கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் ஜே.கே. சந்துரு இயக்கத்தில் நகைச்சுவைத் திரைப்படமாக சிறிய தாமதத்திற்குப் பின் வெளியாகியுள்ள திரைப்படம் ரிவால்வர் ரீட்டா! காத்திருப்பு பலனளித்ததா? பார்க்கலாம்..!
படத்தின் டிரைலர் வெளியானபோது பரவலாக எந்த எதிர்பார்ப்பையும் படம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் டார்க் காமெடி என்ற Tag-உடன் வெளியானதாலும், இயக்குநரின் சரஸ்வதி சபதம் படம் நினைவுக்கு வந்ததாலும் நல்ல Entertainerஆக இருக்கும் என்ற எண்ணம் உருவானது!
"Karma Is A Boomerang" எனத் துவங்கும் படம், நிலம் வாங்குவதில் மோசடியாளர்களிடம் சிக்கி 2 கோடி ரூபாயைத் தொலைத்து தற்கொலை செய்துகொள்வதிலும், 2 ரவுடி கும்பல்களுக்கு இடையேயான சண்டையில் ஆந்திராவைச் சேர்ந்த ரவுடியின் தலை துண்டாக்கப்படுவதிலும் தொடங்குகிறது. இந்த இரண்டு மரணங்களும் என்னென்ன பிரச்னைகளை உருவாக்குகின்றன, எப்படி ஒன்றோடொன்று இணைகின்றன என்ற கேள்விக்கான பதிலை நோக்கிய பயணமாகவே படம் ஆரம்பிக்கிறது.
ஆனால் புதுவையின் மிகப்பெரிய ரவுடியான டிராகுலா பாண்டியன் போதையில் வீடு மாறி, ரீட்டாவின் (கீர்த்தி சுரேஷ்) வீட்டிற்குள் புகுந்துவிடுவதால் ஏற்படும் பிரச்னைகளாகவே படம் நகர ஆரம்பிக்கிறது. டிரைலரில் காட்டியதுபோல உள்நுழைந்த ரவுடி நடுவீட்டில் இறந்துவிட, அந்த பிணத்தோடு ரீட்டாவின் குடும்பம் என்ன செய்கிறது, அவரைத் தேடும் அவரது ரவுடி மகன்கள் இந்தக் குடும்பத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதையாக விரிகிறது. இதற்குள் அந்த Karma மேட்டரையும் நேக்காக இணைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்!
முதலில் படத்தில் முக்கிய ஆளாக இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ்! அவரைப் பற்றி பார்க்க வேண்டுமெனில், அந்தக் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை எந்தக் குறையுமில்லாமல் வழங்கியிருக்கிறார். நகைச்சுவைக் காட்சிகளிலும் சரி, BGMஉடன் ஆக்சன் காட்சிகளிலும் சரி நன்றாக பொருந்திவிடுகிறார். இந்த படத்திற்கு ஏற்ற மீட்டரில் நடித்து முடித்து ரசிகர்களை மனம் நிறைய வைக்கிறார். அடுத்ததாக, அம்மாவாக வரும் ராதிகா, மகள்களாக காயத்ரி, அக்சதா, ரவுடிகளாக சுனில், சென்ட்ராயன் உள்ளிட்டோர் போலீஸாக வரும் ஜான் விஜய் என அனைவருமே இயக்குநர் கேட்கும் நடிப்பைக் கொடுத்து படம் சோதிக்காமல் நகர உதவியுள்ளனர்.
ஆனால்…
இதுபோன்ற படங்களில் உச்சபட்ச லாஜிக்குகள் பார்க்க வேண்டியதில்லை, நகைச்சுவைகள் நன்றாக இருந்தாலே போதுமானது எனப் புரிந்துகொள்ளும் அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் காமெடிக் காட்சிகளுக்கு ஏற்படும் சிறிய பஞ்சம்தான் படத்தின் மார்க்கை மக்களிடம் குறைக்க ஆரம்பிக்கிறது. இதற்கு இயக்குநரும் எழுத்தாளருமான ஜே.கே. சந்துருதான் பொறுப்பேற்க வேண்டும்.
மிகப்பெரிய ரவுடி, ஒரு சாதாரண குடும்பத்தின் வீட்டிற்குள் வந்து இறந்துவிடுகிறார். அந்தக்க் குடும்பம் எந்த பிரச்னையும் இல்லாமல், இதிலிருந்து எப்படி மீளப்போகிறது? என படம் நகரும் களம் நல்ல சுவாரசியமான, நகைச்சுவைக்கு ஏற்ற இடமாகத் தெரிந்தாலும், குறைவான அல்லது WorkOut ஆகாத நகைச்சுவைகள்தான் இந்தப் படத்தை பெரிய வெற்றியிலிருந்து தள்ளிவிடுகிறது. பல இடங்களில் பார்த்து பழகிப்போன நகைச்சுவைகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதால், காமெடிகளையும், சில சமயங்களில் Mute பண்ணப்பட்ட காமெடிகளில் Dark-ஐயும் தேட வேண்டியதாயிருக்கிறது. அதிலும் ரெடின் கிங்ஸ்லி படத்தின் முக்கால்வாசி நேரத்தில் தொந்தரவாகவே தெரிகிறார். அதற்கு அடுத்தபடியாக மூத்த மகளின் கணவனாக வரும் பிளேடு சங்கரைப் பயன்படுத்திய விதம் கொஞ்சம் அயர்ச்சியே!
அடுத்ததாக கதையோடு ஒன்ற கதாபாத்திரங்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டிய காட்சிகள் மிகக் குறைவே! அவர்களுக்காக பரிதாபப்படவோ, அல்லது பெரிய டுவிஸ்ட்டுகளில் அதிரவோ, முடியாதபடியே பார்வையாளர்கள் நகர்த்தப்படுகிறார்கள். படத்தில் முக்கியக் கதாபாத்திரம் யாராவது இறந்தால்கூட அதிர்ச்சியடைய முடியாத அளவில் படம் கொஞ்சம் தள்ளி நின்றபடியே நகர்கிறது. கீர்த்தி சுரேஷைப் பற்றியோ, சுனிலைப் பற்றியோ, டிராகுலாவுக்கு மகனுடனான தொடர்பைப் பற்றியோ கொஞ்சம் கூட தொடாததுகூட இதற்கான காரணமாக இருக்கலாம்!
ஆனால் இப்படி ஒரு மிகச் சாதாரண கதையை கொட்டாவி வராமல் கொண்டு செல்வது என்பது பெரிய வேலை. அதை ஜே.கே. சந்துரு மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள்! ஆனால் குழப்பமில்லை, படத்தின் முடிவில் கேள்விகள் இல்லை! எல்லாவற்றையும் சேர்த்து நகர்த்தி முடிவில் முடிச்சை அவிழ்த்து சிறப்பான வேலையையே செய்திருக்கிறார். பல Layer-களை சரியாக நகர்த்திதி முடித்துவைக்கிறார்.
அடுத்ததாக பேசவேண்டிய ஆளாக படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இருக்கிறார். கைதேர்ந்த வேலையை படத்தில் செய்துள்ளார். ரீட்டாவை அழகாகக் காட்டும் காட்சியும் சரி, ஆக்சன் காட்சிகளும் சரி, அவருடைய வேலைபாடு சிறப்பானதாகத் தெரிகிறது.
அடுத்ததாக இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார். அவருடைய “டச்” படத்தில் எங்குமே தெரியவில்லை. இசையமைப்பாளர் யார் எனத் தேடும்போது ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. குறையாகச் சொல்லுமளவில் இல்லை என்றாலும், நன்றாகப் படிக்கும் மாணவன் எடுக்கும் மார்க்கைப் போல் தெரியவில்லை!
மொத்தமாக சொல்ல வேண்டுமெனில் ஒரு நல்ல நகைச்சுவை படத்திற்கான எல்லா அம்சங்களையும் கொண்டு, நகைச்சுவை மட்டும் குறைவு என்பதால் திரையில் திணறும் நிலையை அடைகிறாள் இந்த ரிவால்வர் ரீட்டா!
எனினும் நல்ல பொழுதுபோக்கும், ஒருசில நல்ல நகைச்சுவைகளும் இடம்பெற்றிருப்பதால் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய அளவிலான படமென்ற பெயரையும் வாங்குகிறது! படக்குழுவுக்கு வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.