கட்டுரைகள்

தமிழுக்காக உயிர்துறந்த மன்னன்!

 தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்ய

தெள்ளாறு ந.பானு

 தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல்.

 கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எத்தனையோ கலம்பகங்கள் இருப்பினும் "நந்திக் கலம்பக'த்தை வெல்ல எந்தக் கலம்பகத்தாலும் இயலவில்லை. காரணம், தமிழுக்காக உயிர் துறந்த மன்னனின் தியாக வரலாறு இதில் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் இதை இயற்றியவர் பற்றிய விவரம் அறியப்படவில்லை. இதில் காதல், வீரம், நகைச்சுவை, சோகம் போன்றவை சிறப்பிக்கப்படுகின்றன.

 தெள்ளாற்றில் நந்திவர்மன் பெற்ற வெற்றிக்குப் பின்பு அந்த வெற்றியைப் புகழும் நோக்குடன் எழுதப்பட்டதே இந்த நந்திக் கலம்பகம். இதில் பல பாக்களில் தெள்ளாற்று வெற்றியே பேசப்படுகிறது. இதனால்தான் அவன், "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான்.

பகை காரணமாக இவனுடைய நெற்றிக்கண் சிவக்குமேயானால், பகைவர்களுடைய நகரம் யாவும் நெருப்பால் அழியும். அவனுடைய புருவங்கள் துடிதுடிக்கத் தொடங்குமேயானால், அவனைத் தொழ மறுத்த எதிரிகளின் இடம் துடிக்கும். ஒளிமிக்க அவனது வாளானது உறையை விட்டு வெளியே வருமானால் பகையரசர்களுடைய துணைவிமார்களின் கொங்கைகளின் மேலேயுள்ள நகைகளும் முத்து மாலைகளும் பிறவும் அறுந்து போகும். முரசொலியைப்போல சங்கும் ஒலி செய்யுமானால் அவனுடைய பகை மன்னர்களுடைய உள்ளமானது பேரதிர்ச்சியால் கதிகலங்கும். இத்தகு வீரத்திலகமான அவன் தன்னைச் சரணடைந்தவர்களுக்கு, தண்கதிர் நிலவாக தயவு காட்டுவான். புலவர்களுக்கு வாரி வழங்குவான் என இந்நூல் வழி அறிய முடிகிறது.

 நந்திக் கலம்பகம் ஏன் எழுந்தது? அது எப்படி முடிந்தது? என்ற கேள்விக்கான விடை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

பல்லவ மன்னன் தந்திவர்மனுக்குக் கதம்ப அரசன் மகள் (காமக்கிழத்தி) வயிற்றில் தோன்றியவனே நந்திவர்மன். மன்னன் இவனுடைய ஆற்றலைக் கண்டு தனக்குப்பின் இவனே அரசாள தகுந்தவன் என முடிசூட்டி, மாமன்னனாக்கி மகிழ்ந்தான்.

நாமிருக்க அண்ணனுக்கு மணிமுடியா? என பட்டத்தரசிக்குப் பிறந்த ஆண் மக்கள் நால்வர் ஆர்த்தெழுந்தனர். அவனை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயன்று முடியாமல் போகவே, வசை பாடி உயிர் இழக்கச் செய்யும் ஒரு வகைக் கலம்பகச் செய்யுளைக் கற்று, அதன்மூலம் அவனை ஒழிக்கத் திட்டமிட்டனர். நால்வரில் ஒருவன் அதைக் கற்றான். அதன்படி இக்கலம்பகம் தோன்றியது.

இதன் ஒரு பாடலை எப்படியோ கேட்ட நந்திவர்மன், அனைத்துப் பாடல்களையும் கேட்டு இன்புற விரும்பினான். அரசனின் ஆணையால் அனைத்துப் பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. வேற்று நாட்டுப் புலவனைப் போல மாறுவேடமிட்டு வந்த அவனது தம்பி, இதைப் பாட முன் வந்தான். பாடுவதற்கு முன் அவன் விதித்த நிபந்தனையாவது, "அரண்மனையில் இருந்து இடுகாடு வரை பச்சை ஓலைகளால் நூறு பந்தல்கள் அமைக்க வேண்டும்; ஒவ்வொரு பாடலைப் பாடும்போது நந்திவர்மன் அந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும்; பாடல் முடிந்தவுடன் பந்தல் எரிந்துவிடும்.

கடைசிப் பாடலைப் பாடும்போது இடுகாட்டில் விறகுகளை அடுக்கிப் பிணத்துக்குரிய அனைத்துச் சடங்குகளையும் செய்துவிட்டு, நந்திவர்மன் பிணத்தைப் போல் படுத்துக் கொண்டே பாடலைக் கேட்க வேண்டும். இறுதிப் பாடல் முடிந்ததும் விறகோடு அரசன் எரிந்து விடுவான். இதற்குச் சம்மதமானால் நான் பாடுகிறேன்' என்றான். செந்தமிழில் ஆழ்ந்த பற்றுகொண்ட நந்திவர்மன், தமிழுக்காக தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சம்மதித்தான்.

 பாடல்களைப் பாடத்தொடங்கினான் தம்பி. நந்திவர்மன் தமிழின்பத்தை அள்ளி, அள்ளிப் பருகினான். ஆனால் தம்பியின் உள்ளம் நெகிழ்ந்தது. அண்ணனைக் கொல்ல நினைத்தவன் மனம் மாறினான். ""வேண்டாம் அண்ணா, என்னை விட்டுவிடு, மேலும் பாட என் நா மறுக்கிறது. என்னை மன்னித்துவிடு'' என்று மண்டியிட்டான். ஆனால் நந்திவர்மன் அசையவில்லை. தன் உயிர் போனாலும் பரவாயில்லை இறுதிப் பாடலையும் கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வேறு வழியின்றி இறுதிப்பாடலைப் பாடினான் தம்பி. கலம்பகத்தின் இறுதிப்பாடல் கனலாக எழுந்தது. 

""வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

 மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

 கானுறு புலியை அடைந்தவுன் வீரம்

 கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

 தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

 செந்தழல் புக்கதுன் தேகம்

 நானும் என் கவியும் எவ்விடம் புகுவோம்

 நந்தியே நந்தயா பரனே!''

 கலம்பகத்தின் இறுதிப்பாடல் முடிந்தது. நந்திவர்மன் படுத்திருந்த சிதையும் எரிந்தது. தமிழைச் சுவைத்தபடியே அருந்தமிழ்க் காவலனான நந்திவர்மனும் உயிர்நீத்தான்.

 தமிழால் பலர் உயர்ந்தனர்; தமிழால் பலர் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். ஆனால் நந்திவர்மனால் தமிழ் உயர்ந்தது; இன்னும் வாழ்கின்றது என்றால் அது மிகையாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

SCROLL FOR NEXT