ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-123: கிட்டு அளித்த பேட்டி!
பிரபாகரன் எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்~ "டைம்ஸ் ஆப் இந்தியா'வின் துணை பத்திரிகைகள
பிரபாகரன் எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்~
"டைம்ஸ் ஆப் இந்தியா'வின் துணை பத்திரிகைகளில் ஒன்றான "இல்லஸ்ட்ரேடட் வீக்லி' என்ற வார இதழின் செய்தியாளர் கே.பி.சுனிலுக்கு அளித்த பேட்டி சில உண்மைகளையும், இந்திய அரசுக்கு நல்லிணக்கச் செய்திகளையும் அளித்தது.
பிரபாகரனிடம் பேட்டியொன்றுக்கு ஏற்பாடு செய்யும்படிதான் கிட்டுவிடம் கூறப்பட்டது. அதன்பேரில் கேள்விகளைக் கேட்டு வாங்கிய கிட்டு, சில நாள்கள் கழித்து பிரபாகரன் பேட்டியாக இல்லாமல் பொதுவான விடுதலைப் புலிகளின் அமைப்பு தருவதான பேட்டியாகப் பதில் அளிக்கப்பட்டிருந்தது. எனவே அந்தப் பதில்களுக்கு கிட்டு பதில் என்றே வெளியிடப்பட்டது. நீண்ட பேட்டியில் ஒரு சில கேள்விகளும் அதற்குப் பெறப்பட்ட பதிலும் வருமாறு:
Advertisement
கேள்வி: ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 28 பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் விவரங்கள்?
கிட்டு பதில்: ஜூலை 29-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சிறீலங்கா - இந்திய அரசுகளுக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் சந்திக்க விரும்பியதாலேயே எமது தலைவர் பிரபாகரன் தில்லி சென்றார். ஒப்பந்தத்தின் சாராம்சம் அவசர அவசரமாகக் காட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் இணைப்பில் அடங்கிய இந்தியாவின் பாதுகாப்பு வெளிநாட்டுக் கொள்கைகள் அடங்கிய விஷயங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இலங்கையின் இனப்பிரச்னை குறித்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள விஷயங்கள் எங்கள்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும்.
நீண்டகால நோக்கில் தந்திரோபாய ரீதியாக இந்தியா தமிழீழத்தின் நண்பன் என்னும் நோக்கிலும், எமக்கு அப்பாற்பட்ட சக்தியாக நிலைமை எம் மீது திணிக்கப்பட்டதாலும் நாம் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படுகிறோம். இது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள்படாது. இந்த ஒப்பந்தம் திம்புப் பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட எங்களின் உயிர்க் கொள்கையான நான்கு அம்ச அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏற்க முடியாதிருக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் அளித்த பேட்டி, சுதுமலையில் எமது தலைவர் அளித்த உரை, 15-8-87-இல் "இந்தியா டூடே' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி அனைத்தும் சான்று பகர்கின்றன.
ஒப்பந்தத்தின் முழுமையான அமலாக்கத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனும் நிலையில் பாரதப் பிரதமர் எமக்குச் சில உறுதிமொழிகளை அளித்தார்:
1. தமிழ் மக்கள், போராளிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
2. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாக உள்ளடக்கிய இடைக்கால அரசை ஏற்படுத்துதல்.
3. இடைக்கால அரசு
(1) அகதிகளை மீளக் குடியேற்றுதல், (2) யுத்த அழிவுகளினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் புனர்வாழ்வு அளித்தல், (3) தமிழ் போலீஸ் படையை நிர்மாணித்தல் போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் என்பனவே அவ்வுறுதிமொழிகளாகும். ஆனால் நாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கியவுடன் நடந்ததோ வேறு. பாரதப் பிரதமர் எமக்கு வாக்குறுதி தந்ததற்கு எதிர்மாறாக விளைவுகள் இடம்பெற்றன.
(அ) வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நான்கு மடங்கு வேகத்தில் நடைபெற்றன. (ஆ) அரசியல் கைதிகள் பெருந்தொகையானோர் விடுவிக்கப்படாதது. (இ) சிறீலங்கா ராணுவம் தனியார் வீடுகள், பொதுக் கட்டடங்கள், பாடசாலைகள் போன்றவைகளில் இருந்து வெளியேறாதது. (ஈ) இடைக்கால அரசு உருவாக்கப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டது. (உ) அதேவேளை சிங்கள போலீஸ் நிலையங்கள் அவசர அவசரமாக வடக்கு, கிழக்கில் ஸ்தாபிக்கப்பட்டது.
(ஊ) புனர்வாழ்வும், யுத்த அழிவு நிவாரணங்களும் சிங்கள மக்களுக்கே திட்டமிட்டு வழங்கப்பட்டது போன்ற அபாயகரமான சூழ்நிலைகளை உடனடியாகத் தடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. இந்திய அரசுக்கு 24 மணிநேர முன்னறிவித்தல் அவகாசத்துடன் 5 அம்சக் கோரிக்கைகளைக் கொண்ட திலீபனின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.
இறுதியில் தமிழ் மக்களின் எழுச்சிக்கும், திலீபனின் உயிர்த் தியாகத்திற்கும் அடிபணிந்து செப்டம்பர் 28, 1987-இல் எம்முடன் உடன்பாட்டிற்கு வந்தது.
1) தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இவ் ஒப்பந்தத்தின் அமலாக்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குதல் வேண்டும்.
2) எஞ்சியிருக்கும் ஆயுதங்களைக் கையளித்தல். (இடைக்கால அரசு ஏற்பட்டவுடன்)
3) இந்திய அரசுக்கு எதிரான எமது பிரசாரத்தை நிறுத்துதல்.
என்ற முன்நிபந்தனைகளோடு திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்று, விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைக்கால அரசு ஒன்றை நிறுவ எம்முடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் தூதுவர் ஜே.என். தீட்சித்தும், எமது தரப்பில் பிரதித் தலைவர் மாத்தையாவும் கையெழுத்திட்டனர்.
கேள்வி: கடந்த ஐந்து மாதங்களில் நடந்துள்ள விஷயங்களை, நிகழ்ச்சிகளை நீங்கள் கணிப்பது எப்படி? இந்திய ராணுவத்தின் தொகையும், தளவாடங்களும் அங்கு குவிக்கப்பட்டிருப்பது; இந்தியத் தொடர்பு சாதனங்களின் செயற்பாடுகள்?
கிட்டு: கடந்த 5 மாதங்களில் தமிழ் மக்கள் பட்ட துயரம் வேறு எந்தக் காலத்திலும் காணாத ஒன்றாகும்.
ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டதாக பொய்யைக் கூறி ஏமாற்ற இரு அரசுகளுக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கிறோம். தமிழ் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எமக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவும் எம்மை ஜனநாயகப் பாதையால் ஒடுக்க முடியாது என்பதை இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சில ராஜதந்திரிகளும், ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசும் உணர்ந்து கொண்டன. யுத்தம் ஒன்றின் மூலமே எம்மை அழிக்கலாம் என்றும் அதுவும் ஒரு சில நாட்களில் காரியத்தை முடித்து நியாயப்படுத்தலாம் என்றும் நம்பினர்.
எம்மை வலுவில் ஒரு சண்டைக்கு இழுப்பதற்காகவே பதினேழு பேரைக் கைது செய்து கொழும்புக்கு அனுப்பும் நாடகத்தை ஆடினர். எமது தன்னுரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாம் சண்டையிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். உண்மையில் நாம் இந்தியாவிற்கு எதிரான யுத்தத்திற்கு என்றுமே தயாராக இருக்காதது மாத்திரமின்றி அதை விரும்பவுமில்லை.
கனரக பீரங்கிகள், டாங்கிகளை ஏற்கெனவே திட்டமிட்டு குவித்து வைத்திருந்த அமைதிப் படை யாழ்ப்பாணக் குடா நாட்டைக் கைப்பற்ற ஒரு எதிரி நாட்டின் மீது படையெடுப்பதுபோல் முழுப் பலத்துடன் இறங்கினார்கள். தமது ஒரு கை கட்டப்பட்ட நிலையில் தாம் சண்டையிட்டதாக இந்தியத் தளபதிகள் கூறுவது தவறு. போராளிகளின் வீரமும், தியாகமும், எமது யுத்த தந்திரமும், எம் ராணுவ வேவுத் திறனும், மக்களின் எல்லையில்லாத ஆதரவும், ஒடுக்குமுறைக்கு எதிரான உண்மையான எழுச்சியும்தான் போர்முனைகளில் எமக்கு வெற்றியைக் குவித்தன.
பெருந்தொகையான ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததனால்தான் நாம் இந்திய ராணுவத்தை திணறடித்தோம் என்பதை மறுக்கின்றோம். யாழ்குடா நாட்டின் கட்டுப்பாட்டை ஒரு மாதத்தின் பின் நாம் இழந்தாலும் ராணுவ ரீதியில் எமக்கு வெற்றியான சண்டையாகவே நாம் கருதுகின்றோம். தொடர்ந்து எமது பாதுகாப்பிற்காக கொரில்லாப் போராட்டதை தொடரக்கூடிய நிலையிலும் இருக்கின்றோம்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழ் மக்கள் எம்மீது அனுதாபமும், ஆதரவும் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைத் தொல்லைப்படுத்தி, பயமுறுத்தி, நிம்மதியற்ற வாழ்க்கையின் எல்லைக்குத் தள்ளிக்கொண்டு போகின்றது. இந்திய ராணுவத்தின் பெருந்தொகையான எண்ணிக்கை எமது நாட்டு மக்களின் அன்றாடக் கலாசார வாழ்க்கையைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ராணுவச் சூழ்நிலைக்குள் வாழாத, வாழ்க்கைப்பட விரும்பாத எமது மக்கள் இந்திய ராணுவத்தை ஓர் ஆக்கிரமிப்பாளனாக உணரத் தலைப்பட்டுள்ளனர். தமது உள்ளக்குமுறல்களை அடக்கி வைத்திருக்கும் எம் மக்கள் வியட்னாமின் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியப் படைகள் தமது எண்ணிக்கைகளைக் குறைத்து பழைய நிலைக்குத் திரும்பும் நடவடிக்கைதான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தும் வாய்ப்பாகும்.
இந்தியாவின் மக்கள் தொடர்பு சாதனங்களில் இந்திய அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் கட்டுப்பட்டவை மிகவும் பாரதூரமாக எம்மீது அபாண்டங்களை அள்ளித் தெளிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் எமது நிலைப்பாடு பற்றிய விஷயத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் கேட்ட உரிமைகளைவிட அதிகப்படியான உரிமைகளை இவ் ஒப்பந்தம் கொடுத்துள்ளதாகக் கூறுவது தவறு. எமது நாட்டில் இரண்டு தினசரிப் பத்திரிகை அலுவலகங்களை பட்டப் பகலில் வெடி வைத்துத் தகர்க்க இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்திய அரசின் தொடர்பு சாதனங்களிடமிருந்து நாம் எதனை எதிர்பார்க்க முடியும்?
ஆனால் இந்தியாவின் பெரும்பாலான சுதந்திரமான பத்திரிகைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுப்பற்று எனக் கூறி உண்மையை மறைக்காமல் நேர்மையாக உள்ளதை உள்ளபடி கூற இப்பத்திரிகைகள் முயன்றுள்ளன. இது இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
நாளை: இந்தியாவின் தயவு வேண்டும்!