் போன்றவர்கள் ஏன் முக்கியமானவர்கள் என்பதும் திரைக்கதைக்காக மெனக்கிடுவது எத்தனை முக்கியம் என்பதும் நமக்குப் புரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.