முகப்பு
கட்டுரைகள்

அரசியலில் "காலணி' கலாசாரம்

தேசத்தின் தலைநகரான தில்லியில் இப்போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் "என்ன சௌக்கியமா?' என்று நலம் விசாரிப்பதற்குப் பதிலாக "என்ன இன்றைக்கு "ஷூ' தாக்குதல் சம்பவம் ஏதாவ

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

தேசத்தின் தலைநகரான தில்லியில் இப்போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் "என்ன சௌக்கியமா?' என்று நலம் விசாரிப்பதற்குப் பதிலாக "என்ன இன்றைக்கு "ஷூ' தாக்குதல் சம்பவம் ஏதாவது இருக்கிறதா?' என்று கேட்காத குறைதான்!

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மறுபுறம் "ஷூ', செருப்பு வீச்சு சம்பவங்கள் மின்னணு, அச்சு ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகி வருகின்றன. அரசியலில் இது ஒரு புதுக் கலாசாரமாகவே உருவாகிவிட்டது போலும்!

பொதுநல அமைப்பின் தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது "ஷூ'க்களை கழற்றி வீசுவதும், தூக்கிக் காண்பித்து எதிர்ப்புத் தெரிவிப்பதும் அதிகரித்து வருகிறது. அதுவும், "ஷூ' என்பதுடன் முடிவுறாமல் கறுப்பு மையை முகத்தில் வீசுவது, கன்னத்தில் அறைவது என புதுப்புது "வீச்சு' சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

ஊழல், கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இவற்றைச் சமாளிப்பதே அரசியல்வாதிகளுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது. இது போதாதென்று, திருகு வலியாக செருப்பு வீச்சு சம்பவங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுவாக, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் பொது இடங்களில் பிடிபட்டால் அவர்கள் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்த செருப்பையோ, கையில் வைத்திருக்கும் பொருளையோ வீசி எறிவதும், தாக்குவதும் பொதுஜனங்களின் வழக்கம்.

தற்போது, அரசியல் தலைவர்கள் மீதும், பொது நல அமைப்பினர் மீதும் நிகழ்த்தப்படும் "செருப்பு வீச்சு' சம்பவங்களைப் பார்க்கும்போது அவர்கள் மீதும் அல்லவா மக்களின் அதிருப்தியைக் காட்டுகிறது?

மேலை நாட்டினரின் கலாசாரத் தாக்கம் இந்தியாவில் பரவலாகவே புகுந்து வருவது வியப்புக்குரியதல்ல. ஏற்கெனவே உடை, உணவுப் பழக்கவழக்கங்களில் வலிந்து பல விஷயங்களைத் தேடிக் கொண்டுவிட்டோம்.

இந்நிலையில், "ஷூ'க்களை வீசி எறியும் சம்பவங்களைப் பார்க்கும்போது அங்குள்ள வழக்கத்தையும் அப்படியே கடைப்பிடிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டோமா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

2008-ம் ஆண்டு டிசம்பரில் இராக்குக்குச் சென்ற அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது, எகிப்தில் செயல்படும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் இராக் நாட்டு செய்தித் தொடர்பாளர் முன்தாதர் அல்- ûஸதி தனது இரு "ஷூ'க்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கழற்றி வீசியது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.

சீனப் பிரதமர் வென் ஜியாபோ கேம்பிரிட்ஜ் பல்கலையில் பேசிக் கொண்டிருந்தபோதும் இதேபோன்று "ஷு' வீச்சு சம்பவம் நிகழ்ந்தது.

இக் கலாசாரம் இந்தியாவில் மையம் கொண்டுவிட்டதுபோல் 2009}ம் ஆண்டு, ஏப்ரலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது தைனிக் ஜாக்ரன் பத்திரிகையைச் சேர்ந்த ஜர்னைல் சிங் என்ற நிருபர் செருப்பை வீசியெறிந்தார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்புச் செய்தியானது. இவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் சுக்ராமை இச்சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்புதான் தாக்கியிருந்தார்.

ஜனவரி 14-ம் தேதி ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக தில்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது யோகா குரு பாபா ராம்தேவ் மீது இளைஞர் ஒருவர் கறுப்பு மை தெளித்தார்.

அதன் எதிரொலியாக தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகச் சுவரில் இருந்த அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி படத்தின் மீது பாபா ராம்தேவின் ஆதரவாளர் ஒருவர் கறுப்பு மையைப் பூசினார்.

இம்மாதம் 21-ம் தேதி டேராடூனில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடைக்குச் சென்றபோது சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் மீது கிஷன்லால் என்பவர் செருப்பை வீசினார்.

முத்தாய்ப்பாக, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தின்போது, செருப்பு வீசியதாக குல்திப் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். "இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது பாஜகவின் தூண்டுதல் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வியும், "பாபா ராம்தேவ் தான் இதற்குக் காரணம்' என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கும் தங்கள் பங்குக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற செருப்பு, ஷூ வீச்சுகளை சுய விளம்பரத்துக்காகச் செய்கிறார்களா? வேண்டும் என்றே செய்கிறார்களா? யாராவது தூண்டுதல் பேரில் செய்கிறார்களா? என்பது ஒருபுறம் இருக்க, இதை தொலைக்காட்சியிலோ, செய்தித் தாள்களிலோ பார்க்கும் மக்களின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றத்தை உணர்வதும் அவசியமாகிறது. தவிர, இப்பிரச்னையின் ஆழத்தையும் ஆய்ந்தறிய வேண்டும்.

முன்பெல்லாம் பொதுக்கூட்டத்திலோ, தேர்தல் பிரசாரத்திலோ முட்டை வீசுவதும், செருப்பு வீசுவதும் சின்ன, சின்ன விஷயமாகவேதான் பார்க்கப்பட்டது.

தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பொது நல அமைப்பினர் மீதே இது போன்ற சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதைப் பார்க்கும்போது இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவதாகத் தெரியவில்லை! பொது வாழ்க்கையில் ஈடுபடுவதாகக் கூறிக் கொள்வோர் மீது சாமானிய மக்களின் அதிருப்தியின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது.

ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் நோக்கம் குறித்தோ, பொதுமக்களின் அதிருப்தி பற்றியோ சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உணர்வதாகத் தெரியவில்லை. ஒருவர் மற்றவரைப் பரஸ்பரம் குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆபத்து வரும் முன் அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் உணர்ந்துகொண்டு செயல்பட்டால் சரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.