முகப்பு
கட்டுரைகள்

சீர்படட்டும் சிறைச் சாலைகள்!

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதிலிருந்தே, தமிழகச் சிறைகளில் இருக்கும் நிலைமைகளை ஓரளவுக்குக் கணிக்க முடிகிறது.  தமிழகத்தி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:13 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:08 PM

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதிலிருந்தே, தமிழகச் சிறைகளில் இருக்கும் நிலைமைகளை ஓரளவுக்குக் கணிக்க முடிகிறது.

 தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இதுபோன்று பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதன் பேரில் பல காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூர் சிறையில் முதல் முறையாக செல்போன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார். இதைச் சாதாரண அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.

 நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியிடம் செல்போன் இருந்ததாகக் கூறுவது உண்மை என்றும், பொய் என்றும் பட்டிமன்றமே நடக்கிறது.

 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரி வருகிறார். இந்நிலையில், அவர் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள காவலர்கள் பற்றிய விவரத்தை சிறைத்துறை கூடுதல் இயக்குநருக்கு இரு முறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

÷அதன் மீதான பழிவாங்கும் நோக்கிலேயே நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், நளினி மீது வழக்குத் தொடர்வதன் மூலம் அவரது நன்னடத்தையைக் கேள்விக்குறியாக்குவதுமே இந்நடவடிக்கையின் நோக்கம் எனப் புகார் கூறுவோர் அதிகம். அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே, நளினி இனி முன்கூட்டியே தன்னை விடுவிக்கக்கோரும் மனுவுக்கு, நீதிமன்றத்தில் ஆதரவு கிடைக்காமல் போகும் என்ற உண்மையும் இதில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

 அதே நேரத்தில், நளினியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டு  ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வந்ததை சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். அப்போதிருந்தே, பல தொலைபேசி அழைப்புகள் வெளிநாடுகளுக்கு செய்யப்பட்டிருக்கின்றன.

 இத்தனை காலமாக சிறையில் நளினியிடம் இருந்த செல்போன் விவகாரம், எப்படி சிறைக் கண்காணிப்பாளருக்குத் தெரியாமல் போனது என்ற கேள்வியும் இயற்கையாகவே எழுகிறது.

 சிறை அறையில் செல்போன் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதி கிடையாது என்பதால், வெளியிலிருந்து செல்போன் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டு, சிறைக்குள் சென்றிருக்கும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. அப்படியெனில், சிறை அலுவலர்களின் உதவியின்றி இவை நடந்தேறியிருக்க வாய்ப்பு முற்றிலும் கிடையாது.

 செல்போன் கிடைத்ததை அப்பட்டமாக ஒப்புக்கொள்ளும் அரசு, ஏன், சிறைக் காவலர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. செல்போன் பறிமுதல், நளினி மீது வழக்கு, அவரைக் கைது செய்ய ஏற்பாடு, அவர் எந்தெந்த நாடுகளுக்குப் பேசினார் என விசாரிப்பதில் ஆர்வம் காட்டும் அதே போலீஸôர், எப்படி சிறைக்குள் செல்போன் சென்றது என்பதை விசாரிக்காமல் தாமதப்படுத்துவது ஏன்? இந்தச் சம்பவத்தில் யாரைப் பலிகடா ஆக்குவது என்ற முடிவை மேற்கொள்வதற்கான கால அவகாசமோ இது என்றே தோன்றுகிறது.

 சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதி முக்கிய குற்றவாளியைக் கண்காணிக்க முடியாதபட்சத்தில், மற்ற சிறைகளில் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்தாலே அச்சத்தை ஏற்படுத்துகிறது. "சிறைக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது; அதேபோல, முக்கியக் குற்றவாளிகள் பணம் செலவு செய்தால், சிறையிலிருக்கும் மருத்துவமனைக் கட்டிலில் ஓய்வெடுக்க முடியும்' என்றெல்லாம் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  வெளியே கடும் குற்றங்களைச் செய்துவிட்டு, சிறை செல்லும் கைதிகள் திருந்தத்தான் சிறைச் சாலைகள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில், சிறைக்குள்ளும் அவர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்றால், எதற்கு சிறைச்சாலைகள்?

 வேலூர் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கணக்குக் காட்டுவது இதுவே முதல்முறையாக இருக்கலாம். ஆனால், அருகேயுள்ள ஆண்கள் சிறையிலும் இதே போல பல முறை செல்போன்களை உளவுத்துறையினர் பறிமுதல் செய்த விவகாரம், சிறைகளுக்குள்ளேயே சிறைபட்டுப்போனது.

 ஏற்கெனவே கியூ பிரிவு போலீஸôர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் சென்ற பிறகு, மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரையே அனைத்து சட்டமீறல்களும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

 சிறைக் கைதிகள் சீர்படத்தான் சிறைகளுக்கு அனுப்புகிறோம். அங்கும் நிலைமை மோசமானால், சமுதாயம் சீர்கெடத் தொடங்கும். சட்டம் ஓர் இருட்டறை என்றார் அண்ணா. சட்டம் இருட்டறையாக இருக்கட்டும்; ஏன் சிறைகளும் இருட்டறையாக இருக்க வேண்டும்?

 சிறைக்குள் கைதிகளைப் பார்க்கப்போகும் உறவினர்களிடம் காட்டும் கெடுபிடிகள், சோதனைகள், காவலர்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துச் சிறைகளிலுமே காவலர்களாகட்டும், கைதிகளாகட்டும், உள்ளே செல்ல பிரதான வாயில் ஒன்றுதான்.

 அனைத்துச் சிறைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது, நுழைவாயிலில் தானியங்கி பரிசோதனைக் கருவி அமைப்பது போன்றவற்றால் இக்குற்றங்களை ஓரளவுக்கேனும் தடுக்க முடியும். அதேபோல, சிறையின் துணைக் கண்காணிப்பாளர்களே, விஜிலென்ஸ் அதிகாரிகளாகச் செயல்பட்டு, கைதிகளிடம் சோதனை நடத்தும் போக்கை மாற்ற வேண்டும். சிறைக்கு வெளியேயிருந்து, சிறைக் கண்காணிப்பாளரின் அனுமதியின்றி, திடீரென உள்ளே நுழைந்து சோதனை நடத்தும் தனி அமைப்பு தேவை.

 சிறைகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டாலொழிய, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தடுப்பதற்கில்லை. அரசு முதலில் சரிசெய்ய வேண்டியது சிறைக் கைதிகளை அல்ல; சிறைச்சாலைகளை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.