ஸ்பெஷல்

கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் சிதைந்த கூடு சத்யஜித் ரேவின் 'சாருலதா’வாக எப்படி உருமாறியது? புனைவு எது, நிஜம் எது?

வி. உமா

உலகப் புகழ்ப் பெற்ற ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் இந்தியர் சத்யஜித் ரே. இன்று (மே 2) அவரது பிறந்த தினம். அவரை கொண்டாடும் சமயத்தில் அவர் இயக்கிய படங்களுள் அவருக்கு மிகப் பிடித்த படமான சாருலதாவைப் பற்றிய எனது திரைப்பார்வை இது.

அந்த மிகப் பெரிய மாளிகை போன்ற வீட்டில் தன்னுடன் உரையாட யாருமற்ற நிலையில் சோம்பலான மதியப் பொழுதில் கையில் தொலைநோக்குக் கருவியில் தெருவில் போவார் வருவோரை வேடிக்கைப் பார்த்து பொழுதைக் கழிக்கிறாள் அழகான பெண்ணொருத்தி. அவளின் தனிமை நூற்றாண்டுப் பெண்களின் தனிமை. சிந்தனைகள் தீப்பற்றி எழுகையில், கற்பனைகள் கரை புரண்டு பொங்கி எழுகையில், இளமை கொடிகட்டி பறக்கையில் எதற்கும் வடிகால் இல்லாமலும், செய்வதற்கு ஏதுமற்ற நிலையில் துயரம் கவியும் மாலை நேரத்தை எவ்விதம் அந்தப் பெண் கழிப்பாள்? ஒரு நாள் இரண்டு நாள் மட்டுமில்லாமல் வாழ்நாள் முழுவதும் தனிமையின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டால் அவளின் நிலை என்னவாகும்? தனிமையில் இனிமை காண முடியும் என நினைப்பவர்கள் அதை விருப்பத் தேர்வு செய்தவர்களாகத் தான் இருக்கக் கூடும். அதுவே கட்டாயமாகப்படுமாயின் அதன் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தை விடக் கொடியதாகவே இருக்கும். கடிகார முட்களின் மேல் விழிகள் நிலைத்திருக்க உறையச் செய்ய முடியாத கால வெளிக்குள் தனிமை ஊசலாடிக் கொண்டேயிருக்கும். பற்றுவதற்கு ஓர் கரம் கிடைத்தால் கூட போதும், சொர்க்கத்தின் ஏதோ ஒரு பகுதி திறந்துவிட்டது போலவே அத்தனிமை மனம் மகிழும். புறக்கணிப்பும், பிரியத்தை வெளிப்படுத்தக் கூட நேரமின்மை என நேசமில்லாமல் போனதுதான் மனிதர்களை இத்தனை தூரம் தனிமை கொள்ள வைக்கிறது. 

சாருலதா தனிமைவாசி. அவளது கணவர் பூபதி பெரும் பணக்காரர். நேர்மையே உயிர் மூச்சாக தீவிரத்துடன் அரசியல் பத்திரிகை ஒன்றினை நடத்தி வருபவர்.எந்த நேரமும் அவருக்குத் தன் வேலை மட்டுமே மிகவும் முக்கியம். உணவு, உறக்கம், மனைவி என எல்லாம் அதன் பிறகுதான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து எல்லோரும் நல்வாழ்க்கை வாழ தன் பத்திரிகை எழுச்சி கொள்ளச் செய்யுமானால் அதைவிட வேறு எதுவும் தனக்கு வேண்டாம் என தன்னலமற்று உயர்ந்த லட்சியத்துடன் போராடி வருபவர் பூபதி. தன் தொழில்தான் முதல் மனைவி என விளையாட்டாக சாருவிடம் அடிக்கடி சொல்லுவார். சாரு படித்தவள், பெரும் ரசனைக்காரி. பூபதி வாங்கி வைத்திருந்த அத்தனை புத்தங்களையும் அவர்களுக்கு திருமணம் ஆன சில நாள்களிலேயே அவள் கரைத்துக் குடித்துவிட்டாள். புதிய சஞ்சிகைகளை பூபதி வாங்கித் தந்தாலும், புத்தகங்களையே எத்தனை நேரம் வாசித்திருப்பது? பூபதியின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து சலித்த வாழ்க்கையை அலுப்புடன் வாழ்கிறாள் சாரு. அவளின் தனிமையை அறிந்து ஏதும் செய்ய முடியாத பணிச் சூழலில் பூபதி ஒரு யோசனை சொல்லி சாருவின் அண்ணன் உமாபதனையும் அவன் மனைவியையும் இவர்கள் வீட்டிலேயே தங்கச் செய்கிறான்.

அண்ணியின் வருகை முதலில் அவள் தனிமையை கொஞ்சம் போக்குவதாக இருந்தாலும், சாருவால் அவளுடன் தொடர்ந்து பேச முடியவில்லை. அவளுடனான மதிய நேர சீட்டாட்டங்கள் மனச் சோர்வையும் எரிச்சலையுமே சாருவுக்கு அளித்தன. அவளிடமிருந்து சற்று விலகியே இருந்தாள். அண்ணியின் அரட்டைப் பேச்சுகளைவிட தனிமையே அவளுக்கு உகந்ததாகிவிட்டது. தன் அறையில் படுத்திருந்தபடி ஏதேதோ கற்பனையில் லயித்திருப்பாள் சாரு. இளமையில் உடலின் தினவென்பது மனத்தின் சோம்பலும் கூடத்தான். செய்வதற்கு ஏதுமில்லாதபோது கற்பனை பாழ்வெளியில் அலைந்து திரியும் பறக்க விரும்பும் தனிமைப் பறவையெனத் தன்னை நினைத்துக் கொள்வாள் சாரு. இந்நிலையில் பூபதியின் ஒன்றுவிட்ட தம்பி அமோல் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அண்ணனிடம் ஏதேனும் வேலை செய்யலாம் என கல்கத்தாவிற்கு வருகிறான். அண்ணனுக்கும் தம்பியை உடன் வைத்துக் கொள்ள ஆசை. தன்னுடைய பத்திரிகையில் பிழை திருத்தம் பார்க்க விருப்பமா எனக் கேட்கிறார். ஆனால் இலக்கியத்தின் மீது நாட்டமுடைய அமோலுக்கு அந்த பத்திரிகை அலுவலம் சிறையைப் போலவே தோன்றுகிறது. மேலும் கவிஞன் எனும் அடையாளத்தை தேட முயன்று கொண்டிருப்பவனுக்கு அவ்வேலை விருப்பமான ஒன்றாக இருக்கவில்லை. அமோலைக் கட்டாயப்படுத்தாமல் வீட்டில் தங்கி விருப்பம் போல இரு என சொல்கிறார் பூபதி. மேலும் சாரு வாசிப்பானுபவம் மிக்கவள் அவள் தனிமையில் வாடுகிறாள், அவளுடன் உரையாடி முடிந்தால் அவளை ஏதாவது எழுதச் செய்யப் பயிற்சி கொடு என தம்பியிடம் கேட்டுக் கொள்கிறார் பூபதி. அமோல் சரியென்று வீடு வந்து சேருகிறான்.

சாருவிடம் மெல்ல மெல்ல கவிதை பற்றியும் இலக்கியத்தைப் பற்றியும் பேச ஆரம்பிக்கிறான். அவனுக்காக அழகான வேலைப்பாடுகள் செய்த நோட்புக்கை தானே தைத்துத் தருகிறாள் சாரு. அவன் எழுதும் கவிதைகளில் பிழை கண்டுபிடிக்கிறாள். அவன் நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்கள் ஏன் எழுதக் கூடாது என அவளை தூண்டுகிறான் அமோல். தன்னிடம் எழுதுவதற்கு விஷயங்கள் ஏதுமில்லை என்கிறாள் சாரு. அவளின் கிராம வாழ்க்கை, குழந்தைப் பருவம், சந்தை என எதாவது எழுத வேண்டியதுதானே என யோசனை சொல்கிறான் அமோல். ஆனால் அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்றாடும் நிகழும் உரையாடல்களின் பொழுதுகளை மனத்துக்கு மிகவும் நெருக்கமாக உணர்கிறாள் சாரு. யாருமற்ற தன் வெளியில் அறிவுச் சுடரொன்றை ஏந்தியபடி இளைய ஒருவன் கூறும் சொற்கள் ஒவ்வொன்றும் அவளது பாழ்நிலத்தில் பூக்கின்ற மலர்களாகின்றன. அழியாத கோலமாகிவிட்டிருந்த அவளது தனிமை மெள்ள கரையத் தொடங்கியது.

சாருவின் அசாதாரண அழகும் அறிவும் முதலில் அமோலின் பார்வைக்குத் சிறப்பாகத் தென்படவில்லை. பூபதியின் மனைவி என்ற நிலையில்தான் அவன் அவளைப் பார்த்தான். ஆனால் சாருவின் மனதிற்கு அழகான அந்த இளைஞனின் ஒவ்வொரு அசைவும் பிடித்துவிட்டது. அவன் அவளை அறியாமலேயே அவளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். அவர்களின் தோட்டத்தில் தினந்தோறும் மாலையில் சுவையான உணவிற்கிடையே கணக்கற்ற கவிதை வாசிப்புக்களும், கேலிப் பேச்சுகளும், ஊஞ்சலில் தன்னை மறந்து சாரு ஆடும் போது அவளின் உற்சாகமும், ஏதோ ஒரு மாய கணத்தில் அமோலின் வசீகரத்தை முழுக்க தனதாக்கிக் கொள்ள வேண்டுமெனும் அவளின் வேட்கையும் அவனை நோக்கி பனியைப் போல மெள்ள உருகத் துவங்கின. அவளது உறக்கத்தின் கடைசி நினைவாகவும், விழிப்பின் முதல் முகமாகவும் அமோல் மாறிக் கொண்டிருந்தான்.

திடீரென மாறிவிட்ட சாருவின் அன்பும் நெருக்கமும். அமோலிற்கான அவளின் பார்வைகளும் பிரத்யேக அக்கறைகளும் குழந்தையைப் போல களங்கமில்லாமல் இருந்த அமோலின் மனதை குழப்பமடையச் செய்தது. அதெல்லாம் தன் கற்பனை சரியாக வராது என அவனின் புத்திக்கு தெரிந்திருந்தது. ஆனால் மனம் கேட்கவில்லை. வலிய ஒரு பெண் அதுவும் பேரழகி, அறிவாற்றல் மிக்கவள், மிகவும் தாழ்ந்து போய் தன்னிடம் வரும் போது ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது எவ்விதம் என மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறான். சாருவிற்கு அவனது மெளனம் எரிச்சலை தருகிறது. ஆவேசமாக அவள் சில கவிதைகளை எழுதி, அமோல் சிலாகிக்கும் இலக்கிய பத்திரிகை ஒன்றுக்கு அனுப்புகிறாள். அதை அவர்கள் உடனே பிரசுரம் செய்துவிடவே, அப்பிரதியை எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு வருகிறாள். எதுவும் சொல்லாமல் அதை வாசித்த அமோலுக்கு பிரமிப்பு, தேர்ந்த எழுத்து, ரசனையான வரிகள், எளிமையுடன் புதுமையான சொல்லாடல்கள் என அக்கவிதை ஆகப் பிரமாதமாக வந்திருக்கவே, மனம் திறந்து சாருவைப் பாராட்டுகிறான் அமோல்.

தான் நினைத்ததைவிட சாரு திறமை மிக்கவள் என உணர்கிறான். வெடிக்கும் அழுகையின் ஊடே சாரு இனி ஒரு போதும் தான் எழுதப் போவதில்லை, இந்த எழுத்தின் மூலம் அவள் அடைய விரும்புவது அமோல்தான் எனச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறாள். அதன் பின் ஏதோவொரு மனநிலையில், ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஈர்ப்பாலும், தவிர்க்க முடியாத காதலாலும் சாருவின் கைகளில் மாலையாகினான் அமோல். குற்றவுணர்வும் காதலும் எதிர் எதிரே நிற்க காதல் கள்ளத்தனமாய் உட்புகுந்து அவர்களை நல்லிதயங்களை கூராக்கி பிளந்து அதில் கிளைத்து அமர்ந்து கொண்டது. அதன்பின்னான இரவுகள் பகல்களில் ஏதும் தனிமையின் கொடும் கரங்கள் சாருவை தீண்டவில்லை. ஆனால் அதைவிட கொடிய நாகமொன்று அவளது மூளைக்குள் பதுங்கி தனது தீநாவுகளினூடே விஷக் கங்குகளை அவளுள் புகுத்திக் கொண்டிருந்தது. 

எது சரி எது தவறென புத்திக்குத் தெரிந்திருந்தாலும் மனதுக்கு தெரிய விடாமல் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள் இருவரும். இந்நிலையில், அமோலுக்கு திருமணம் செய்ய பூபதி அவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட சாரு மனக்கலக்கம் அடைகிறாள். வெளியில் அவனுக்குத் திருமணம் செய்துவைப்பது தான் சரியென சொன்னாலும் உள்ளுக்குள் சுக்கு நூறாக உடைந்து சிதைந்து உருமாறிக் கொண்டிருந்தாள். ஆனால் அமோல் அந்த திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் பூபதியின் சொத்துக்களை, உமாபதன் திருடிவிடவே அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் பூபதி. தன் மனைவியின் அண்ணன் என்பதால் வழக்கு ஏதும் போடாமல் மன்னித்து சொத்துடனே அனுப்பி வைக்கிறான். சாரு தன் கணவனின் பெருந்தன்மையில் நெகிழ்ந்து போகிறாள். முன்பு போல பத்திரிகையையும் நடத்த முடியாமல் நம்பிக்கை துரோகங்களால் மனம் உடைந்து போகிறார் பூபதி. அவர் அனுமானித்திருந்த சில விஷயங்கள் கைகூடி வராமல் போகவே நிலைதடுமாறி பெரும் பணத்தைத் தொழிலில் இழக்கிறார் அவர். அண்ணனின் தற்போதைய நிலைக்குத் தான் தான் காரணம் என மனம் குமைந்து இதற்கு மேல் அங்கிருப்பது சரியில்லை என முடிவு செய்து, உருக்கமாக ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நள்ளிரவில் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுகிறான் அமோல்.

அமோலின் கடிதத்தை வாசித்த பூபதிக்கு சங்கடமாகிவிடுகிறது. என்ன நேர்ந்துவிட்டது இவன் இப்படி ஒரு முடிவை எடுக்கும் அளவிற்கு என புலம்பியபடி கடிதத்தை சாருவிடம் தருகிறார். பூபதியின் முன் கடிதத்தை சாதாரணமாக வாசித்த சாரு, அவனிடம் கவலைப்பட வேண்டாம், அவன் கட்டாயம் திரும்பி வந்துவிடுவான் என சொல்லிவிட்டு அவன் அவள் அறையை விட்டு அகன்றதும் வெடித்துக் கலங்கி வாய் விட்டு அழுது அரற்றுகிறாள். எதற்கோ திரும்பி அறைக்கு வந்த பூபதி இக்காட்சியைக் கண்டு அதிச்சியடைகிறார். ஒரு நொடியில் அமோலின் மறைவிற்கும், சாருவின் அழுகைக்கும் அர்த்தம் புரிபட மனம் நொந்து, வந்த சுவடு தெரியாமல் அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார். உள்ளுணர்வின் உந்துதலில் அழுகையை நிறுத்திவிட்டு சாரு திரும்பிப் பார்க்கிறாள்..யாருமில்லை.. வெளியே ஓடிவந்து பார்க்கிறாள் தளர்ந்த நடையில் பூபதி சற்று தூரத்தில் செல்வதைப் பார்க்கிறாள்.

மனம் போன போக்கில் அலைந்து திரிந்த பூபதி இரவில் வீடு வந்து சேர்கிறார். சாரு அவரை வரவேற்கிறாள். அவர் சாருவின் கைகளை பற்றுவதோடு காட்சி
உறைகிறது.

மனித மனங்களில் தோன்றும் சலனங்களை இதைவிட கூர்மையாகவும், அதே சமயம் நுட்பமாகவும் திரையில் சொல்வது மிகக் கடினம். அக்கடினமான பணியை அனாசயமாகத் தன் திறமையால் செய்துமுடித்தவர் இந்தியாவின் ஒப்பற்ற இயக்குனர் சத்யஜித் ரே. ‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் ரே அடிப்படையில் ஒரு ஓவியர். பிரஞ்சு மொழித் படமொன்றின் படப்பிடிப்பைக் காண நேர்ந்தவருக்கு திரைப்பட இயக்குநராகும் ஆசை தோன்றி தன் மனதை பின் தொடர்ந்து இந்தியத் திரையுலகில் பிதாமகன் ஆனார். இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்டவராக சிறந்த ஆளுமையாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டவர் ரே.

உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் அவர்தான். அவ்விருதை 1991-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில், ஆஸ்கார் குழு சிறந்த இயக்குனருக்காக 'ஆஸ்கார் விருது’ சத்யஜித் ரே பெறுகிறார் என அறிவித்தது. உலகின் தலைசிறந்த விருதாகக் கருதப்படும் இவ்விருதை, நேரில் பெற விரும்பினார் ரே. ஆனால் கடுமையான உடல்நலக் குறைவால் அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இரண்டு நபர் கொண்ட ஆஸ்கார் விருதுக் குழு சத்யஜித் ரே அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து ஆஸ்கார் விருதினை அவரிடம் ஒப்படைத்தனர். இது போன்றதொரு சம்பவம் ஆஸ்கார் சரித்தரத்தில் இடம் பெற்றதில்லை எனலாம். காரணம் அத்தகைய மகத்தான கலைஞனின் கெளரவிக்கும்படியாக இச்செயல் அமைந்தது. சத்யஜித் ரேயின் முக்கிய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’, ‘மகாநகர்’,‘சாருலதா’ உள்ளிட்ட பல படங்கள் உலகத் திரைப்பட ஆர்வலர்களின் விருப்பப் பட்டியலில் என்றென்றும் இடம்பெற்றிருக்கும். இந்தியாவின் உயரிய விருதுகளான ‘பாரத் ரத்னா’, ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார் சத்யஜித் ரே. 

சாருலதாவின் ஒவ்வொரு காட்சியையும் வெகு நேர்த்தியாகவும் துல்லியமாகவும் கவித்துத்துடன் திரையாக்கம் செய்திருக்கிறார் ரே. தான் இயக்கியுள்ள திரைப்படங்களில் ரேவிற்கு மிகப் பிடித்தமான படமாக சாருலதாவைத் தான் குறிப்பிடுவார். மகாகவி தாகூரின் குறுநாவலான சிதைந்த கூடு (The Broken Nest)  திரைக்கதையாக்கி என்றும் அழியா திரைக்காவியமாக உருமாற்றிவிட்டார் ரே. சிதைந்த கூடு புதினத்தில் தனிமையிலேயே வாழும் நுண்ணுர்வுள்ள நாயகியின் மனவோட்டங்களையும், அவளது திறமைகளையும், அழகியல் உணர்வுகளை மற்றும் ரசனை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற உறவினன் அமோலின் மேல் காதல் கொள்கிறாள் சாருலதா. மூலக் கதையை உள்ளவாறே சிதைக்காமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்திலும் சமூக கட்டுப்பாடுகளும் குற்றவுணர்வும் மனித மனங்கலை ஆட்படுத்த அவரசமாக முளைத்த அந்தக் காதல் அவசரமாகவே முடிந்தும் போகிறது. குருதேவ் என்று வங்காளிகள் கொண்டாடும் மகாகவி தாகூர் தம் சொந்த வாழ்விலிருந்து சில பக்கங்களை உருவி எடுத்து எழுதிய புதினம் இது. ஆம் அமோல் கதாபாத்திரத்தின் சாயல் ரவீந்திரருக்கும் உண்டு. அவருடைய அண்ணன் ஜோதீந்திரநாத்தின் மனைவி காதம்பரிக்கும் அவருக்கும் இடையே மின்னலென தோன்றி மறைந்த மாறாத பிரியத்தின் கதையது.  

மகாகவியின் கதை அதி அற்புதக் கலைஞனான ரேவை அசைத்ததில் வியப்பெதுவும் இல்லை. இப்புதினத்தின் திரைவடிவம் மிகப் பெரும் கலைப் படைப்பாக உருமாறி காலத்தால் அழியாப் புகழ் பெற்றுவிட்டது. சாருலதா திரைப்படத்தில் பூபதியாக சலேன் முகர்ஜியும், அமோலாக செளமித்ர சாட்டர்ஜியும், சாருலதாவாக மாதவி முகர்ஜியும் இக்கதையை வேறு ஒரு தளத்திற்கு தங்கள் மிகையற்ற நடிப்பாற்றலால் உயர்த்தியுள்ளனர். தனிமையின் துயரும், மென் சோகமும், சாருவின் எழிலும் இயல்பாக மாதவியிடம் இருப்பதை நன்குணர்ந்து அப்பாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்திருக்கிறார் ரே. இப்படத்தில் நடிக்கும் போது ரேவுக்கும் மாதவி சாட்டர்ஜிக்கும் ஏற்கனவே தொடங்கியிருந்த நேசம் ஆழமாக கிளைவிட்டது. அவரது மனைவி ரேவின் இந்த மனமாற்றத்தினைப் பொறுத்துக் கொண்டாலும், அவரது பத்து வயது மகன் அதனை ஏற்கவில்லை. மகன் மீதான பாசத்தால் திருமண உறவை மீறிய காதலை விட்டுக் கொடுத்தார் ரே. ஆனால் அவர் மனத்துக்குள் மாதவியின் மீதான நேசத்தை அவர் ஒரு போதும் மறந்தவரில்லை. சாருலதாவில் காணப்படும் திரைக் காட்சிகளுள் மறைந்துள்ளது மகத்தான படைப்பாளிகளான தாகூர் மற்றும் ரேயின் அழியாக் காதல் உணர்வுகள். அதுவே காலம் தோறும் மனித உயிர்களை வாழ்தலுக்காக செலுத்துகிறது.  

சுற்றிலும் ஆயிரமாயிரம் மனிதர்கள் இருந்தாலும் தனிமையான ஒரு மனதின் தேடலுக்கு இரை எதுவெனும் கேள்வியை எழுப்புகிறது சாருலதா. 1964-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அதே ஆண்டு பெர்லினில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த இயக்குனருக்கான ‘வெள்ளிக் கரடி விருதினை’ ரேவிற்குப் பெற்றுத் தந்தது. அதனை அடுத்து 1965-ம் ஆண்டு ‘தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினையும்’ வென்றது.

சத்யஜித் ரேயின் பிற திரைப்படங்கள், ‘பரஷ் பதர்’ (1958),  ‘தேவி’ (1960), ‘தீன் கன்யா’ (1961), ‘கஞ்சன்யங்கா’ (1962), ‘அபிஜன்’ (1962), ’மஹாநகர்’ (1963), ‘சாருலதா’ (1964), ‘மஹாபுருஷ்’ (1965), ‘காப்புருஷ்’ (1965),  ‘நாயக்’ (1966), ‘சிரியாக்கானா’ (1967), ‘கூப்பி கைன் பாகா பைன்’ (1968), ‘அரான்யர் டின் ராத்ரி’ (1970), ‘சிக்கிம்’ (1971), ‘சீமபத்தா’ (1971), ‘த இன்னார் ஐ’ (1972), ‘ப்ரதித்வந்தி’ (1972), ‘அஷானி சங்கத்’ (1973), ‘சோனார் கெல்லா’ (1974), ‘ஜன ஆரண்ய’ (1976), ‘பாலா’ (1976), ‘ஷத்ரன்ஜ் கெ கிலாடி’ (1977), ‘ஜொய் பாபா பெலுநாத்’ (1978), ‘காரே பைரே’ (1984), ‘சுகுமார் ராய்’ (1987), ‘ஞானஷத்ரு’ (1989), ‘ஷாக புரொஷகா’ (1990),‘அகந்துக்’ (1991) . சுமார் முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ள சத்யஜித் ரேவின் அனைத்துப் படங்களும் அவருக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றது. இந்தியத் திரைப்படங்களுக்கு கவனம் கிடைக்கச் செய்தவர் ரே எனலாம். எளிமை, எதார்த்தம், கலை அம்சம், இயல்பான மனித இயல்புகள் என அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் காவியத்தன்மையுடனும் கலாபூர்வமாகவும் உருவாக்கப்பட்டவை. காலத்தை வென்ற படைப்புக்களாக அவை திகழும் காரணம் அவர் படங்களில் காணப்படும் அழகியலும், எதார்த்தமான கதை சொல்லும் முறையும், கலை அமைதியும் எனலாம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக ஆழமான தடம் பதித்தவர் ரே. அவரது படங்கள் மூலமே உலக சினிமாவின் கூறுகளை திரை வல்லுநர்கள் கற்றுக் கொண்டு பின் பற்றுகிறார்கள். அன்றும், இன்றும், என்றென்றும் சத்யஜித் ரே ஒரு சகாப்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT