விவாதமேடை

"ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு' குறித்து... வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

தினமணி செய்திச் சேவை

வருங்கால சந்ததிகளின்...

ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் திறன்சார் தேர்வு எழுதும் சிரமம் முக்கியமா அல்லது பல லட்சம் வருங்கால சந்ததிகள் திறன் மேம்பட்ட நல்லாசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுவார்கள் என்கிற உத்தரவாதம் முக்கியமா? பள்ளி ஆசிரியர்கள் வாக்குச்சாவடிப் பணியாளர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்கள் மீது கரிசனம் காட்டும் நமது அரசியல்வாதிகளைப் பொருத்தவரை, வாக்காளர்கள் என்பவர்கள் ஏமாளிகள் அல்லது விலைபேசப்படும் பொருள்கள் அவ்வளவே. மாணவர்களைப் பற்றி அவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?

ராமராஜன், திருச்சி.

மேம்படுத்த வேண்டும்

கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் தகுதி மற்றும் கல்வி அறிவை கற்றலின் மூலம் வளர்த்துக்கொண்டே இருப்பது அவசியம் . அப்போதுதான் மாறிவரும் சூழலுக்கேற்ப மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் , கல்வி முறைகளைக் கற்றுத்தர இயலும் . ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன்தான் நல்ல மாணவர்களை உருவாக்குகிறது . ஆகவே, அத்திறனை மேம்பத்திக்கொண்டே இருப்பது ஆசிரியர்களின் தலையாய கடமை. எனவே, பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகச் சரியானதே.

க.மா.க. விவேகானந்தம், அப்பன் திருப்பதி.

பயிற்சிதான் தேவை

'தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக வேலையை ராஜினாமா செய்யலாம். அவர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை, இப்போதே பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதே அளவுகோல், வழக்குரைஞர், டாக்டர், பொறியாளர் ஆகியவர்களுக்கு கிடையாதா என்ற கேள்வி அடுத்து எழலாமே. ஆசிரியர்களை மேம்படுத்த பயிற்சிப் பட்டறைகள் வைக்கலாம், தகுதித் தேர்வு தேவையில்லை. பயிற்சியளித்தலே போதுமானதாகும்

வி.சி. கிருஷ்ணரத்னம்,சென்னை.

அவமதிக்கும் செயல்

பணியைப் பொருத்தவரை தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தேர்வான பின்னர் செய்யும் பணிக்கும் எவ்வதத் தொடர்பும் இருப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். எனவேதான் பணிக்குத் தேர்வான பின்பு அந்தந்தத் துறையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தேர்வு என்பது வேறு பணி அனுபவம் என்பது வேறு. பலவித மாணவர்களுக்கு அணுகுமுறை களத்தில் தேவைப் படுகிறது. ஆனால் பல ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் தகுதித் தேர்வு என்பது அவமதிக்கும் செயலாகும்.

கோ.லோகநாதன், திருப்பத்தூர்.

சரியானதே

ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச் சரியானது. இந்த நீதிமன்ற தீர்ப்பில் சில சலுகைகளுடன் நிபந்தனைகள் விதித்திருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வை தொடர்புடைய மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிப்பதற்காக அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரையும் செய்திருக்கிறது. எனவே இந்த தீர்ப்பு சரியானதே.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

பிற துறைகளுக்கும்...

ஆசிரியர்களின் பணியை வரையறுத்து அவர்கள் கற்றலில் அதிக கவனம் செலுத்தும் படியாக தனிப் பயிற்சி அளித்து அவர்களின் திறனை மெருகேற்ற வேண்டும். கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை விடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. நீதிமன்றத்தின் தீர்ப்புதான் நடைமுறைப்படுத்தப்படும் என்று முடிவெடுத்தால் அதை ஆசிரியர்களோடு நிறுத்தி விடாமல் பிற துறைகளுக்கும் நீட்டிக்க வேண்டும். நீதிபதிகளுக்கும் இத்தேர்வை நீதிமன்றங்கள் நடத்தி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

புத்தாக்கம் பெறும்

ஆசிரியர்கள் தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொண்டால்தான் வருங்கால தலைமுறையினருக்கு பரந்துபட்ட விரிவான தகவல்களை எளிதாக வழங்க முடியும். நல்ல திட்டத்துக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். காலப்போக்கில் மறைந்து வடும். ஓய்வு நிலைக்கு ஐந்து ஆண்டுகள் இருப்பவர்களுக்கு தேர்வில் இருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆசிரியப் பணி என்பது மேன்மேலும் புதிய சிந்தனையுடன் படித்துக் கொண்டே இருப்பதுதான்; புத்தாக்கம் மற்றும் செயலுக்கு வழிவகுக்கும் என்பது வெள்ளிடைமலை. ரெ. சுப்பா ராஜு, கோவில்பட்டி.

வேறு வழிகள் உள்ளன

ஆசிரியர் பணிக்குத்தான் ஏற்கெனவே சில தேர்வுமுறைகள் நடைமுறையில் உள்ளபோது, பணியில் தொடர வேறு ஒரு தேர்வு என்றால் அது அவமானப்படுத்தும் செயல். ஆசிரியரின் பணி சார்ந்த திறனுக்கு வேறு பல சோதனைகள் உள்ளன. மாணவர்களின் பல திறன்களை வளர்க்க அவர்களது பணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வைத்தே ஆசிரியரின் பணித் தகுதியை அளவிட முடியும். நல்ல மதிப்பெண் மட்டுமல்ல, நல்ல ஒழுக்கம், பாடம் சாராத பல்திறன் அறிமுகம், விளையாட்டு பரீட்சயம் எனப் பல உள்ளன.

மகிழ்நன், கடலூர்.

தும்பை விட்டு....

ஒரே பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்குக் கற்பிக்கும் அடிப்படை ஆசிரியப் பயிற்சிகூட இல்லாத தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது என்பது நகைப்பாக இருக்கிறது. பொதுவாக ஆசிரியப் பயிற்சி எனும் தகுதியே இப்பணிக்குப் போதுமானது. அதனால் தகுதித் தேர்வு தேவையில்லாத ஒன்று. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் இந்தக் கதையின் உண்மைத்தன்மை, தேர்வு தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளே தங்களுடைய நியமனம் மற்றும் பதவி உயர்வை இதனுடன் ஒப்பிட்டால் விளங்கும்.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

எதிர்க்கக் கூடாது

நிதிநிலை அறிக்கையில் மிக கணிசமான தொகை கல்விக்கெனவே செலவழிக்கப்படுகிறது.இவை அனைத்தும் பயனுள்ளதாக இருக்கவேண்டுமெனில் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச் சிறந்து விளங்கவேண்டும். அதற்காக அவர்களின் தகுதியைச் சோதிப்பதில் தவறில்லை. தங்கள் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்படும்போது ஆசிரியர்கள் தார்மீக கோபத்துடன் அத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் போவதோ அல்லது அரசிடம் சலுகை கோரி நிற்பதோ இழுக்கு.

ஜகே.ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.

வழக்கமானதுதான்

அரசுப் பணிகளில் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். அது ஆசிரியர்களுக்கும் அவசியம் என்று அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. தகுதித் தேர்வுக்கு முன்னர் ஆசிரியர்களை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கொண்ட ஒரு தொடர்பு வகுப்பில் கலந்து கொள்ள செய்வது அவர்களுக்கு ஒரு மாறுதலாகவும் தங்கள் அறிவுத் திறனை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாகவும் இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்காக ஐ.எஸ்.டி.எம். என்ற ஒரு அமைப்பு பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ஆர். ஹரிகோபி, புது டெல்லி.

அச்சம் வேண்டாம்

தற்போது, மாணவர்கள் ஊடகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த செய்திகளைப் பெற்று வருகின்றனர். மனப்பாடம் என்ற நிலையைக் கடந்து ஆராய்ந்து வருகின்றனர். ஆசிரியர்கள் தாங்கள் கற்ற அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. தகுதித் தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர்கள் மதிப்புடன் கவனிக்கப்படுவர். அறிவார்ந்த, பண்பாடுடைய, திறன் மிக்க தலைமுறையை உருவாக்க கூடிய ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தயாராகி வருவது நல்லது. ஆசிரியர்கள் தகுதி தேர்வு குறித்து அச்சமடைய வேண்டாம் என்று தமிழக முதல்வர் கூறியிருப்பதை கவனத்தில் கொள்வோம்.

ஆ. லியோன்,மறைமலைநகர்.

பணிப் பாதுகாப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒரு திருப்புமுனை ஆகும். ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வினை பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேர்மையான முறையில் நடத்திட ஆவண செய்ய வேண்டும். ஆனால், பொது ஆசிரியர் தகுதித் தேர்வில் மூத்த ஆசிரியர்களையும் களம் காணச்செய்வது சரியல்ல. இந்தத் தீர்ப்பினால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு உறுதி மொழியினை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை.

எஸ்.பி. இளங்கோவன், தென்காசி.

நீதிமன்றமும்...

ஆசிரியர் பணியில் சேர, தொடர தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிச்சொல்லப்போனால் "நீதிமன்றமே...நீங்களுமா?' எனக் கேட்கத் தோன்றுகிறது. கல்விக் கொள்கையை வகுப்பது அரசின் கல்வித் துறை. அந்தக் கொள்கையில் படித்து உயர்பட்டப் படிப்பு முடித்து முனைவர் பட்டம் வரைப் பெற்ற ஒரு நபர் ஆசிரியர் தேர்வில் உரிய மதிப்பெண் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவர்களை தகுதியற்றவராகக் கருதுவது அறிவின்மை. அண்ணா முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் போன்றவர்களுக்குப் பாடம் நடத்தியவர்கள் தகுதித் தேர்வு எழுதியவர்களா?

பி.சுந்தரம், வெண்ணந்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணம் எப்போது? அதர்வா பதில்!

விவசாயிகள் கூட்டத்தில் கோபமடைந்த இபிஎஸ்!

இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

SCROLL FOR NEXT