இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால்தான் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், எதிர்காலத்தையும் அளிக்க முடியும் என்ற பொருளாதாரச் சூழலினால், நுனிக் கிளையில் அமர்ந்து, அடிக் கிளையை வெட்டிய கதையாக, எந்தக் குழந்தைக்காகப் பாடுபடுகிறார்களோ, அந்தக் குழந்தைகளை கவனிக்கக் கூட நேரமில்லாமல் பெற்றோர்கள் ஓடியாடிப் பொருள் தேடுகிறார்கள்.
விளைவு! அவர்களின் அஜாக்கிரதை, அலட்சியம் காரணமாக பருவ வயதைக் கூட அடையாத, பால் மணம் மாறாத குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
பெண்கள், முதியோர், குழந்தைகள், இயலாதோர் ஆகியோர் வெளியேற அவகாசம் அளித்து, பின்பு எதிரி நாட்டின் மீது போர் தொடுத்து தங்களின் வீரத்தைப் பறைசாற்றிய இந்த மற மண்ணில்தான், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தங்களின் பாலியல் வக்கிரங்களைக் கட்டவிழ்த்து விடும் காமுகர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
பலவீனமான சட்டங்களும், பாதுகாப்பற்ற சமுதாயக் கட்டமைப்பையும் கொண்ட நாட்டில் வாழும் நாம், இத்தகைய மனித மிருகங்களை முன்னதாகவே அடையாளம் காணமுடியாது. ஆனால், நம்மையே நம்பியிருக்கும் நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் கடமைதானே?
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது இயற்கையாகவே குடும்பத்தில் ஒரு பாதுகாப்பு இருந்தது. ஆனால், இன்று அத்தகைய சூழல் இல்லை. ஆனால், குறைந்தபட்சம் நம் அருகில் வாழும் அண்டை அயலாரைப் பற்றியும், அவர்களின் குணாதிசயம், பின்புலம் பற்றியும் ஓரளவுக்காவது நாம் தெரிந்துகொள்வது நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும். ஏனெனில், அனைத்துத் தவறுகளுக்கும் பின்னால் நம்முடைய அலட்சியமும் ஒரு நூலிழை காரணமாக இருக்கத்தான் செய்கிறது.
உதாரணமாக, கரூரில் சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்தைக் கூறலாம். இதுபோன்ற சம்பவங்கள் வருடத்துக்கு ஒன்றிரண்டாவது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் யாரை நாம் குற்றம் சொல்வது? அபாயகரமான இடத்தில் குழந்தைகளை விளையாட அனுமதித்த பெற்றோரையா? அல்லது அஜாக்கிரதையாய் கிணற்றைத் திறந்து போட்ட அதன் உரிமையாளரையா?
எப்படிப் பார்த்தாலும் இழப்பு என்னவோ, குழந்தையின் பெற்றோருக்குத்தானே? 20, 30 அடி பாதாளப் பள்ளத்தில், மூச்சுத் திணறி, கதறியழுது, நம் கண் முன்னே அக் குழந்தை உயிரிழப்பதற்கு என்ன காரணம், நம் அலட்சியம்தானே?
ஓர் ஆழ்துளைக் கிணற்றை அமைத்து, அதனைப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, உடனடியாக ஒரு தகர அல்லது இரும்பு மூடி கொண்டு தரையோடு ஆணியடித்து பதித்து விட்டால், இத்தகைய அநாவசிய உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம். இதற்கொன்றும் பெரிய செலவாகிவிடப் போவதில்லையே!
ஒவ்வொரு வீட்டிலும் 8, 10 என குழந்தைகள் இருந்த அந்தக் காலத்தில் கூட இப்படிபட்ட மரணங்கள் நிகழவில்லை. அப்போது நிகழ்ந்த மரணமெல்லாம் மருத்துவ வசதி குறைபாடு மற்றும் நோயால் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. குழந்தைகளை வளர்ப்பதே கடினம், அதிலும் பெண் குழந்தைகளை வளர்ப்பது மிகக் கடினம். ஏனெனில், பெண் குழந்தைகள் கருவாக உருவாகி, மண்ணில் பிறந்தது முதல் கிழப் பருவம் எய்தி மண்ணோடு மண்ணாகும்வரை உயிராபத்து தொடர்ந்தே வருகிறது.
குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல், சொத்தில் சம உரிமை, பெண் கல்வி எனப் படிப்படியாகப் போராடி பெண்கள், ஆணுக்குச் சமம் என சம உரிமை கோரும் நிலைக்கு வந்துவிட்டதாக வெளிப்படையாகத் தோன்றினாலும், பெண்களுக்கு எல்லா கட்டத்திலும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது.
குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத்தான் பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக் கூடாது என அரசு சட்டமியற்றியது. இதனை மீறும் ஆசிரியர்கள் தண்டனைக்குள்ளானார்கள். ஆனால், குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் விஷயங்களில், இத்தகைய கடுமையான சட்டங்கள் இல்லாததால்தான் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று வருணிக்கப்படும் குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாதுகாப்போடு கூடிய அரவணைப்பும்தான். அதைக்கூட அளிக்காவிடில் நாம் சமதர்ம ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமேயில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.