கட்டுரைகள்

முடிவு கட்டுவோம் மின் வெட்டுக்கு...

தமிழகத்தில் சுமார் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம்வரை மின் வெட்டு உள்ளது. தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

அா்ஜுன் சம்பத்

தமிழகத்தில் சுமார் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம்வரை மின் வெட்டு உள்ளது. தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் இறைப்பான், மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், வண்ணத் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி போன்ற மின் சாதனங்களுக்குப் பழகியுள்ள பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மின் வெட்டு காரணமாக தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை பெறுவதற்குக்கூட மின் சக்தி தேவைப்படுகிறது. மின்சாரம் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற வாழ்க்கை முறையே இப்போது உள்ளது.

கோபம் கொண்ட மக்கள் ஒரு ஊரில் மின்வாரிய அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மின்வெட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள இருட்டைப் பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டத் துவங்கியுள்ளனர். குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர் மின்வெட்டின் காரணமாக பலர் தொழிற்கூடங்களை மூடிவிட்டனர். சமீபத்தில் திருட்டுக் குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்பு ஒரு சிறிய பின்னலாடை தொழிற்சாலை நடத்தி வந்தவர். அவரோடு கைது செய்யப்பட்டவர்கள் அவரது ஆலையில் அவரிடம் பணிபுரிந்தவர்கள். மின்வெட்டு காரணமாக அவருக்குத் தொழில் வாய்ப்பு இல்லை. அவரும் அவரது தொழிலாளிகளும் இணைந்து சில இடங்களில் திருடிப்பிழைக்கத் துவங்கியுள்ளனர். காவல் துறை இவர்களைக் கைது செய்துள்ளது. இச்செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. சரியான நேரத்தில் சமைக்க முடிவதில்லை. எந்த நேரத்தில் மின்சாரம் போகும், வரும் என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் மின் கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதி நேரம் மின்சாரம் இல்லையே, பாதிக்கட்டணம் தானே வரவேண்டும் என்று நினைத்தால் முன்பை விட அதிக மதிப்பில் மின் கட்டண பில் வந்து எரிச்சலூட்டுகிறது.

"முந்தைய ஆட்சியே தேவலாம், வெறும் 6 மணி நேர மின் வெட்டுதான், இந்த ஆட்சி மோசம் - 14 மணி நேர மின்வெட்டாக உள்ளது' என்கிற பேச்சு பரவலாக உள்ளது.

மின்வெட்டின் காரணமாக போக்குவரத்து சிக்னல் மின்விளக்குகள் கூட எரிவது இல்லை. இதன் காரணமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இமாலயப் பணியாக உள்ளது. குழந்தைகள், நோயாளிகள் நிலை பரிதாபகரமாக உள்ளது.

இப்போதைய ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சியைக் குறை சொல்கிறார்கள்; முந்தைய ஆட்சியாளர்கள் இப்போதைய ஆட்சியாளர்களைக் குறை கூறுகின்றனர். ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாக மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்றார் தமிழக முதல்வர். மின்வெட்டு நேரம் கூடிக் கொண்டே போகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. கேட்டால் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்கிறார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கொடுத்தாலும் அதனைக் கொண்டு வருவதற்கு மின்தட வசதிகள் இல்லை என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல மின்தட வசதிகள் சரியாக உள்ளன!

முன்பெல்லாம் தொழிலாளர்கள்தான் சம்பள உயர்வு, போனஸ் ஆகிய காரணங்களுக்காக வேலை நிறுத்தம் செய்வார்கள். ஆனால் இப்போது முதலாளிகளே வேலை நிறுத்தம் செய்யும் காட்சிகளைக் காண முடிகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக மின்வாரிய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மின்வெட்டு பிரச்னை இப்போது முடியும், அப்போது முடியும் என்று அறிக்கை விடுகிறார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்யவில்லை. கையிருப்பில் இருக்கின்ற மின்சாரத்தைக்கூட அனைவருக்கும் பொதுவாகப் பகிர்ந்தளிப்பதில்லை.

மொத்தக் கையிருப்பில் உள்ள மின்சாரத்தில் 40 சதவீதம் சென்னை மாநகருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றும் மீதிதான் இதர மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவேதான் சென்னையில் 1 மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மின்வெட்டு. மற்ற பகுதியில் அதிக நேரம் மின்வெட்டு என்கின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குகின்றனர். உள்நாட்டு நிறுவனங்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடும் மின்வெட்டை அமல்படுத்தியுள்ளனர். உள்நாட்டுத் தொழில்கள் இதனால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

பெரிய தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் தயாரித்து இயங்குகிறார்கள் என நினைத்தால் இரண்டு மணிநேரம் ஜெனரேட்டர், மீதி இரண்டு மணிநேரம் மின்வாரிய அதிகாரிகளைச் சரிகட்டி மின்திருட்டில் ஈடுபடுகின்றனர் என்று பேசப்படுகிறது.

"டைடல் பார்க்' உள்ளிட்ட தொழில் நுட்பப் பூங்காக்களில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கார் தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது என்கின்றனர்.

தடையற்ற மின்வசதியும், உட்கட்டமைப்பு வசதியும் சிறப்பாக செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து மேலும் மேலும் வெளிநாட்டு கம்பெனிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டே உள்ளனர்.

தமிழக மின்வாரியத்தைச் சீர்படுத்துவார் இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. மின் வாரியத்திற்குச் சொந்தமாக தஞ்சை மாவட்டத்தில் குத்தாலம், இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் ஆகிய பகுதியில் அமைந்துள்ள எரிவாயு மின்நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்து பல மாதங்களாகின்றன.

இவற்றைச் சரிசெய்து மின் உற்பத்தி துவங்கினால் 280 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேற்கண்ட நிறுவனங்களுக்கு எரிவாயு வாங்காமலேயே, எரிவாயு சப்ளை செய்யும் "கெய்ல்' நிறுவனத்திற்கு 71 லட்ச ரூபாய் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் புரையோடிப் போயுள்ளது என்பதற்கு இது உதாரணம்.

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் முதல் அலகும், வட சென்னையில் இரண்டாவது அலகும் வள்ளூரில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் அலகும் கடந்த மே மாதமே உற்பத்திக்குத் தயாராகி பரிசோதனை செய்யப்பட்டு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட பிறகும் மின் உற்பத்தி துவங்கவில்லை என்கின்றனர்.

நெய்வேலி முதல் அலகு மின் நிலைய விரிவாக்கத்திலிருந்து சுமார் 225 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்; இதை தமிழக அரசு ஏன் கேட்டுப் பெறவில்லை? இதேபோல ஆந்திர மாநிலம் சிம்மாத்ரி அனல் மின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தையும் மத்திய அரசிடம் கேட்டுப்பெறவில்லை. இப்படி தற்போது நமக்கு வரவேண்டிய மின்சார அளவைக் கூட்டிப்பார்த்தால் 2,025 மெகா வாட் மின்சாரம் நமக்குக் கிடைக்கும். மொத்தப் பற்றாக்குறை 4,000 மெகாவாட். எனவே மேற்கண்ட விஷயங்களைச் சீர்படுத்தினாலே தமிழகத்தின் மின் வெட்டு பாதியாகக் குறையும்.

இதெல்லாம் தமிழக முதல்வருக்குத் தெரியாதா அல்லது அவருக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறதா? நிர்வாகத்திறனும் முடிவெடுக்கும் ஆற்றலும் நிரம்பப் பெற்றுள்ள தமிழக முதல்வர் இது விஷயத்தில் சறுக்குவது ஏனென்பது புரியவில்லை. தேவை ஏற்பட்டால் முதலமைச்சரே மின்வாரியத்தைத் தனது நேரடிப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பொது மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சூரிய மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரும்பான்மையான அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், உள்ளாட்சி மன்றத் தெரு விளக்குகள் எல்லாம் சூரிய மின்சக்தியில் இயங்குகின்றன. மின்பகிர்மானம், மின் உற்பத்தி ஆகியவற்றில் தமிழக அரசு, மின்மிகை மாநிலமான குஜராத்தை ஏன் பின்பற்றவில்லை?

ஆடம்பர விழாக்கள், அரசியல் கட்சி மாநாடுகள் ஆகியவற்றில் ஒளிரும் விளக்குகளுக்கு மின்சாரம் வீணடிக்கப்படுவதைத் தடுக்க ஏன் முயற்சிக்கவில்லை? மின் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை பொதுமக்களுக்கு ஏன் வழங்கவில்லை?

"குளிர்சாதனக் கருவிகள் தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சுடுநீர் தேவைப்படுபவர்கள் சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்த வேண்டும். விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கு ஒதுக்கும் தொகையை மின் உற்பத்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். மின்சாரத்தை அதிகமாக உறிஞ்சும் குண்டு பல்புகளுக்கு பதிலாகக் குறைவான மின்சாரத்தில் அதிக ஒளி வழங்கும் சி.எஃப்.எல். பல்புகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் திட்டத்தை ஏன் முழு வீச்சில் செயல்படுத்தவில்லை?

குறைந்தபட்சம் அரசு அலுவலகங்களிலாவது இத்தகைய மின் சிக்கன நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளவில்லை? பொழுது விடிந்த பிறகும் காலை 6.45 மணி முதல் காலை 7.15 வரைகூட தெரு விளக்குகளை அணைக்காத உள்ளாட்சி மன்ற, மின் வாரிய ஊழியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் ஏன் காலை நேரத்தில் இதைக் கண்காணிப்பதில்லை?

மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தும், மின் பகிர்மானத்தை ஒழுங்குபடுத்தியும் போர்க்கால நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.

தொழில் அமைப்புகள் கூறியுள்ள ஆலோசனைகளில் முக்கியமான கருத்துகளான மின் உற்பத்தி செய்வதற்கு தனியாருக்கு வாய்ப்பளித்தல், வாரம் ஒருமுறை மின் விடுமுறை கொடுத்தல், மின் பகிர்மானத்தில் பாகுபாடின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாக மின்சாரத்தைப் பகிர்ந்து வழங்குதல் ஆகியவற்றை ஏன் பரிசீலிக்கக் கூடாது?

பொதுமக்கள் மற்றும் இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக முதல்வர் நேரடியாகக் களமிறங்க வேண்டும். தமிழகத்தில் மின் வெட்டு பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT