கட்டுரைகள்

என்று தணியும் எங்கள் தாகம்?

பரந்து விரிந்த பாரத நாட்டில் வசித்து வருகிற பல கோடி மக்களும் கங்கை நீரை மிகப் புனிதமாகக் கருதுகின்றனர். பகீரதனின் முயற்சியாலும், இடையறா தவத்தாலும் ஆகாயத்தில் இருந்த கங்கை மண்ணுக்கு வந்ததாகப் புராணங்கள

அா்ஜுன் சம்பத்

பரந்து விரிந்த பாரத நாட்டில் வசித்து வருகிற பல கோடி மக்களும் கங்கை நீரை மிகப் புனிதமாகக் கருதுகின்றனர். பகீரதனின் முயற்சியாலும், இடையறா தவத்தாலும் ஆகாயத்தில் இருந்த கங்கை மண்ணுக்கு வந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

÷தென்நாட்டின் வறண்ட பகுதிகளுக்கு வளம் சேர்க்க கங்கை, காவிரி இணைப்புத் திட்டத்தை இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

÷ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான கடந்த நூற்றாண்டில் இருந்தே இத்திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால், பகீரதன்போல் யாரும் துணிந்து முயற்சி எடுக்கவில்லை.

÷நதிநீர் இணைப்புத் திட்டம் மூலமாக வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்படுகிற துன்பங்களை மாற்றி அமைக்க முடியும். எனவேதான், கடந்த வாஜ்பாய் அரசாங்கம், கங்கை, காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முன்முயற்சிகளை மேற்கொண்டது.

÷வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மாநிலங்களையும் இணைக்கக்கூடிய தங்க நாற்கரச் சாலைத் திட்டம். சாலைகளே தேசத்தின் கைரேகைகள் என்று வாஜ்பாய் குறிப்பிட்டார். அதேபோல், இந்தத் தேசத்தின் நரம்புகளைப்போல நதிகள் திகழ்கின்றன. நதிகளை இணைப்பதன் மூலம் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்படும் பேரழிவுகளைத் தடுக்க முடியும். வறட்சி காரணமாக ஏற்படும் வறுமையைப் போக்க முடியும்.

÷தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் வருங்காலப் பிரதமர் ராகுல் காந்தி, கங்கை}காவிரி இணைப்புத் திட்டம் இயற்கைக்கு முரணானது என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், இந்தியாவில் புவியியல் அமைப்பு மாறிவிடும் என்றும் கருத்துத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கங்கை}காவிரி இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என ராகுலின் கருத்தை வழிமொழிந்துள்ளார். இப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அநேகமாக கங்கை}காவிரி இணைப்புத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது என்றே கருதலாம்.

÷கங்கை இங்கே வர வேண்டும்; குமரிக்கடலைத் தொட வேண்டும் என்று இயக்கம் நடத்திய தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவரான குமரிஅனந்தன், நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை தந்து, இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நதிநீர் இணைப்புத் திட்ட ஆதரவாளர்கள் இப்போது மெüனமாக உள்ளனரே என்பதுதான் நமக்கு வியப்பை அளிக்கிறது. இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உலகின் வளர்ந்த நாடுகளில் பட்டியலில் பாரதம் இடம்பெற வேண்டுமெனில் கங்கை}காவிரி இணைப்பு மிகவும் அவசியமானதாகும்.

÷இத்திட்டம் நிறைவேறுவதற்கு சுமார் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு செய்வதன் மூலம் 10 ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பது நிபுணர்களின் கருத்து.

÷இந்தத் தொகையானது மத்திய அரசாங்கத்தின் மொத்த வரவுசெலவுத் திட்டத்தின் ஆறில் ஒரு பகுதியாகும். பொதுமக்களின் நிதி பங்களிப்பை பெற்றுக் கொள்வதன் மூலமும், தேவை ஏற்பட்டால் இதற்கென வரி விதிப்பதன் மூலமும் இந்த நிதியை நமது அரசாங்கத்தால் திரட்ட முடியும்.

÷இத்திட்டத்தை நிறைவேற்றுதன் மூலம் தேசிய மொத்த வருமானம் இருமடங்கு உயரும். ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்படும் ரூ.40 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

÷சுமார் 20 கோடி ஏக்கர் கூடுதலாகப் பாசன வசதி பெறும். ஒட்டுமொத்த தேசத்தின் குடிநீர்ப் பஞ்சம் தீர்க்கப்படும். விவசாய உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும். இதன் காரணமாக, தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருள்கள் விவசாயத்தின் மூலம் தாராளமாகக் கிடைக்கும். இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெறும். விவசாயப்  பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் ஏராளமான அன்னியச் செலாவணி ஈட்ட முடியும்.

÷இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஏராளமான நீர்மின் திட்டங்களையும் நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகும். இதன்மூலம் மின்உற்பத்தியில் நாம் தன்னிறைவடைய முடியும். இப்போதுள்ளதைவிட கூடுதலாக 90 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

÷இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் நீர்வழிப் போக்குவரத்து 14 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 40 ஆயிரம் கி.மீ. வரை உயர்வடையும். ரயில்வே, சாலைப் போக்குவரத்துக்கு இணையாக நீர்வழிப் போக்குவரத்து உருவாகும். இதன் காரணமாக, பெட்ரோல் இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டு, ரூ. 6 ஆயிரம் கோடி அன்னியச்  செலாவணி மிச்சமாகும்.

÷உலகின் பல பகுதிகளில் நதிகள் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. சீனாவில் யாங்ஸ்ட்ஸþ, ஹுவாங்கீ, பூஸýவாய், ஹாய் ஆகிய நதிகளை 50 பில்லியன் டாலர்களைச் செலவழித்து இணைத்துள்ளனர். மேற்கண்ட இணைப்பின்போது 13 இடங்களில் நீரை மேடான பகுதிக்கு ஏற்றிப் பாயவிட்டுள்ளனர்.

÷லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகள் கூட்டாக சேர்ந்து, கடந்த 1995}ம் ஆண்டு உடன்படிக்கை செய்து கொண்டு, மாகங் நதி கமிஷன் அமைத்து, மாகங் நதி நீரைக் கால்வாய்கள் வெட்டிப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மகாங்நதி 6 நாடுகள் வழியே 4,200 கி.மீ. பாய்ந்து, 3 லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்புக்கு நீர் வழங்குவதற்கு மெகாங் நதிநீர் இணைப்புத் திட்டம் வழிவகுத்துள்ளது.

÷பாரத நாட்டின் புராண காலத்தில் நதிகளை மண்ணுக்குக் கொண்டு வந்த செய்திகள் பல உண்டு. வரலாற்றுக் காலத்தில் நம்நாட்டை ஆண்ட மன்னர்கள், மக்கள் நலனுக்காக நதிகளின் பாதையை மாற்றி அமைத்த நிகழ்வுகளும் உண்டு.

÷தமிழகத்தில் பாயும் காவிரி ஆற்றின் வழித்தடம் சோழ மன்னர்களால் மக்களுக்குப்  பயன்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. கரிகாற் சோழன் கல்லணை கட்டி காவிரி நதிநீரைத் தேக்கி வைத்து தமிழகத்துக்கு வளம் சேர்த்துள்ளார். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்த நவீன காலகட்டத்தில் நதிநீர் இணைப்பு சாத்தியம் இல்லை என கூறுவது நகைப்புக்குரியது.

÷இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தேசமெங்கும் பசுமையாகும்; சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்கப்படும். சுமார் ஒரு கோடிப் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

நன்கு திட்டமிட்டு, உரிய முன்னேற்பாடு செய்து, பொதுமக்களையும் இதுவிஷயத்தில் ஈடுபடுத்தினால், கங்கை}காவிரி இணைப்புத் திட்டம் நிச்சயம் சாத்தியமாகும்.

 சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்பதெல்லாம் உண்மைக்கு மாறான தகவலாகும். எந்தவொரு மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும்போதும் இத்தகைய எதிர்ப்பு வருவது சகஜமே.

÷நதிநீர் இணைப்பு என்பது இயற்கையைச் சீர்படுத்துகிற ஓர் உன்னத முயற்சியாகும். இதில், இயற்கையை அழிப்பது அல்லது இயற்கைக்கு எதிராகச்  செயல்படுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. புவியியல் அமைப்பு மாறிவிடும் என்பதும், வனவளம் பாதிக்கப்படும் என்பதும், வனவிலங்குகள் அழிந்துவிடும் என்பதும் வெற்று மிரட்டல்களாகும்.

÷மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், புதிய வனவளங்கள் உருவாகும், அதில், வனவிலங்குகள் நிம்மதியாக வாழும். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட நீர்த்  திட்டங்கள் மூலம் நாம் இத்தகைய பலன்களை கண்கூடாக அனுபவித்து வருகிறோம்.

÷தேசத்தின் முன்னேற்றத்தை விரும்பாத சுயநலவாதிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியே ஆகவேண்டும்.

இயற்கையிலேயே நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும் நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

÷வரும் 2020}ம் ஆண்டு இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் இந்தியாவின் குடிநீர்ப்  பஞ்சம் மாறி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டு, தேசமெங்கும் வளம் கொழிக்க வேண்டும். அதற்கு கங்கை}காவிரி இணைப்புத் திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பகீரதனாக மாறிப்  பெரும் முயற்சி செய்து கங்கையை இந்தியா முழுவதும் பாயவிட வேண்டும்.

÷கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் ஓடமுடியுமானால், கங்கையும் காவிரியும் இணைந்து இந்தியாவில் பாயவும் முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT