கட்டுரைகள்

குடிநீர் கொள்ளையைத் தடுப்போம்

கடந்த சில வருடங்களாக குடிதண்ணீர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. பல நூறு கோடி ரூபாய்கள் இவ்வணிகத்தில் புழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

அா்ஜுன் சம்பத்

கடந்த சில வருடங்களாக குடிதண்ணீர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. பல நூறு கோடி ரூபாய்கள் இவ்வணிகத்தில் புழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர். புட்டிகளில் லிட்டர் கணக்கில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை கனிமச்சத்து நீர் என வாய் கூசாமல் பொய் பேசி விற்பனை செய்கின்றனர்.

வீடுகளின் குடிநீர் தேவைக்காக 25 லிட்டர் மற்றும் 50 லிட்டர் கேன்களில் மற்றும் பயணங்களின்போது ஏழை எளிய மக்கள் பயன்பெற என்று பாலிதீன் பைகளில் 100மிலி., 250 மிலி. என்றெல்லாம் குடிதண்ணீர் விற்பனை நடைபெறுகிறது.

ரயில் பயணங்களில், பேருந்து பயணங்களில், திருமண விருந்துகளில், பெரிய விழாக்கள், சிறிய விழாக்கள், கூட்டங்கள், மாநாடுகள் என எல்லா இடங்களிலும் குடிதண்ணீர் விநியோகம் என்றாலே தண்ணீர் புட்டிகள் அல்லது தண்ணீர் பைகள்தான் என்கிற நிலை.

பெரியவர்களும், நம் நலவிரும்பிகளும், சில மருத்துவர்களும்கூட "குழாய் தண்ணீரைக் குடித்து விடாதே ஆரோக்கியம் பாதிக்கும், கிணற்று நீரையோ ஆற்று நீரையோ குளத்து நீரையோ குடித்து விடாதே தொற்று வியாதி பரவிவிடும். செலவானாலும் பரவாயில்லை. மினரல் வாட்டர் வாங்கிக் குடி' என அறிவுரை சொல்கின்றனர்.

பொது இடங்களில் குடிநீர் வடிகால் வாரியம் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குழாய் தண்ணீர் குடிக்கத் தகுதியானதாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலை ஏன் ஏற்பட்டது? இதை எப்படி மாற்றி அமைக்கலாம்? இதற்குப் பின்னணியில் ஊழல் கறைபடிந்த அதிகாரிகளும், குடிதண்ணீர் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு பெருநிறுவனங்களும் சதி செய்துள்ளனரா என்பதைப் பற்றி எல்லாம் விசாரிக்க வேண்டும்.

பெருநகரங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரமும் மோசமானதாக உள்ளது. எனவே தண்ணீரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கும்படி அரசாங்கமே மக்கள் நலனுக்காகப் பிரசாரம் செய்கின்றது.

முன்பெல்லாம் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது காற்றுதான் வருகிறது. அப்படியே தண்ணீர் வந்தாலும் அழுக்கு தண்ணீர்தான் வருகிறது. சில ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலமும் அறக்கட்டளை மூலமும் குடிதண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் தூய குடிநீர் கிடைத்தது. தற்போது இந்த எந்திரங்கள் அனேகமாக பல இடங்களில் பழுதாகியே உள்ளது. சில இடங்களில் பாட்டில்கள் இருந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம் எனும் வகையில் எந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தது, தற்போது அவைகளையும் காணவில்லை.

வசதி வாய்ப்புள்ளவர்களின் வீடுகளில் அவர்கள் சொந்தச் செலவில் போர்வெல் அமைத்துக்கொண்டு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதன் காரணமாக தற்போது நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. வருங்காலத்தில் இதுவும் கிடைக்குமா என்பது சந்தேகமே. போர்வெல் அமைத்தால் மட்டும் போதாது. அதைக் குடிதண்ணீராக மாற்ற உப்பு நீக்கும் கருவி, கிருமி நீக்கும் கருவி, கடின நீரை மென்நீராக்கும் கருவி எனப் பல கருவிகளைப் பொருத்த வேண்டும். அவற்றை இயக்க மின்சாரம் வேண்டும். அதற்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றையெல்லாம் பயன்படுத்தி நல்ல குடிதண்ணீர் தயாரிக்க வேண்டும். இந்தக் கருவிகளை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கி அவற்றைப் பராமரிப்பதற்கு அந்த நிறுவனங்களிடமே வருடாந்திர ஒப்பந்தங்கள் போட்டு கட்டணங்கள் செலுத்த வேண்டும். இது ஏழை எளிய மக்களுக்குச் சாத்தியமில்லை.

உள்ளாட்சி அமைப்பு மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விநியோகிக்கப்படும் குழாய் தண்ணீரை நம்பித்தான் பெரும்பான்மையான ஏழை எளிய பொது மக்கள் உள்ளனர். தற்போது நல்ல குடிநீர் என்பது விலை கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பணத்தை தண்ணீராய் செலவு செய்யக்கூடாது என முதுமொழி உண்டு. ஆனால், குடிதண்ணீருக்கூட பணத்தைச் செலவு செய்யும் சூழ்நிலை உருவாகிவிட்டது. குடிதண்ணீருக்காக என குடும்பச் செலவுகளில் ஒரு தொகையை ஒதுக்கும் கட்டாய நிலை உள்ளது. நாம் விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் தரமாக உள்ளதா எனப் பார்த்தால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலான தண்ணீர் வியாபாரிகள் கொள்ளை லாபம் எனும் குறிக்கோளுடன் மட்டுமே செயல்படுகின்றனர். விற்பனை செய்யப்படும் தண்ணீர் தரமானதாக இல்லை.

இந்த தண்ணீர் வணிக மோசடிகளில் கிராமம் மற்றும் மாவட்ட அளவில் செயல்படும் சிறு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் என்கிற வித்தியாசம் இல்லை. இந்த தண்ணீர் வியாபாரிகள் நமது நாட்டில் ஆற்றோரங்களிலும், தண்ணீர் கிடைக்கும் பகுதிகளிலும் ராட்சத போர்வெல் அமைத்து பூமியைத் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி அதனை ஓரளவு வடிகட்டி விற்பனை செய்கின்றனர். நிலத்தடி நீரில் உள்ள கிருமிகளை நீக்க இவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் ஒட்டுமொத்த கிருமிகளையும் அழித்துவிடுகிறது, ஒட்டுமொத்த உப்புகளையும் நீக்கி விடுகிறது. மனித உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உண்டு. நோய் பரப்பும் பாக்டீரியாக்களும் உண்டு. மனித உடலுக்கு நன்மை தரும் உப்புகளும் உண்டு, தீங்கு செய்யும் உப்புகளும் உண்டு.

நமது முன்னோர் பயன்படுத்திய தண்ணீர் சுத்திகரிப்பு முறைகளிலும் தண்ணீரை வடிகட்டும் முறைகளிலும் நீரில் மாசுகள் மட்டுமே நீங்கும். தண்ணீர் உயிர் தண்ணீராக இருக்கும். குடிநீரில் நமது முன்னோர் சேர்க்கும் நன்னாரி, வெட்டிவேர், சீரகம் ஆகியவை நச்சுக்கிருமிகளை நீக்குவதோடு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வளர்க்கும். குடிதண்ணீரைச் சேமிக்கும் கலன்களான மண்பானை, தாமிர, வெங்கல, பித்தளை பாத்திரங்கள் ஆகியவை நமக்கு நன்மை செய்தன.

தற்போது உப்புகள் நீக்கியும் ஒட்டுமொத்த பாக்டீரியாக்களைக் கொன்றும் சுவை மற்றும் நிறத்திற்காக சில வேதிப்பொருட்களைச் சேர்த்தும் அழகிய பாட்டில்களில் குடிதண்ணீரை அடைத்து விற்பனை செய்கின்றனர். இந்த குடிதண்ணீர் விற்பனைக்குப் பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்படுகிறது. தற்போதைய முழுமையாக உப்பு நீக்கப்பட்ட மற்றும் கிருமி நீக்கப்பட்ட நீர் என்பது மின் கலங்களுக்கு மட்டுமே பயன்படும். மேற்படி நீரை குடிக்காதீர்கள் என்றும் எச்சரிப்பார்கள். தற்போது விற்பனை செய்யப்படும் தண்ணீரில் உயிர்ச்சத்துகள் ஏதும் இல்லை.

மலைகளில், காடுகளில், ஊற்றுக்களில், சுனைகளில் ஊறி பெருக்கெடுத்து வரும்போது நீரில் கனிமச் சத்துகள் நிரம்பி இருக்கும் நமது நாட்டில் மண்ணிலும் மலைகளிலும் நிரம்பியுள்ள கனிமங்களின் தன்மைக்கேற்பவும், மலைகளில் நிரம்பியுள்ள மூலிகைகளின் தன்மைக்கேற்பவும், ஆற்று நீர் கடந்து வரும் காடுகளின் தன்மைக்கேற்பவும் சத்து நிரம்பிய சுத்தமான, சுவையான குடிதண்ணீர் நமக்குக் கிடைத்து வந்தது.

தண்ணீர் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர் என தமிழக அரசு மலிவு விலை குடிதண்ணீர் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. மாவட்டம்தோறும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை நிறுவியும் தண்ணீரை பாட்டில்களில் அடைக்கும் கருவிகளை அமைத்தும் அதன் மூலம் ரூபாய் 10-க்கு ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் வழங்கப் போவதாக சமீபத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் குடிதண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்துவது நமது பண்பாடு ஆகும். விருந்தாளிகள் மட்டுமல்ல, வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்புகிறவர்கள்கூட முதலில் தண்ணீர்தான் குடிப்பார்கள். கேரளத்தில் வீடுகளில் சீரகம் சேர்த்து குடிநீர் தயாரித்து வழங்குவார்கள்.

வாயில்லா ஜீவராசிகளான ஆடுகள், மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் பறவைகள் தங்கள் தாகம் தணித்துக்கொள்ள தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தருமம் செய்த புண்ணிய நாடு நம் நாடு. யாத்ரிகர்கள் (பயணிகள்) பயன் பெற வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்கும் பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு.

குடிநீர் வணிகத்தில் நடைபெறும் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி மற்றும் தமிழக அரசு நிர்வாக அமைப்புகள் மூலம் தரமான குடிநீர் வீடுகளிலும், வீதிகளிலும், பொது இடங்களிலும் கிடைத்திட ஆவண செய்ய வேண்டும். தங்கள் தண்ணீர் பாட்டில்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக பொது இடங்களில் குடிநீர் எந்திரங்களைச் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்களில் சுத்தமான குடிநீர் விநியோகம் ஆகின்றதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

சில உணவகங்களில் தண்ணீர் புட்டிகள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக தரமற்ற குடிநீரை விநியோகம் செய்கின்றனர். இத்தகைய உணவகங்கள் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையற்ற குடி தண்ணீர் வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பொது இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், மக்கள் கூடும் இன்னபிற இடங்களிலும் தரமான, சுத்தமான குடிநீர் மக்களுக்குக் கிடைத்திட அரசு ஆவண செய்ய வேண்டும். இந்த தண்ணீர் தருமத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

கட்டுரையாளர்: தலைவர் - இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT