அமல்படுத்துவதில் வேகம்
முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால், இந்த புள்ளிவிவரம் எத்தனைப் பேருக்கு பயன் அளிக்கப் போகிறது என்பது இந்த முதலீடுகள் செயல்பாட்டுக்கு வரும்போது தெரியவரும். அவை எவ்வளவு சீக்கிரம் செயல்படுத்தப்படும் என்பதை பொருத்துத்தான் முடிவுகள் அமையும். இந்த நடைமுறையில் காலம் தாழ்த்துவது உரிய பலனைத் தராது. எனவே, அமலாக்கக் காலத்தை விரைவுபடுத்துவதில் அரசு இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது, முதல்வரின் பயண வெற்றி அனைவருக்கும் தெரியவரும்.
அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
செயலாக்கம் பெற்றால்தான்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் செய்து அந்நிய முதலீட்டை ஈர்த்து தன் கடமையைச் செய்திருப்பது நல்ல விஷயம்தான். இந்த முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தான் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை செயலாக்கம் பெறும்போதே அதன் உண்மை நிலை வெளிப்படும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை தெரிந்தால்தான் தற்போதைய ஒப்பந்தங்களின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். இதில் ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
வேலைவாய்ப்புகள்
தமிழக முதல்வர் அந்நிய முதலீடுகளை ஈர்த்த செயல் அவரது திறமையையும், மாநிலத்தின் மீதான அக்கறையையும் காட்டுகிறது. மக்கள் வரிப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அந்தப் பயணம் பயனுள்ளதாகவும், மக்களுக்குப் பயன்படும் விதமாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு ரூ.15,516 கோடி முதலீட்டை ஈர்த்து வந்தது பாராட்டுக்குரியது. இந்த முதலீடுகளால் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும். காலத்துக்கும் இந்த நடவடிக்கை பேசப்படும்.
உஷா முத்துராமன், மதுரை.
வளர்ச்சிக்கு உதவும்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தால் அந்நிய முதலீடுகள் தமிழகத்துக்கு வரப்பெற்றிருப்பது மகிழ்ச்சியான நிகழ்வு. இது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பது நிச்சயம். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், அந்த முதலீடுகளைத் தக்கவைப்பது சவாலானது. எனவே, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தேவையானவற்றை தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுத்தால் முதலீட்டின் பலன் 100% கிடைக்கும். புதிய ஆலைகள் தொடங்கப்படுவது ஏராளமானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தும்.
ஆ.ஜுடு ஜெப்ரி ராஜ், கோயம்புத்தூர்.
செயல்பாடு முக்கியம்
முதல்வரின் பயணத்தால் ரூ.15,516 கோடி அந்நிய மூதலீடு ஈர்க்கப்பட்டது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும். விரிவாக்க முதலீடுகள் கணிசமாக இருந்த போதிலும், இன்றைய சூழலில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்புக்கும் இந்த ஒப்பந்தங்கள் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஒப்பந்தங்களை விரைவில் நடைமுறைப்படுத்த மாநில அரசும், அதிகாரிகளும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்க்கும் பலன் கிட்டும்; முதல்வரின் நோக்கமும் நிறைவேறும்; மாநிலத்தின் வளர்ச்சியும் வேகமெடுக்கும்.
கே.ராமநாதன், மதுரை.
வெள்ளை அறிக்கை
ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் நிறைவுபெறும் வேளையில், வெளிநாடுகளுக்கு முதல்வர் பயணித்து, விளம்பரப்படுத்திய அளவுக்கு அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தொழில் வளமும், வேலைவாய்ப்பும் பெருகவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீடுகளை காணொலி கலந்துரையாடல் மூலமே பெறலாம். இதற்கு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் அவசியமா என்ற அவர்களின் கேள்வியிலும் நியாயமிருக்கிறது.
முதலீடுகள் பெருகி தொழில் வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்றால், மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தலாமே!
ஜ.அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.
பெரிய அளவில் பயன்
மாநிலத்தின் வளர்ச்சியில் தொழில் துறையின் பங்கு அவசியமானது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், பிற நாடுகளிலும் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே இங்கே தொழில் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் என அனைவரையும் அவர்களின் இடங்களுக்கே சென்று சந்தித்து உரையாடியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது பயணத்தின் பயன் பெரிய அளவில் மாநிலத்துக்குக் கிடைக்கும் என நம்பலாம். தொழில் வளமும் பெருகும் வாய்ப்புள்ளது.
ந.கோவிந்தராஜன்,
ஸ்ரீமுஷ்ணம்.
முதல்வருக்கு மரியாதை
தன்னை முதல்வர் பதவியில் அமரச் செய்த மக்களுக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் முனைப்புடன் ஜெர்மனி, பிரிட்டனுக்கு பயணித்து, தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரிய தொகையை முதலீடு செய்யத் தயாராக இருப்பது, அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும், தமிழ்நாட்டு மக்கள் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.
பிரகதாம்பாள், கடலூர்.
நம்பிக்கையை அதிகரிக்கும்
அந்நிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான செயலாகவும், தேர்தல் நேரத்தில் இது அரசு மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகமாக்கும் என்றுகூட முதல்வர் நினைத்திருக்கலாம். இந்த முதலீடுகள் முழுமையாகக் கிடைக்கப் பெற்ற பிறகு, அவை எந்தெந்தத் துறைகளில் எவ்வாறு முதலீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொருத்தே அதன் வெற்றியைத் தீர்மானிக்க முடியும்.
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
தேர்தலுக்கான நடவடிக்கை
உள்நாட்டில் திரட்டப்பட்டதாக கூறப்படும் முதலீடுகளின் நிலை திருப்திகரமாக இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி பார்த்தால்கூட வெளிநாட்டுப் பயணங்களால் பெரிதும் பயன் ஏதும் இல்லை. அதனால்தான், எதிர்க்கட்சிகள் இதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துகின்றன.
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சில நிறுவனங்கள் ஏற்கெனவே சென்னையில் இயங்கி வருபவையே. எனவே, இது தேர்தல்கால நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
அமிர்தநேயன்,
உடுமலைப்பேட்டை.
நினைத்துப் பார்ப்பாரா?
வெளிநாட்டு முதலீடுகள் எந்த அளவுக்கு தமிழகத்துக்குப் பயனளிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் முதல்வராக இருந்தபோது, இதே காரணத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். அப்போது, அவர் வெள்ளை அறிக்கை வெளியிட்டாரா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
கா.ராமசாமி, கீழப்பனையூர்.
கடந்த ஆட்சியில்...
இளைஞர்கள் வேலையின்றித் தவிப்பதும், அதனால் பல குற்றச்செயல்களில் ஈடுபடுவதுமான நிலையில், இந்த முதலீடுகளால் சுமார் 17,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால் அதை விமர்சிக்கக் கூடாது. ஒப்பந்தம் செய்துகொண்ட மறுநாளே தொழிற்சாலைகளை அமைப்பதும், இளைஞர்களுக்கு வேலை வழங்கவும் இயலாது. கடந்த ஆட்சியின்போது, 2 கோடி பேருக்கு வேலை என்று உறுதிமொழி கொடுத்த தற்போதைய எதிர்க்கட்சி, எத்தனை பேருக்கு வேலை அளித்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பி.சுந்தரம், வெண்ணந்தூர்.
இலக்கை நோக்கி...
தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுவதாக முதல்வர் கூறிவருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்குச் சென்று ரூ.15,516 கோடி முதலீட்டுடன் இனம், மொழி உணர்வையும் ஊக்குவித்து வந்துள்ளார். இந்திய அளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியத்துவம் பெறுவதைக் காண்கிறோம்.
ஆ.லியோன், மறைமலைநகர்.
அரசியலாக்கக் கூடாது
முதல்வர் ஸ்டாலினின் பயணத்தால் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்ட செய்தி வரவேற்புக்குரியது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் நாட்டில் வேலையிழப்பு ஏற்பட்டுவரும் நிலையில், ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது பாராட்டுக்குரியது. பிற மாநிலங்கள் செய்யாத அரிய செயலாகக் கருதி, இதை அரசியலாகப் பார்க்காமல் மாநிலத்தின் வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.