தினமணி 85

சொக்கலிங்கம் ஓர் போர் வீரர்!

ப. இராமசுவாமி

ஆசிரியர் சொக்கலிங்கம் நல்ல கம்பீரமான தோற்றமுள்ளவர்; ஆஜானுபாஹு திட சரீரம் உடையவர். அவருடைய விசாலமான நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு எப்பொழுதும் ஜொலித்துக் கொண்டேயிருக்கும். அவருடைய உடைகள், சாமான்கள் எல்லாம் மிகச் சுத்தமாக இருக்கும். கைக்குட்டை முரட்டுக் கதராயிருந்தாலும், அதற்கு ஸென்ட் போடாமல் அவர் உபயோகிப்பதில்லை. அவர் யார் என்று தெரியாவிட்டாலும், அவரைப் பார்த்ததும் எழுந்து வரவேற்க வேண்டிய ஆசாமி என்று தோன்றும்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பாஷைகளில் நல்ல பயிற்சியுள்ள ஓர் அம்மையார், தமது ஞாபகக் குறிப்புப் புத்தகத்தில், ஒரு ஜூன் மாதம் 13-ம் தேதி "இன்று நான் ஒரு கனவானைச் சந்தித்தேன்' என்று எழுதி வைத்திருக்கிறார். அந்தக் கனவான்தான் சொக்கலிங்கம். அவர் தம் இருப்பிடத்திற்கு வருகிறவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிப்பார். எப்பொழுதும் வாயை விட்டு அதிகமாக வெளிவராத ஒரு சிரிப்பு அவர் முகத்தை அழகு செய்து கொண்டிருக்கும். இன்சொல் அவரது இயற்கை.

ஸ்ரீ சொக்கலிங்கம் சர்வ கலாசாலையை எட்டிப் பாராதவர். அவருடைய பள்ளிப் படிப்பு ஆறாம் வகுப்புதான். இப்படியிருந்தும் அவர் இன்று தமிழ்நாட்டின் சிங்கம்போல் விளங்குகிறார். ஆசையும் முயற்சியும் எவ்வளவு வெற்றியைக் கொடுக்கும் என்பதற்கு அவரே அத்தாட்சி. ஆங்கிலத்திலுள்ள இலக்கியம், அரசியல் பொருளாதார சம்பந்தமானநூல்கள், பத்திரிகைகள் பலவற்றையும் அவர் ரசித்துப் படித்திருக்கிறார்; படித்துக் கொண்டும் இருக்கிறார்.

"பத்திரிகைத் தொழிலில் சொக்கலிங்கம் அபார வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய "தினமணி'யை ஒருநாள் படிக்காவிட்டால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உற்சாகமில்லாமல் வருந்துவார்கள். பேனாவே அவருடைய ஆயுதமாகும். வாளுக்குப் பெருமை என்றால், அது எத்தனையோ பேருடைய உதிரம் தோய்ந்திருக்க வேண்டும். அவருடைய பேனாவுக்கும் அது பொருந்தும்.

சிறுவயதில் அவருடைய தந்தையார் நடத்தி வந்த மளிகைக் கடையில் பொட்டலம் சுற்றிக் கொடுக்க வைத்திருந்த பழைய ஆங்கிலப் பத்திரிகைகளை அவர் இடைவிடாமல் படித்து வந்தாராம். அவைதாம் அவருடைய பாடப் புத்தகங்கள்.

சொக்கலிங்கத்தின் குடும்பம் கெளரவம் வாய்ந்த புராதனக் குடும்பமாகும். இவரிடமுள்ள விருந்தினரை உபசரித்தல், அண்டினவர்களுக்கு இயன்ற உதவி செய்தல் முதலியவை. இவருடைய சொந்தச் சொத்தில்லை; குடும்பத்திலிருந்து வந்த பிதுரார்ஜிதம் . சுமார் 48 வருஷங்களுக்கு முன் நடந்த சிவகாசி நாடார் - மறவர் சண்டைகள் காரணமாகத் தென்காசியில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் துன்புற்றவர்களுக்கெல்லாம் ஆசிரியரின் தந்தை அபயமளித்து ஆதரித்திருக்கிறார்.

1905-இல் சுதேசிக் கலகம் நிகழ்ந்தபோது, ஆசிரியரின் தந்தை தென்காசி ஸ்ரீ சங்கரலிங்கம் பிள்ளை அவர்களின் வீடே தேசிய வீரருக்குத் தாயகமாக விளங்கி வந்தது. வீட்டுக்கு லட்சணம், அடையாத கதவு; கிரகஸதருக்கு லட்சணம், அன்போடு அழைத்து ஆதரித்தல் என்பதை அவர் வாழ்க்கை முழுதும் நிதர்சனமாகக் காட்டியிருக்கிறார். வங்கதேச பக்தர் காலஞ்சென்ற விபின் சந்திர பாலர் போன்றோருக்கும் அவருடைய செல்வம் உதவியளித்தது.

ரெளலட் கமிட்டி அறிக்கையில் திருநெல்வலி சுதேசிக் கலகத்தைப் பற்றிய சில குறிப்புக்களைக் காணலாம். அந்தக் கலகம் சம்பந்தமாக நமது ஆசிரியரின் மூத்த சகோதரர் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை தண்டிக்கப்பட்டுச் சிறையிருந்தார். 1914-இல் தான் அவர் விடுதலையானார்.

தமிழர்களின் ஆதி தேசிய தினசரியான "சுதேசமித்திர'னுக்கும் சொக்கலிங்கம் குடும்பத்தாருக்கும் நெடுநாள் தொடர்புண்டு. "சுதேசமித்திரன்' வெள்ளி விழாவுக்கு அவர்கள் காணிக்கை அனுப்பியிருந்தார்கள். அதன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யர் குற்றாலத்தில் கைதானபொழுது, அய்யர் விரும்பிய உதவிகள் புரிந்தார்கள்.

ஆசிரியருக்கு இப்பொழுது வயது நாற்பத்தொன்று. சிறு வயது முதலே அவருக்குத் தேசிய ஆர்வம் உண்டு. 1918-இல் அவர் காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் வசித்திருந்தார். அதன் பிறகு சத்யாக்கிரகப் பிரசாரம் தொடங்கி, இன்றுவரை இடைவிடாது காங்கிரஸுக்கும், தேசத்திற்கும் தொண்டு செய்து வருகிறார். ஜவுளிக் கடை, கள்ளுக்கடை மறியல்களிலெல்லாம் அவருக்கு வெகு உற்சாகம். எந்த மறியல் செய்தாலும் சரி, கடைக்காரர் மேற்கொண்டு அந்தச் சரக்கை விற்பதில்லை என்று உறுதிமொழி கொடுக்கும்வரை விடுவதில்லை.

1928 முதல் "தமிழ்நாடு' பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து எட்டு வருஷம் அவர் செய்துள்ள சேவையைத் தமிழ்நாடு நன்கறியும். பின்னர் "காந்தி' தோன்றியது. அந்தக் காலணாப் பத்திரிகை செய்துள்ள வேலையை நூறு பிரசாரகர்கள் சேர்ந்தாலும் செய்து முடித்திருக்க முடியாது. 1934 செப்டம்பர் மாதம் "தினமணி' ஆரம்பித்ததிலிருந்து சொக்கலிங்கம் அதன் ஆசிரியராக இருந்து வருகிறார்.

பொதுவாகக் குணங்களைப் பற்றி எழுதும் பொழுது "குணாதிசயங்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் உண்மையிலேயே அதிசயிக்கத் தகுந்த குணங்கள் அமைந்திருக்கின்றன.

 "ராமன் ஆண்டால் என்ன,
 ராவணன் ஆண்டால் என்ன,
 கூடவந்த குரங்கு ஆண்டால் என்ன?'

என்பது ஒரு பழமொழி. சொக்கலிங்கம், "ஆண்டால் ராமன்தான் ஆளவேண்டும்; இல்லாவிட்டால் ராவணனே ஆண்டுவிட்டுப் போகட்டும்' என்பார். ஒருக்காலும் கூடவந்த குரங்கு ஆளச் சம்மதிக்கமாட்டார். நம்மில் பலர், குரங்கு ஆள்வது கூடியவரை ஜனநாயகத்தை ஒட்டிவருமே என்று திருப்தி அடைவோம். அவர் ஒப்ப மாட்டார்.

தன்னம்பிக்கையும், சுய முயற்சியுமே துணையாகக் கொண்டு நமது காலத்தில் இவ்வளவு உன்னத பதவிக்கு வந்தவர்கள் அபூர்வம். சொக்கலிங்கத்துக்குத் தம்மிடத்திலே பூரண நம்பிக்கை உண்டு. ஜனங்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பதிலும், காலம் போக்காமல் உடனே முடிவுகள் செய்து செய்கையில் இறங்குவதிலும் அவர் சமர்த்தர். ஜனங்கள் அவருக்கு வெடிமருந்து; ஜனங்களுக்கு அவர் அனல்பொறி. பொதுவாகத் தலைவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருப்பவை தைரியக் குறைவும், துரிதமாகத் துணிந்து தீர்மானிக்க முடியாத தயக்கமுந்தான். இவ்விரண்டு குறைகளும் அவரிடம் கிடையா. தைரியத்துக்கு மறுபெயர்தான் சொக்கலிங்கம். அவர் இரும்பு உள்ளம் படைத்தவர். எத்தகைய எதிர்ப்புக்கும் அவதூறுக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். அவரைப் பார்த்தாலே ஒருவருக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். மனதிலுள்ள கவலைகள் ஒழியும்.

அவர் மன நிம்மதிக்காக எந்தத் தத்துவத்தினிடமும் சரண் புகுவதில்லை. தத்துவம் என்பது ஏதேனும் வேண்டியிருந்தால், அவராகவே அவ்வப்பொழுது படைத்துக் கொள்கிறார். இதற்கு அடிப்படை அவருடைய பொது ஜனத் தொடர்பு. வாழ்வு என்பது அவருக்குப் புதுமை நிறைந்தது. பழங்காலம் அதற்கு வழி காட்டாது. தாடி நரைத்தற்காக மட்டும் அவர் ஒருவரைப் பெரியவர் என்று ஏற்றுக் கொள்வதில்லை. பழமையிலிருந்து அவர் விடுபட்டு ஓடிவிட்டதால்தான், அவர் மிகுந்த சக்தி பெற்று விளங்குகிறார்.

1937-இல் அவர் சட்டபேரவைத் தேர்தலுக்கு நின்ற சமயத்தில் ஒருநாள் இரவு, அவருடைய தேர்தல் காரியாலயத்திற்குப் போயிருந்தேன். ஆயிரக்கணக்கான பணம் செலவழித்து, வாக்காளர்களைத் தேர்தல் ஸ்தலங்களுக்குக் கொண்டு வர வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி அங்கு பலரும் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். போதிய பணம் இல்லை. பொழுது விடிவதற்கு முன் கார்களுக்கு பெட்ரோல் வாங்கி ஊற்ற வேண்டும். எல்லோர் முகத்திலும் கவலை குடிகொண்டிருந்தது. ஆனால், அங்கே ஒருவர் மட்டிலும் மத்தியில் படுக்கையில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். அவர்தான் சொக்கலிங்கம். கவலை என்பது அவர் அகராதியிலேயே கிடையாது.

"காந்தி' பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கும்பொழுது சில சமயங்களில் கடன்காரர்கள் அவரைத் தொந்தரவு செய்வார்களாம். பத்திரிகையின் விலை காலணா. கொள்கையோ, பத்திரிகையை நித்திய கண்டத்திற்கு உள்ளாக்குவது. ஆயிரக்கணக்காய் இதில் பணம். எங்கே சேரும்? ஆனால் காகிதக் கடைக்காரர்களுக்கு "காந்தி' பத்திரிகை நடந்துதான் தீரவேண்டும் என்பதில் என்ன அக்கறை? கடைக்காரர் "காந்தி' காரியாலயத்திற்கு வசூல் செய்ய வரும் விந்தையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்:
 

கடைக்காரர் -
 என்ன ஸார்! சௌக்கியந்தானே!
 சொக்கலிங்கம் -
 ஆமாம். ஆனால், இன்றைக்கு
 பணம் ஒன்றும் வரவில்லை.
 (இதைச் சொல்லும்பொழுது
 உலாவிக்கொண்டேயிருப்பார்)
 கடைக்காரர் -
 என்ன, இப்படிச் சொன்னால்?
 சொக்கலிங்கம் -
 வேறு எப்படிச் சொல்ல வேண்டும்?
 கடைக்காரர் -
 வரவில்லை என்கிறீர்களே?
 சொக்கலிங்கம் -
 ஆமாம், வரவில்லை, வந்தால்தானே!
 கடைக்காரர் -
 நான் கடையிலே போய்
 முதலாளியிடம் என்ன சொல்ல?
 சொக்கலிங்கம் -
 நான் சொன்னதைச் சொல்லுங்கோ.
 கடைக்காரர் -
 அப்போ நான் வரட்டுமா?
 சொக்கலிங்கம் -
 ஆஹா போய் வாருங்கோ!

எப்பொழுதும் அவர் பெரிய விஷயங்களைப் பெரிய முறையிலேயே சிந்தனை செய்வது வழக்கம். லட்ச ரூபாயில் அச்சுக்கூடம், லட்ச ரூபாயில் ஒரு நல்ல தமிழ்ப் புத்தகக் கம்பெனி, நல்ல ஆர்ட் பேப்பரில் நூற்றுக்கணக்கான சித்திரங்களுடன் தமிழ்ப் பத்திரிகை. இவை எல்லாம் வேண்டுமென்று எண்ணமிடுவார். ஏதோ ஓர் ஆயிரம் தமிழ்ப் பத்திரிகை, புத்தகங்ளைப் போட்டு வீடு வீடாய்க் கொண்டு போய்க் கொடுக்கலாம் என்றால் அவருக்குப் பிடிக்காது. பல்லாயிரம் தயாரிக்க வேண்டும்; தயாரானவுடன் ஜனங்களாக வந்து, "நான் முந்தி, நீ முந்தி' என்று வாங்க வேண்டும். ஆனால், இதற்காக ஜனங்கள் கேட்கிற வெறும் பாட்டி கதைகளைப் போட்டுக் கொண்டிருக்கவும் கூடாது என்பது அவர் கருத்து. சுருக்கமாய்ச் சொன்னால், இந்தத் தொழில் முறைகளைப் பற்றி அவர் அமெரிக்க மோஸ்தரிலேயே சிந்திப்பது வழக்கம். எதையும் கொள்ளை கொள்ளையாய் உற்பத்தி செய்து தள்ள வேண்டும்; எல்லாம் நன்கு மதிக்கத்தக்கவையாயும் இருக்க வேண்டும்.

ஆசிரியர் சொக்கலிங்கம் ஒரு போர் வீரர். ஆனால் பத்திரிகாசிரியப் போர்வையுடன் இருக்கிறார். சண்டையில்லாவிட்டால் அவருக்கு வாழ்க்கையில் உப்புச் சப்பு இருக்காது. பகைவரிடத்தில் அவருக்கு இரக்கம் என்பதே கிடையாது. கம்பீரமான உதாசீனத்துடன் அவர்களை அவர் ஒதுக்கித் தள்ளுவார். தம்மிடம் காயம் பட்டவர்களைப் பற்றி அவர் சிந்திப்பதே இல்லை. சண்டை போடும் முறையில்தான் அவருக்கு உற்சாகம். ராஜீய விரோதிகளிடமும், நிமிஷந்தோறும் நிறம் மாறும் அரசியல் ஓணான்களிடமும் அவர் காட்டும் கல் நெஞ்சத்தையும், கொடுமையையும் கண்டு சிலர் அங்கலாய்ப்பதுண்டு. இது ஆசிரியர் என்ற முறையில் மட்டும் அவர் செய்வதில்லை. அவர் தாம் மட்டுமின்றி, தேசமே போர்க்களத்தில் நிற்பதாக எண்ணுபவர். நாடு வேற்றாருக்கு அடிமை. ஜனங்களில் பெரும்பாலாரோ, "வாழ்வாவது மாயம்!' என்று இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நம் தமிழ் நாடெங்கும் ஒன்றுக்கும் உதவாத "பரஸ்பரத் தற்புகழ்ச்சிச் சங்கங்கள்' ஏற்பட்டு நிலைத்திருக்கின்றன. வாழ்க்கையில் சுவையோ லட்சியமோ இல்லாத மனக் குரூபிகளின் ஆதிக்கம் ஜனங்களின் மேல் கொலு வீற்றிருப்பது இன்னும் கலையவில்லை. இந்நிலைமைகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, நாம் சொக்கலிங்கத்தின் கொடுமையைப் பற்றி யோசிக்க வேண்டும். இருபது வருஷமாகத் தாம் ஒரு கோரப் போரில் இறங்கியிருப்பதாக அவர் எண்ணம். அந்தப் போரின் கோரமே அவரிடத்திலிருந்தும் பிரதிபலிக்கிறது.

சொக்கலிங்கத்தின் பிரசங்கங்கள், எதிர்ப்பு இல்லாவிடில் ரசிப்பதில்லை. மேலும் பிரசங்கத்தை அவர் தொழிலாகக் கொண்டவரில்லை. தேர்தலின்போது திருநெல்வேலியில் அவர் செய்த சில சொற்பொழிவுகளும், பிறகு இலங்கையில் செய்த சில சொற்பொழிவுகளும் மிக நன்றாயிருந்தன. ஏனெனில் திருநெல்வேலித் தேர்தலில் தளவாய் முதலியார் எதிர்த்தார். இலங்கையில சில இடங்களில் ஹிந்தி எதிர்ப்பு இருந்தது.

பத்திரிகைகளுக்குள்ளே போட்டி வந்தால்தான் அவருக்கு குஷி பிறக்கும். "சுதேசமித்திரன்' பொன்விழாவின்போது, நகரங்களிலெல்லாம், "இது காங்கிரஸ் தோன்றும்முன் தோன்றியது' என்று விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. பிறகு அந்த விளம்பரங்களுக்குப் பக்கத்தில் "தினமணி' விளம்பரங்களும் காணப்பட்டன. அவற்றில் "தினமணி கிழடு தட்டியதல்ல' என்று அச்சிடப்பட்டிருந்தது.

சமூக விஷயங்களில் அவர் பெரும் புரட்சிக்காரர். வகுப்பு வாதம், குறுகிய மதப் பிரிவுகள் முதலியவை அவருக்கு அருவருப்பானவை. ""கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வகுப்பு வீதாசார முறை அனுஷ்டிக்கப்படுகிறதா?'' என்று சட்டசபையில் கேட்டவர் இவர்தான்.

பத்திரிகைத் தொழிலில் சொக்கலிங்கம் அபார வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய "தினமணி'யை ஒருநாள் படிக்காவிட்டால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உற்சாகமில்லாமல் வருந்துவார்கள். பேனாவே அவருடைய ஆயுதமாகும். வாளுக்குப் பெருமை என்றால், அது எத்தனையோ பேருடைய உதிரம் தோய்ந்திருக்க வேண்டும். அவருடைய பேனாவுக்கும் அது பொருந்தும்.

இவருடைய வாசகம் யாருக்கும் புரியக் கூடியது. நேராக நெஞ்சில் பாய்ந்து பதியக்கூடியது. அதில் வழவழப்பே இருப்பதில்லை; அலங்காரங்கள், வளைவுகள், நெளிவுகளும் இருக்க மாட்டா. ஒருபொழுதும் இவர் உபதேசம் செய்வதில்லை. தாம் எண்ணுவதை எழுத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஜனங்களின் மனதில் ஒட்ட வைக்க வேண்டும் என்பதே இவர் நோக்கம். தாம் தினசரிப் பத்திரிகையில் எழுதுவதெல்லாம் இலக்கியப் பொக்கிஷங்கள் என்றோ, தமது பத்திரிகை ஒரு சர்வகலாசாலை என்றோ இவர் மயக்கம் கொள்ளுவதில்லை. இவருடைய அபிப்பிராயங்கள், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே வெளிவரும். முட்டாளை அவர் "ஸ்ரீமான் முட்டாள்' என்று எழுதுவது கிடையாது. யாராவது "இப்படிப் பச்சையாய் எழுத வேண்டாமே!' என்று சிபாரிசு செய்தால், முன்னால் "வடிகட்டின' என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுவார். பச்சை பச்சையாக உண்மையை உள்ளபடியே சேர்மானமின்றிக் காட்டுவதிலேயே இவருக்குப் பிரீதி.

அவருடைய எழுத்து ஜனங்களின் மனத்தைக் கவரக் கூடியது; உணர்ச்சியோடு வெளிவருவது. உலக ராஜீய விஷயங்களைக் காட்டமாகவும் சாரமாகவும் தமிழில் கொடுப்பதற்கு அவர் எத்தனையோ பரீட்சைகள் செய்து வருகிறார். புது வார்த்தைகள் கண்டுபிடிக்கிறார். பண்டிதர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டு ஜனங்களிடையே மட்டும் நிலைத்திருக்கிற "கொச்சை'ச் சொற்களை கூசாமல் உபயோகிக்கிறார். பழைய வார்த்தைகளைப் புதிய பொருளுடன் உபயோகிக்கிறார். "மீர்ஜாபர்கள்', "உதிரிக்கட்சி', "அமோகமான ராஜ வரவேற்பு', "கும்பல்', "கல்தா', "பினாமி', "சண்டித்தனம்', "சவால்' முதலிய வார்த்தைகளெல்லாம் அவர் நடத்தும் பத்திரிகையில் உயிரும் புதுமையும் பெற்றுவிட்டன.

"பத்திரிகைக்குப் பணம் போட்டவர் யாராயிருந்தாலும் சரிதான், "எழுத்து சம்பந்தப்பட்ட மட்டில் அவர்தான் பத்திரிகைக்குச் சொந்தக்காரர்' என்று சொக்கலிங்கத்தைப் பற்றி ஸ்ரீ சிவராமன் கூறுவார். இவர் சொக்கலிங்கத்துடன் பதினைந்து வருஷமாய்ப் பத்திரிகை தொழிலில் நெருங்கிப் பழகுகிறவர்.

ஆசிரியர் சொக்கலிங்கம் தினசரி செய்ய வேண்டிய கடமைகளில் எதையும் பாக்கி வைப்பதில்லை. மாலை 3 மணிக்கு மேல் அவர் மேஜையின் மீது ஒரு துண்டுக் காகிதங்கூட இருக்காது. இது அவசியமில்லை. ஆனால், அந்த மேஜையைப் போலவே ஆபீஸ் கவலைகள், வேலைத் தொல்லைகள் இல்லாதபடி, தம் மனத்தையும் அதேநேரத்தில் சுத்தமாக்கி விடுவதுதான் ஆச்சரியமானது. இது வெகு சிலருக்கே சாத்தியம். ராத்திரித் தூக்கத்திலும் "லெப்ட் ரைட்' போட்டுக் கொண்டிருக்கும் போலீஸ்காரன், மறுநாள் என்ன வேலைக்கு லாயக்காயிருப்பான்?

‘பேனா மன்னர் தினமணி டி.எஸ். சொக்கலிங்கம்’ நூலிலிருந்து..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT