பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்!
அரசியல் சாணக்கியத்தனத்திலும், தேர்தல் வியூகம் வகுப்பதிலும் லாலு பிரசாத் யாதவை மண்ணைக் கவ்வ வைக்கத் தெரிந்த ஒருவர் நிச்சயமாக அசாதாரண அரசியல் தகுதி பெற்றவராகத்தானே இருக்க முடியும்? தோளோடு தோள் சேர்ந்து
அரசியல் சாணக்கியத்தனத்திலும், தேர்தல் வியூகம் வகுப்பதிலும் லாலு பிரசாத் யாதவை மண்ணைக் கவ்வ வைக்கத் தெரிந்த ஒருவர் நிச்சயமாக அசாதாரண அரசியல் தகுதி பெற்றவராகத்தானே இருக்க முடியும்? தோளோடு தோள் சேர்ந்து போராடிய இருவர் நீயா, நானா போட்டியில் களமிறங்கி இருப்பதுதான் பிகார் அரசியல் இப்போது சந்தித்து வரும் விசித்திரம். அந்த இருவர் - பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும்.
1951-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்த நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவைவிட நான்கு ஆண்டுகள் இளையவர். பொறியியல் பட்டதாரியான நிதீஷ் குமாரும், சட்டப்படிப்புப் படித்த லாலு பிரசாத் யாதவும் சந்தித்தது ஜெயப்பிரகாஷ் நாராயண் 1974-ல் அன்றைய இந்திரா அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தில்தான். அந்த மாணவர் போராட்டத்தின் முன்னணித் தள நாயகர்களாக விளங்கியவர்கள் லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான். அன்றுமுதல் பிகார் அரசியலில் இந்த மும்மூர்த்திகள்தான் முன்னிலை வகிக்கிறார்கள்.
அவசரநிலைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மேலே குறிப்பிட்ட மூவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டபோது அவர்களது நெருக்கம் மேலும் அதிகரித்தது. இந்த மூவரில் அரசியலிலும், வயதிலும் மூத்தவர் ராம்விலாஸ் பாஸ்வான்தான். ஆனாலும், இந்த மூவரணி நிதீஷ் குமார் தலைமையில்தான் இயங்கியது என்பதிலிருந்து நிதீஷ் குமாரின் அரசியல் சாணக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.
1969-லேயே சட்டப்பேரவை உறுப்பினராகிவிட்ட ராம்விலாஸ் பாஸ்வானும், அதுவரை மாணவர் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவும் 1977-ல் மக்களவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, கட்சிப் பணியில் தனது கவனத்தைச் செலுத்துவது என்று ஒதுங்கி விட்டவர் நிதீஷ் குமார். பிகாரின் ஒவ்வோர் அங்குலமும் அவருக்கு அத்துப்படி. அடுத்த எட்டு வருடங்கள், ஜனதா கட்சி மற்றும் லோகதளத்தின் தலைவராகப் பிகாரைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்த நிதீஷ் குமார் முதன்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியது 1985-ல்தான். அதுவும், சட்டப்பேரவை உறுப்பினராக!
லாலு பிரசாத் யாதவும், நிதீஷ் குமாரும், பாஸ்வானும் 1989-ல் மக்களவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, பிகாரின் மூவரணி தில்லியையும் வலம் வரத் தொடங்கியது. மூவருமே தேவிலாலின் சீடர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம்.
அடுத்த ஆண்டே பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து யார் முதல்வர் என்கிற பிரச்னை எழுந்தது. எப்படியும் தனது நண்பன் லாலுவை முதல்வராக்குவது என்று கச்சை கட்டிக்கொண்டு இறங்கியது என்னவோ நிதீஷ் குமார்தான். அதற்கு அவர் கூறிய காரணம் - இந்த முறை ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வராக வேண்டும்.
அன்றைய பிரதமர் வி.பி. சிங்கின் முதல்வர் வேட்பாளரான ராம்சுந்தர் தாûஸத் தோற்கடிக்க, நிதீஷ் குமார் நாடியது சந்திரசேகரின் துணையை. தேவிலாலின் ஆதரவாளரான லாலு வெற்றி பெறுவதற்காக சந்திரசேகரின் ஆதரவாளர் ரகுநாத் ஜா களத்தில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மும்முனைப் போட்டியில் லாலு பிரசாத் யாதவ் வெற்றி பெற்று முதல்வரானார். வேடிக்கை என்னவென்றால், முதல்வரான நாள் முதல் லாலு பிரசாத் யாதவுக்கு நிதீஷ் குமாரின் நட்பு கசந்தது. அவரை ஓரங்கட்டுவதுதான் முதல்வேலை என்று செயல்படத் தொடங்கினார்.
1989-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமார், பிகாரின் 31-வது முதலமைச்சராக 2005-ல் தேர்ந்தெடுக்கப்படும் வரை மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் என்பது மட்டுமல்ல, தேசிய அரசியலில், குறிப்பாக தில்லி அரசியல் வட்டாரங்களில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதில் குறியாக இருந்தார். அதற்குக் காரணம், அப்போது புரியவில்லை. இப்போது குழப்பமான தேர்தல் முடிவுகள் வந்தால் அதன் பயனை நிதீஷ் குமார் அனுபவிக்கக் கூடும்.
அசைக்க முடியாத சக்தியாக லாலு பிரசாத் யாதவ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார் என்று எல்லோரும் நினைத்த நேரத்தில், லாலுவின் மனக்கோட்டையை நிதீஷ் குமார் தகர்த்தது எதனால், எப்படி என்பது ஒரு சுவாரஸ்யமான சாகசம். பிற்படுத்தப்பட்டவரின் அரசு அமைய வேண்டும் என்பதற்காக பதவியில் அமர்த்திய லாலு பிரசாத் தன்னை முன்னேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், யாதவர்களின் ஆட்சியாகவும் அதை மாற்றிக் கொண்டதுதான் நிதீஷ் குமாரின் லாலு எதிர்ப்புக்குக் காரணம். கூடவே ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளும்.
ராம்விலாஸ் பாஸ்வானைப் பிரிந்து போகச் செய்து தனித்துப் போட்டியிட வைத்ததும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து உயர்ஜாதி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை ஒருங்கிணைத்ததும்தான் நிதீஷ் குமார், லாலுவின் கோட்டையைத் தகர்க்கப் பயன்படுத்திய முதல் ஆயுதம். லாலுவுக்கு செல்வாக்குச் சரிவு ஏற்பட்டுவிட்டது என்கிற தோற்றத்தை ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தி சிறுபான்மையினர் மனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது அவர் கையாண்ட இன்னொரு ராஜதந்திர யுக்தி.
இப்போது, லாலு பிரசாத் மீண்டும் ராம்விலாஸ் பாஸ்வானைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுவிட்டார் எனும்போது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி அந்தக் கூட்டணியில் இல்லாமல் பார்த்துக் கொண்டதன் பின்னணியில் இருப்பதும் நிதீஷ் குமார்தான் என்கிறார்கள். வெளியில் சிரித்தபடியே, திரைக்குப்பின் காயை நகர்த்தும் நிதீஷ் குமாரின் அசாத்திய சாமர்த்தியம், அவரது அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவை மட்டுமல்ல, தோழமைக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம்தான்.
அயோத்திப் பிரச்னை, வருண்காந்தி பிரச்னை என்று வரும்போது தனக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லாதது போலவும், தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்று வரும்போது பாரதிய ஜனதாவின் நம்பிக்கைக்குரிய தோழனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது என்பதுதான் நிதீஷ் குமாரின் மிகப்பெரிய பலம். சிறுபான்மையினர் மத்தியில், பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுத்துத் தங்களது ஆதரவைப் பெற முயலும் லாலுபிரசாத் யாதவைவிட, அவர்களின் நண்பனாக இருந்து தங்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடிய நிதீஷ் குமார் மேல் என்கிற அபிப்பிராயத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்படுத்தி இருக்கிறார் அவர்.
நிதீஷ் குமாரின் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் நிலைப்பாடு சிறுபான்மையினரை மட்டுமல்ல, காங்கிரûஸயும் கவர்ந்திருக்கிறது என்பது ஷீலாதீட்சித்தும், ராகுல் காந்தியும் அவரைப் புகழ்ந்து தள்ளுவதிலிருந்து தெரிகிறது. மக்களவையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜக அல்லாத ஒருவர் தலைமை ஏற்க வேண்டுமானால், அந்த நபர் நிதீஷ் குமாராகத்தான் இருப்பார். அவரது ஆட்சிக்கு இடதுசாரிகள்கூட ஆதரவு அளித்தால் ஆச்சரியமில்லை.
தனது உதவியால் பதவிக்கு வந்த நண்பன் தன்னை உதாசீனப்படுத்தியபோது, அதற்காகத் துளியும் வருத்தப்படவில்லை நிதீஷ் குமார். சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து, ஒரு பலமான கூட்டணியை அமைத்து லாலு பிரசாதின் அசைக்க முடியாத கோட்டையைத் தகர்த்தெறிந்து விட்டார். வி.பி. சிங்கின் அமைச்சரவையில் விவசாயத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றதுமுதல் மத்திய அமைச்சரவையில் பல துறைகளின் அமைச்சராக இருந்த ஒருவருக்குப் பிரதமர் பதவி மீது ஆசை இல்லாமல் இருக்குமா, என்ன?
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நிதீஷ் குமாருக்குச் சாதகமாக இருக்கின்றன. பாஜகவின் ஆதரவில் காங்கிரஸ் அல்லாத அரசு அமையுமானால், அதற்கு பாஜகவுக்கும் நண்பன், இடதுசாரிகளுக்கும் தோழனான நிதீஷ் குமார் பிரதமராவது என்பதுகூட சாத்தியம்தான். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என்கிற லாலு பிரசாத் யாதவின் நீண்ட நாள் கனவை நிதீஷ் குமார் நிறைவேற்றுவாரோ என்னவோ? விதி வலியது!