கட்டுரைகள்

மோதி மிதித்துவிடு பாப்பா...

அத்திப்பூத்தாற் போல அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்து வந்த பாலியல் பலாத்காரக் கொடுமைகள்,

ஆர். பாலாஜி

அத்திப்பூத்தாற் போல அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்து வந்த பாலியல் பலாத்காரக் கொடுமைகள், இன்று அன்றாட செய்திகளாகி, பக்கத்துக்கு பக்கம் பரவிக் கிடப்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய, ஆனால் நிதர்சனமான உண்மை.

 கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 528 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஓர் நாளேடு தெரிவிக்கும் புள்ளிவிவரம் நாம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.

 நாடென்றும், நதியென்றும் பெண்களைப் போற்றிப் புகழும் நம் நாட்டில்தான் நிலைமை இப்படி வேதனைக்குரியதாக இருக்கிறது.

 தலைநகர் தில்லியில் துவங்கி, தென் முனையாம் குமரி வரை தலைவிரித்தாடுகிறது இப் பாலியல் வன்முறைகள். இச் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் என்ன? இந்த அவலங்களைக் களைவது எப்படி எனச் சிந்தித்தால், தெளிவு பிறக்காமல் இல்லை! ஆனால் அதைச் செயல்படுத்தத்தான் யாருக்கும் துணிவு இல்லை.

 தலைநகர் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்குட்பட்டதும், மது எனும் அரக்கனின் மாயப் பிடியில் சிக்கி, மனிதத்தை இழந்த கயவர்களால்தான்.

 ஏற்கெனவே கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி எனப் பல வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்ட நிலையில், நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் ஏறி ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளம் ரயில் நிலையத்தில் இறங்கி முழுப்போதையில் மயங்கிக் கிடந்தவன், கண் விழித்தபோது, அரையாண்டுத் தேர்வெழுதச் சென்ற 12 வயது பள்ளி மாணவி அவன் கையில் சிக்கிச் சீரழிந்து, உயிரிழந்த சோகமும் நாம் அறிந்ததுதான்.

 எந்தப் பாவமும் அறியாத பள்ளிச் சிறுமிகளும், வண்ணக் கனவுகளோடு வலம் வரும் கல்லூரி மாணவியரும் வன்புணர்ச்சிக்குட்பட்டு, வாழ்விழந்து, உயிரிழந்து மக்கிப் போவதற்கு, தானும் ஒரு தாயின் வயிற்றில்தான் பிறந்தோம், தன் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்ற சிந்தனையையே இந்த காமுகர்களுக்கு எழ விடாமல் மழுங்கச் செய்வது இந்த மதுதானே?

 இதுபோல மும்பை, ஒடிசா, தில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் நிகழும் 90 சதவீத பாலியல் வன்முறைகளுக்கு மதுவே முழுமுதல் காரணமாகிறது. மதுவை ஒழிக்க எந்தவொரு அரசும் முன்வரப் போவதில்லை.

 மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் சாராயக் கடத்தலையும் சாவுகளையும் கட்டுப்படுத்த முடியாது, காவல்துறையிலும் லஞ்சம் ஊழல் பெருகிவிடும் என்பதையே எல்லா மாநில அரசுகளும் பதிலாகத் தருகின்றன.

 மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை இழக்க அவை தயாராக இல்லை.

 அப்படியெனில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதானா? வேறு வழியா இல்லை? நமக்கு நாமே திட்டம் - நம் வீட்டுப் பெண்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.

 பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளை பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே உகந்தது.

  வெளியிடங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பெண்களுக்குச் சிறு வயதிலேயே சொல்லிவைக்க வேண்டும். அச்சமில்லாமல் வளர்ப்பதாக நினைத்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளுமாறு விட்டுவிடக்கூடாது.

 இன்றைய சூழலில் ஒருவருக்கு ஆபத்து யாரால், எப்படி, எங்கிருந்து வரும் என்று கணிக்கவே முடியாது. நெருப்பு என்றால் வாய் வெந்துவிடாது.

 10 வயது முதலே பெண் குழந்தைகளைப் பக்குவமாக "சிலவற்றை'ச் சொல்லிப் புரிய வைக்கவேண்டும்.

 பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக சிறுமிகள் புகார் செய்ய வேண்டும் என்று அரசே விளம்பரப்படுத்துவதைப் பெற்றோர்கள் மறக்கக்கூடாது.

 அதேபோல் பெண்களும் தாங்கள் தினசரி செல்லும் பாதைகள் மற்றும் அங்கே நிலவும் சூழல்களை மனதில் கிரகித்து, அவற்றில் ஏதேனும் வித்தியாசமான, அபாயகரமான சூழ்நிலை நிலவினால் தங்கள் கைப்பேசி மூலம் பெற்றோருக்கோ, காவல் துறையினருக்கோ தெரியப்படுத்த வேண்டும்.

 தன்னைத் தானே காத்துக் கொள்ளும் தன்னம்பிக்கையையும், உடல் வலுவையும் பெறுவதொன்றே பாலியல் வன்முறைகளுக்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும்.

இதைத்தான் அன்றே சொன்னான் மீசைக் கவிஞன் பாரதி "மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" என்று.

 இது அன்றைய கால கட்டத்துக்குப் பொருந்தியதோ இல்லையோ, இன்றைய கால கட்டத்துக்கு மிகச் சரியாகவே பொருந்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT