திரை விமரிசனம்

தப்பித்தாரா உதயநிதி? கலகத் தலைவன் - திரைவிமர்சனம்

சிவசங்கர்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும்  ‘கலகத் தலைவன்’ இன்று வெளியாகியுள்ளது.

கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகன் திரு (உதயநிதி ஸ்டாலின்). அந்நிறுவனம் உலகிலேயே அதிக மைலேஜ் தரக்கூடிய லாரி ஒன்றை தயாரிக்கிறது. ஆனால், அந்த வாகனத்திலிருந்து வெளியேறும் புகை காற்று மாசுப்படுதலை அதிகரிக்கும் எனத் தெரிய வருகிறது. 

இதை ரகசியமாக வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், சில நாள்களிலேயே இந்த உண்மை செய்தியாக வந்ததும் அந்நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்புகள் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கிறது. 

சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தெரிந்த இந்த ரகசியம் எப்படி வெளியே கசிந்தது? யார் இதைச் செய்கிறார்கள்? என்கிற கேள்விகளோடு படம் நகர்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிவரை அதற்கான முடிச்சுகளை காரணங்களை கச்சிதமாக கூறியிருக்கிறார் இயக்குநர்.

அமைதியான அதேநேரம் மிகவும் இறுக்கமான கதாபாத்திரத்தில் உதயநிதியும், கொலை செய்யவே பிறந்ததைப்போல கொடூர வில்லனாக பிக்பாஸ் புகழ் ஆரவ்வும் திரையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஆரவ் சிலரை சித்தரவை செய்யும் காட்சிகளில் கண்களை மூடும் அளவிற்கு மிரட்டியிருக்கிறார்.

சில காட்சிகளில் இயக்குநர் மகிழ் திருமேனியின் சிந்தனை வியக்க வைக்கிறது. அரசு தன் சொத்தை குறைந்த மதிப்பில் ஒரு கார்பரெட் நிறுவனத்திற்கு விற்பதால் மறைமுகமாக எத்தனை பேர் பாதிப்பைச் சந்திக்கிறார்கள் என்கிற கருவை மிகச் சிறப்பாக உணர வைத்திருக்கிறார்.

குறிப்பாக, அவருடைய ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ உள்ளிட்ட படங்களில் இறுதியில் ஒரு பொருளை வைத்து மிகப்பெரிய ’டுவிஸ்ட்’ கொடுத்திருப்பார். இப்படத்திலும் கிளைமேக்ஸ் காட்சியில் ‘அட’ என யோசிக்க வைத்திருக்கிறார். இயக்குநராக மகிழ் திருமேனிக்கு மீண்டும் வெற்றி.

படத்தின் பலமாக திரைக்கதை இருந்தாலும் முதல்பாதி தொய்வைத் தருகிறது. ஊகிக்கக்கூடிய சில காட்சிகள், மனதில் நிற்காத பாடல்கள் பலவீனம். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

உதயநிதி நாயகி நித்தி அகர்வால் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதிலும் பெண்கள் வைத்திருக்கும் கைப்பையை வைத்தே அவர்களின் குணங்களைக் கூறும் காட்சிகளில் கைதட்டு விழுகிறது. 

நம்மைச் சுற்றி என்ன மாற்றிக்கொண்டிருந்தாலும் அடிப்படையாக நம்முடைய குணம் பெரிய மாற்றங்களைச் சந்திக்காது என்கிற எண்ணத்தைத் நாயகனின் சிறுவயதின் குணத்திலிருந்து அட்டகாசமாக ஒவ்வொரு காட்சியிலும் கடத்தியிருக்கிறார் இயக்குநர். 

மொத்தத்தில் படம் எப்படியிருக்கிறது? தன்னால் உருவான கலகத்திலிருந்து தப்பித்திருக்கிறார் உதயநிதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

SCROLL FOR NEXT