இயற்கையின் சீற்றம்!
சமீபகாலமாக கடலினுடைய சீற்றம் அதிகரித்து வருகிறது. சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் அலையின் வேகத்தால் கடல்நீர் உள்புகுந்தது. குமரி மாவட்டத்திலும் தொடர்ந்து, தேங்காப்பட்டினம் பகுதியில
சமீபகாலமாக கடலினுடைய சீற்றம் அதிகரித்து வருகிறது. சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் அலையின் வேகத்தால் கடல்நீர் உள்புகுந்தது.
குமரி மாவட்டத்திலும் தொடர்ந்து, தேங்காப்பட்டினம் பகுதியில் உள்ள ராமன் துறை, புத்தன் துறை, கடியப்பட்டினம், குளச்சல், பூத்துறை போன்ற பகுதிகளில் கடல் உள்வந்து வீடுகளும், கிறிஸ்தவ தேவாலயங்களும் சேதமடைந்துள்ளன.
தேங்காப்பட்டினம் ரம்யமான கடற்கரையாகும். இங்கு பொழிமுகம் என்பது ஆறும் கடலும் சங்கமிக்கும் இடமாகும். இங்குள்ள படகு சேவையை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புவது உண்டு.
Advertisement
அங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கடல் உள்வந்துவிட்டது. நாளுக்கு நாள் தேங்காப்பட்டினத்தின் பரப்பு குறைந்து வருகிறது.
அங்குள்ள வள்ளவிளை, தூத்தூர், முள்ளூர், இனயம்புத்தன் துறை, ராஜாக்கமங்கலம் போன்ற கடலோரப் பகுதிகளிலும் கடல் அலைகள் பேரிரைச்சலோடு 25 மீட்டருக்கு மேல் சீறிவந்து அங்குள்ள வீடுகளைத் தரைமட்டமாக்கியது. பல இடங்களில் கடற்கரை சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆனி - ஆடி மாதங்களில் அலைகளின் வேகம் சற்று அதிகமாக இருக்கும். தற்போது அலைகளின் வீச்சுகள் பயங்கரமாக இருக்கின்றன. இதனால் வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தக் கடல் அரிப்பைத் தடுக்க தாற்காலிக நடவடிக்கை இல்லாமல் நிரந்தரமாகக் கடல் அரிப்பு தடுப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தாக வேண்டும்.
அதுபோலவே முட்டம், குமரி முனை போன்ற கடற்கரைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் நெல்லை மாவட்டத்தின் உவரி போன்ற பகுதிகளிலும் கடலின் சீற்றம் அவ்வப்போது ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளான ராமேசுவரம், வாலிநோக்கம், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளிலும் இதே பாதிப்பு ஏற்படுகிறது.
அலைகள் சீறிவரும் கடலை "கத்தும் தரங்கம்' என்று அழைத்தனர். எனவே, கடல் அருகில் இருந்த ஊர் தரங்கம்பாடி என்று மாறியதாகச் செய்திகள் உள்ளன. கடந்த காலங்களில் லெமூரியாக் கண்டம் கடலால் பாதிக்கப்பட்டது. பூம்புகார் நகரம், மாமல்லபுரம், 1964-ல் தனுஷ்கோடி ஆகிய நகரங்களும் கடலின் சீற்றத்தால் அழிந்தன என்பது வரலாற்றுச் செய்திகள்.
கடல் அலைகளை அலைகள், பொங்கும் அலைகள், புயல் அலைகள், சுனாமி என்று வகைப்படுத்தலாம். தட்பவெப்பம், கால மாற்றம் பூமியின் நிலைமைக்கு ஏற்றவாறு இவை ஏற்படுகின்றன.
2004-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் கிழக்குக் கடற்கரை ஓரங்களில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஒரிசா எல்லை வரை இதேபோல இயற்கையின் சீற்றங்கள் நிறையவே ஏற்பட்டுள்ளன. மெரினாவுக்கு அடுத்த நீண்ட கடற்கரையான கடலூர் கடற்கரையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தாழங்குடாவிலிருந்து கடலூர் வரை உள்ள 3 கி.மீ. நீண்ட கடற்கரையை "சில்வர் பீச்' என்று அழைப்பார்கள். இந்த மணற்பரப்பும் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது.
திருச்செந்தூரில் மட்டும் கடல் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கின்ற வித்தியாசமான நிலை காணப்படுகிறது. இந்த இயற்கை மாற்றங்கள் விநோதமாகப்பட்டாலும் இதுகுறித்த அக்கறையோடு, நமது பாதுகாப்புக்காக ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
மீனவர்களும் கடலுக்குச் செல்ல முடியவில்லை. மீன் வளமும் குறைந்துவிட்டது. ஆற்றுநீர் கடலுக்குச் செல்வதால் மீன் வளம் பெருகுகிறது. கடல் அரிப்பைத் தடுக்கவும், கட்டுமரங்களை நிறுத்தவும், கடல் ஆழமுள்ள பகுதிகளில் தூண்டில் வளைவுகள் என்ற அமைப்பைக் கட்ட 1999-ம் ஆண்டில் தமிழகத்திலும், கேரளத்தைப் பின்பற்றி திட்டமிடப்பட்டது. கற்களைப் போட்டு கடல் அரிப்பைத் தடுக்க சுழி உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. காற்று வேகமாக உள்ள பகுதிகளில்தான் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். ஆனால், ஆழமில்லாத, அவசியமற்ற பகுதிகளிலும் தூண்டில் வளைவுகள் அமைப்பதும் கடல் சீற்றத்திற்குக் காரணமாக அமைகிறது.
இந்தியாவில் - தமிழகத்திலும், குஜராத்திலும் தான் முத்து வளம் உள்ளது. குறிப்பாக மன்னார் வளைகுடாவில் "பில்டோ ப்யூக்டோ' என்று அழைக்கப்படுகிற முத்துச் சிப்பிகள் கடற்கரை ஓரத்திலிருந்து 10 - 20 கி.மீ. தூரத்திலும், 14 - 24 கி.மீ. ஆழப் பகுதியிலும் உள்ளன. கடலில் சிப்பிகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் இல்லாமல் போய்விட்டன. கடல் அலைகளின் கொந்தளிப்பால் முத்துச் சிப்பிகள் உருமாற்றம் அடைவதிலும் சிக்கல்கள் உள்ளன.
இன்றைக்கு லட்சக்கணக்கில் முத்துச் சிப்பிகள் சேகரிக்கப்பட்டாலும் அவற்றில் முத்துகள் கிடைப்பதில்லை. முத்துச் சிப்பிகளை எடுக்கப் பயன்படும் மடிவலைகளில் முற்றிலும் உருவாகும் சிப்பிகள் அகப்படுவதில்லை.
கடல் மட்டம் உயருதல், மழைக்காலத்தில் கடும் வெயில், கோடையில் ஒரு சில நேரங்களில் மழை, உலகம் வெப்பமயம் என்ற இயற்கையின் மாற்றங்களை "கிளைமேட் சேஞ்ச்' என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது.
கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், விஜயநாராயணம், சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் போன்ற இடங்களில் அணு சம்பந்தமான கேந்திரங்கள் உள்ளன. கடல்நீர் உயர்ந்து ஆபத்துகள் வந்தால் இந்த அணு நிலையங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் உயிரினங்கள் அனைத்திற்கும் பெரிய கேட்டை உருவாக்கும்.
இன்றைக்கு இமயமலையில் கூட பனிப்பாறைகள் உருகிவிட்டன. கங்கை, சிந்து உற்பத்தியாகும் இடங்கள் மட்டுமல்லாமல், சிரபுஞ்சியில்கூட வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
சுனாமிக்குப் பிறகு நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் தட்பவெப்ப நிலைகளிலும், பருவங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஓசோன் பகுதியில் ஓட்டைகள் உள்ளதாகவும், அதனால் சூரிய வெப்பம் பூமியைத் தாக்குவதாகவும் சொல்கின்றனர்.
ஓசோனில் ஏற்பட்ட ஓட்டைக்கு காரணம் குளோரோ புளோரோ கார்பன் ஆகும். ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி. கருவிகள், ஸ்ப்ரே, பெட்ரோல், டீசல், தரையைத் துடைக்கப் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள வேதியல் பொருளிலிருந்து கார்பன் வானத்தை நோக்கிச் செல்லும்போது சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களால் குளோரின் பிரிகிறது. இந்த குளோரின் ஓசோனை அடையும்பொழுது ஓசோன் படலம் ஓட்டையடைகிறது.
இதைத் தடுக்கும் வகையில் 1992-ல் மான்ட்ரீல் நகரில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டில் ஓசோனை பாதிக்கும் பொருள்களைக் குறைக்க வேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழிற்சாலை புகைகள், வாகனக் கழிவுகள், பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவற்றிலிருந்து வாயுகளைத் தாக்கும் நச்சுத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் பூமியின் வெப்பம் கூடுதலாகிவிட்டது.
தற்பொழுது ஏறியுள்ள 0.6 டிகிரி செல்சியஸ், எதிர்காலத்திலும் இதே நிலைமை நீடித்தால் 4 டிகிரி ஏறிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, 16 ஆண்டுகளுக்கு முன் ரியோ - டி - ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டபொழுதும், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
கடல் உள்புகுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நீரின் சுவையும் கெட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல் மண் வளம், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் யாவும் குறையும். நூற்றாண்டு காலம் இருந்த ஆலமரம் போன்ற பெரும் விருட்சங்கள்கூட அழிந்துவிடும்.
ஏற்கெனவே பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் உள்ள குறிப்பாக தென் மாநிலங்களில் இதுவரை பூகம்பங்கள் ஏற்படவில்லை. ஆனால் நில அதிர்வுகள் உணரப்பட்ட சம்பவங்கள் தொடர்கின்றன.
மரங்கள் வெட்டப்பட்டதால் பறவைகளின் நடமாட்டமும் குறைந்துவிட்டன. ராஜஸ்தானில் உள்ள தார்பாலைவனத்தில் ஆண்டுதோறும் 0.1 கி.மீ. அளவுக்கு அதன் பரப்பு கூடுதலாக விரிந்து வருகிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களின் இடப்பெயர்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகும். தொழிற்சாலைகளின் கழிவுகள் சரியாகச் சுத்திகரிக்கப்படாதது போன்றவை தட்பவெப்ப நிலையின் மாற்றத்திற்கு காரணங்களாகும்.
புவி வெப்பத்தால் உலகில் உள்ள பனிப் பர்வதங்கள் உருகி ஆறுகள் உற்பத்தி நின்றுவிடும். கடலுக்குச் செல்கின்ற நீர்வரத்து இருக்காது. எனவே, உலக அளவில் கடலின் மட்டம் உயரும். 2100-ல் கடல் மட்டம் 1 மீட்டர் அளவு உயரும் என்று கூறுகின்றனர். பூமி வெப்பம் 1.8 டிகிரி முதல் 4 டிகிரி அதிகரித்தால் கடல் மட்டம் மேலும் உயர்ந்து பருவகால மாற்றங்களால் சுனாமி, வறட்சி, புயல், திடீர் வெள்ளம், கனமழை, கடும் வெயில் என்று மாயாஜாலமாக காட்சிகள் அரங்கேறும். இதனால் மனித குலமே இந்த பூமிப் பந்தில் பெரும் அழிவுக்கு உள்ளாகும்.
இதைத் தடுத்தாக வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க உலக அளவில் சகலரும் பாடுபட வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால் பேரபாயம் ஏற்படும். இதில் நாடுகள், அரசியல், மதம், இனம், கலாசாரம் என்று பாராமல் அனைவரும் உலக அளவில் ஒன்றுபட வேண்டிய தருணமாகும் இது.