பெண்ணுக்குத் தேவை அரசியல் சுதந்திரம்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் பெண் இருப்பாள் என்று கூறும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு வேண்டுமானால் இந்த தாரக மந்திரம் சரியாக இருக்கக்கூடும். ஆனால், அரசியல
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் பெண் இருப்பாள் என்று கூறும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு வேண்டுமானால் இந்த தாரக மந்திரம் சரியாக இருக்கக்கூடும். ஆனால், அரசியலை எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியத்தை மாற்றித்தான் கூற வேண்டும்.
அரசியலைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஆண் இருக்கிறான் என்றுதான் கூற வேண்டும். இருப்பினும், வெற்றிபெற்ற பின்னர் பறிக்கப்படும் பெண் சுதந்திரம்தான் அரசியலை விட்டு பெண்களை விலகியிருக்கச் செய்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், நகர்மன்ற உறுப்பினர், நகர்மன்றத் தலைவர், மாவட்டக்குழு உறுப்பினர் என ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட சதவிகிதம் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியலில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த ஒதுக்கீடு முறையான பலனைத் தருகிறதா என பாரம்பரியமாக அரசியலில் ஈடுபட்டு வரும் மகளிரைக் கேட்டால்கூட பதிலில்லை என்றே வரும்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கண்டிப்பாக மகளிர் வேட்பாளர்களை நிறுத்தியே ஆக வேண்டும் என்று கட்சியின் தலைமை கூறிய கட்டளையை தலைமேல் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் பெண் வேட்பாளர்களைத் தேடித்தேடி நிறுத்தியுள்ளனர்.
பல கிராமப் பகுதிகளின் வார்டுகள், நகரப் பகுதிகளின் வார்டுகள், ஒன்றிய வார்டுகள் போன்றவற்றில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் கிடைக்காத நிலையில் இதைத் தன்மானப் பிரச்னையாகக் கருதிய கட்சியின் நிர்வாகிகள் பலர் தங்கள் கட்சிகளின் செல்வாக்கைக் கட்டாயம் காட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தன் மனைவி, மகள், தாய் என இவர்களில் ஒருவரை நிறுத்தியுள்ளனர்.
படித்து முடித்து, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் அலுவலர்களும், பெண் ஆசிரியர்களும் தேர்தல் பணிக்குச் செல்லவே தயங்கி நிற்கும் இன்றைய நிலையில் கிராமப் பகுதியிலுள்ள பெண்கள் தேர்தலில் குதிக்கத் தயக்கம் காட்டுவது ஏற்கக்கூடிய ஒன்றுதான்.
ஆசிரியைகள் தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடிக்குச் சென்றால் கூடவே குடும்பமே செல்லும் நிலைபோல்தான், அரசியலில் வெற்றி பெறும் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஆண்கள் இருக்க வேண்டிய நிலை அல்லது நிர்ப்பந்தம் தமிழகத்தில் உள்ளது.
இப்படி அரசியலில் இறக்கி விடப்பட்ட பெண்களிடம், ""நீங்கள் பெயரளவுக்கு பொறுப்பில் இருங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று கூறி ஒட்டுமொத்த உள்ளாட்சி நிர்வாகத்தையும் ஆண்களே கவனிக்கும் நிலைதான் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் நிலவி வருகிறது.
ஒரு குடும்பத்தில் எவ்வாறு முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களின் கையில் உள்ளதோ அதே நிலைதான் உள்ளாட்சி அமைப்புகளிலும் நிலவி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான முடிவுகளையும் அந்த உள்ளாட்சித் தலைவியின் குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர்களே தீர்மானிக்கும் நிலையுள்ளது.
கடந்த காலங்களில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், பெயரளவுக்குதான் பெண் பிரதிநிதிகள் செயல்பட்டு வந்ததாகவும், அவர்களின் குடும்ப அங்கத்தினர்களின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும் பல இடங்களில் புகார்களும் எழுப்பப்பட்டு வந்ததை மறுக்க முடியாது.
சொல்லப்போனால் வெறும் ரப்பர் ஸ்டாம்பு போல்தான் பெண் பிரதிநிதிகள் செயல்பட்டு வந்தார்கள் என்று கூறுமளவுக்குத்தான் பலரின் செயல்பாடுகள் இருந்து வந்தன.
முதல்வர், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் பெண்கள் அமர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளை மீறி குடும்ப அங்கத்தினர்கள் செலுத்தி வரும் ஆணாதிக்கம் காரணமாக பெண்களின் செயல்பாடுகள் முடங்கிக் கிடப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும் கடந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற ஆண்கள் தொடர்ந்து தேர்தல் களத்தில் நிற்க விரும்புவதைப்போல், பெண்கள் விரும்புவதில்லை. குடும்பத்தைத் திறமையாக நிர்வகிக்கும் பெண்களால் கிராமத்தையும் நிர்வகிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் அதை விரும்பாததற்குக் காரணம், அவர்களின் கைகள் குடும்ப ஆண்களால் கட்டப்பட்டிருப்பதுதான்.
எனவே, பெண் ஆட்சியாளர்கள் (உள்ளாட்சிப் பிரதிநிதிகள்) சுதந்திரமாக செயல்பட ஆண்கள் விட்டுவிட்டால் நிச்சயம் நல்ல உள்ளாட்சி நிர்வாகத்தைப் பெண்களால் தர முடியும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் பெண்கள் தாங்களாகவே அரசியலுக்கு வரும் நிலையும் வரும். எனவே, ஆண்களே பெண்களின் வெற்றிக்குப் பின்னால் நில்லுங்கள். குறுக்கே நிற்க வேண்டாம்.