அஸ்தமிக்கும் நேரத்திற்குள் அரிசி வருமா?
தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி. அவரையும் மறந்துவிட்டோம், அவர் கூறிய கருத்துகளும் காற்றோடு கலந்துவிட்டன. அவரும் இன்று நம்மிடையே இல்லை. அவ்வையாருக்கு நேரிட்ட
தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி. அவரையும் மறந்துவிட்டோம், அவர் கூறிய கருத்துகளும் காற்றோடு கலந்துவிட்டன. அவரும் இன்று நம்மிடையே இல்லை.
அவ்வையாருக்கு நேரிட்ட பசி மயக்கத்தால்தான், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று தமிழ்கடவுள் அவரிடம் கேட்க நேரிட்டது. நினைத்தவுடன் கவிபாடும் காளமேகப்புலவர், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் பாடம் கற்றுக்கொண்டதும் பசிமயக்கத்தால்தான்.
நல்லதங்காள் தனது பிள்ளைச்செல்வங்களை மாய்த்து, தானும் மாய்ந்து போனதும் இந்த பசிக்கொடுமையால்தான். நெசவாளர்களுக்குக் கஞ்சித்தொட்டி திறப்பதும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அவ்வாறே.
Advertisement
இவ்வாறாக எத்தனை எத்தனையோ உதாரணங்களை நம்மால் கூற இயலும். ஆயினும், நாம் கற்றுக்கொண்ட பாடம்தான் என்ன? ஒன்றுமில்லை என்ற கசப்பான உண்மைதான் பதிலாக இருக்கிறது.
கிடங்குகளில் பாழாய்ப்போகும் உணவுதானியங்களைப் பொதுமக்களுக்கு இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை உச்ச நீதிமன்றம் இடித்துரைத்து மாதங்கள் பல கடந்த பின்பும் எந்த ஒரு நடவடிக்கையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது எதைக் காட்டுகிறது? மக்களை ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்துவதற்கான மிகச்சிறந்த உதாரணம் இதுவாகத்தானே இருக்க முடியும்?
கஷ்ட ஜீவன காலத்திலும் தனது துணைவியார் அரிசியைப் புடைத்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்து ஒரு பிடியளவு எடுத்துப் பறவைகளுக்கு வீசி எறிந்துவிட்டுக் காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என்றார் பாரதியார்.
கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை எலிகளுக்கும் பூச்சிகளுக்கும் உண்ணக்கொடுத்துவிட்டு அவைகளும் எங்கள் ஜாதிதான் என்று சொல்லாமல் சொல்கின்றனரோ, இன்றைய ஆட்சியாளர்கள்?
விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. விளைபொருள்களைப் பத்திரமாகச்சேமித்துவைக்கக் கட்டுமான வசதிகளும் இல்லை. ஊழலுக்கும் பஞ்சம் இல்லை. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும் இல்லை. அப்படியென்றால் இந்தியக் குடிமகனை ஊழ்வினை உறுத்து வந்தூட்டுகிறதா?
ஆயிரக்கணக்கான ரூபாய் என்ற அளவில் ஆரம்பித்த ஊழல் லட்சம், கோடி என்று பரிணமித்து, இன்று லட்சம் கோடி ரூபாயில் வந்து நிற்கிறது.
காலவெள்ளத்தில் எத்தனையோ ஊழல்களும், விசாரணை கமிஷன்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பதென்ன? எலும்பாலும், தோலாலும் போர்த்தப்பட்ட இந்தியனின் உடம்பும், அவனது உடைந்த உள்ளமும்தானே!
அடிமைப்படுத்தி நம்மை ஆளவந்த ஆங்கிலக் கூட்டத்தில் தோன்றி, இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று, பெரும் உயிர், பொருள் சேதங்களுக்கும் ஆளாகி பெரியாறு அணையைக் கட்டி முடித்த பென்னி குக், லோகன்துரை ஆகியோரின் தியாகங்களையும், அர்ப்பணிப்பு உணர்வையும் இன்றைய ஆட்சியாளர்கள் சற்றேனும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, பொதுக்கணக்குக் குழு முன்பு ஆஜராவதா அல்லது நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு உத்தரவிடுவதா என்று ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒரு முடிவுக்கு வராமலேயே கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின் நேரம் முழுவதும் விரயம் செய்யப்பட்டு, சுமார் ரூ. 146 கோடியும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு வீணடிக்கப்பட்ட தொகையையும், இலவசங்களுக்காக ஆட்சியாளர்களால் ஒதுக்கப்படும் நிதியில் ஓரு பகுதியையும் புதியதாகத் தானியக்கிடங்கு அமைப்பதற்காகச்செலவிடப்பட்டிருந்தால் வரும் காலங்களில் கணிசமான அளவு உணவு தானியங்களை பாதுகாத்திருக்க இயலும். இந்த விவரத்தை எந்தக் குழுவுக்கு முன் முறையிடுவது?
சமீபத்தில் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை சுமார் 900 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பசி என்ற நெருப்பானது ஏழைகளின் வயிற்றினுள் பற்றி எரிகிறபோது, ஆகாரத்தால் அதை அணைப்பதுதான் ஜீவகாருண்யம். இளைத்தவன் பசித்திருக்கும்போது அவனது வயிற்றில் இலவசம் என்ற ஈரத்துண்டை போர்த்துவது பசிப்பிணிக்கு சரியானதொரு தீர்வல்ல என்பது ஆட்சியாளர்கள் அறியாத ஒன்றல்ல.
இன்னும் சில மாதங்களில் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கூட்டணிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம்.
காலமும், கோலமும் மாறலாம். அவ்வாறு மாறினால்தான் தெரியும் அஸ்தமனம் யாருக்கென்று? ஆட்சியாளர்களுக்கா? அல்லது அன்றாடங் காய்ச்சிகளுக்கா என்று? அதற்குள் கிடங்குகளில் வீணாய்போகும் அரிசி உள்ளிட்ட உணவுதானியங்கள் வந்து சேருமா?